

பாடல் - 1
ஆரா அமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே,
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய், கண்டேன் எம்மானே.
தெவிட்டாத அமுதமாகத் திகழ்கிற எம்பெருமானே, என்னுடைய உடலானது உன்மேல் அன்புகொண்டு, நீராக அலைந்து கரையும்படி என்னை உருக்குகின்ற நெடுமாலே, சிறந்த செந்நெல் கவரி வீசுகிற, செழிப்பான நீர்வளம் கொண்ட திருக்குடந்தையிலே அழகிய திருமேனி திகழும்படி, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிறவனே, உன்னை நான் கண்டேனே.
******
பாடல் - 2
எம்மானே, என் வெள்ளை மூர்த்தி, என்னை ஆள்வானே,
எம் மா உருவும் வேண்டுமாற்றால் ஆவாய், எழில் ஏறே,
செம் மா கமலம் செழுநீர்மிசைக் கண்மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே, என் நான்
செய்கேனோ.
என் தலைவனே, தூய்மையான பெருமானே, என்னை ஆள்பவனே, விரும்பும்படி எத்தகைய சிறந்த உருவங்களையும் எடுக்கவல்லவனே, அழகிய எருதே, திருக்குடந்தையிலே, செழிப்பான நீரின்மேலே சிவந்த, பெரிய தாமரை மலர்கள் கண்களைப்போல் மலர்கின்றன, அந்தத் திருத்தலத்திலே அழகிய, தாமரைபோன்ற கண்களை மூடிக்கொண்டு துயில்கிறவனே, (உன்னைக் கண்டபின்) நான் என்ன செய்வேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.