பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை, பரம்சோதியை,
குரவை கோத்த குழகனை, மணி
வண்ணனை, குடக்கூத்தனை,
அரவம் ஏறி அலைகடல் அமரும்
துயில்கொண்ட அண்ணலை
இரவும் நண்பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.
வானவர்கள் அனைவரும் போற்றும்படி நின்ற பரமன், சிறந்த சோதிவடிவானவன், குரவைக்கூத்தாடிய இளைஞன், மணிவண்ணன், குடக்கூத்து ஆடியவன், பாற்கடலில் பாம்பணையில் யோகத்துயில்கொள்கிற அண்ணல்… அப்பெருமானை இரவிலும் பகலிலும் விடாமல் போற்ற வேண்டும், இதை மனத்தில் வையுங்கள்.
***
பாடல் - 4
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற
மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.
‘மாயவனை உங்கள் மனத்தில் வையுங்கள்’ என்று நான் சொல்கிறேன். ஆனால், அப்பெருமானின் பெருமையை என்னைப் போன்றவர்கள் சொல்வது ஒரு பெரிய விஷயமா? அதை விடுங்கள். வானவர்களை ஆளுகின்ற இந்திரனும், நான்முகப் பிரம்மனும், சடைமுடி அண்ணலான சிவபெருமானும் அப்பெருமானின் சிறப்பை அறிந்திருக்கிறார்கள், ஆகவே, ஒவ்வொரு நாளும் அவனுடைய திருவடித்தாமரைகளைச் சிந்தித்து, போற்றித் திரிகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.