ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

நிகரில்லாத சுடர்
ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4
Updated on
1 min read

பாடல் - 3

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,
நிகர்இல் சூழ்சுடராய், இருளாய், நிலனாய்,
                                                                   விசும்பாய்ச்
சிகர மாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்திஅல்லால் இல்லை யாவர்க்கும்
                                                                  புண்ணியமே.

நகரங்களில் வாழ்பவர்கள், நாட்டுப்பகுதிகளில் வாழ்பவர்கள், அவர்களூடைய ஞானம், மூடத்தனம், சூழ்ந்திருக்கும் நிகரில்லாத சுடர், இருள், நிலம், வானம் என அனைத்தும் எம்பெருமானே, உயரமான மாடங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய ஒளிநிறைந்த புகழைப் பாடுவோம், நாம் பிழைப்பதற்கு ஏற்ற புண்ணியம் அதுவே, வேறு ஏதும்
இல்லை.

***

பாடல் - 4

புண்ணியம், பாவம், புணர்ச்சி, பிரிவு என்று
                                                                        இவையாய்,
எண்ணமாய், மறப்பாய், உண்மையாய், இன்மையாய்,
                                                                        அல்லனாய்,
திண்ணமாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொண்மின்கள் கைதவமே.

புண்ணியம், பாவம், இணைதல், பிரிதல் போன்றவையாகவும், நினைப்பதாக, மறப்பதாக, உண்மையாக, இன்மையாகவும், கர்மங்களுக்குக் கட்டுப்படாதவனாகவும் திகழ்கிறவன் எம்பெருமான், வலுவான மாடங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், அந்தக் கண்ணனின் இனிய திருவருளைக் கண்டுகொள்ளுங்கள், இது பொய்யல்ல, உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com