ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

இசையோடு அவன்
ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2
Updated on
2 min read

பாடல் - 1

பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல் உயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாதொன்றும்
                                                                                இல்லை,
கலியும் கெடும், கண்டுகொள்மின், கடல்வண்ணன்
                                                                                பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி, ஆடி உழிதரக் கண்டோம்.

கடல்வண்ணனான எம்பெருமானின் பக்தர்கள் பூமியில் நிறைந்திருக்கிறார்கள், எங்கும் நடமாடி இசையோடு அவன் புகழைப் பாடி, ஆடுகிறார்கள், அதை நாம் காண்கிறோம், இதனால், உயிர்களை வருத்தும் வலிய சாபங்கள் போயின, நலிவடையச் செய்யும் நரகமும் நைந்துபோனது, எமனுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை, கலிகால தோஷமும் கெட்டது, இதைக் காணுங்கள். இனி எங்கும் நன்மை திகழட்டும், திகழட்டும், திகழட்டும்!

******

பாடல் - 2

கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கு இனியன
                                                                                  கண்டோம்,
தொண்டீர் எல்லீரும் வாரீர், தொழுது தொழுது நின்று
                                                                                 ஆர்த்தும்,
வண்டு ஆர் தண் அம் துழாயான், மாதவன் பூதங்கள்
                                                                                 மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றவே.

வண்டுகள் மொய்க்கின்ற குளிர்ந்த, அழகிய துளசிமாலையை அணிந்தவன், மாதவன், எம்பெருமான், அவனது பக்தர்கள் பூமியிலே எங்கும் இசையோடு அவன் புகழைப் பாடி ஆடித் திரிகிறார்கள், கண்ணுக்கு இனிய அந்தத் திருக்காட்சியை நாம் கண்டோம், கண்டோம், கண்டோம், தொண்டர்கள் எல்லாரும் வாருங்கள், நாமும் அவனைத் தொழுது நின்று ஆரவாரம் செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com