

பாடல் - 7
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை
உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர், மார்கண்டேயனும் கரியே,
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா, கண்ணன் அல்லால்
தெய்வம் இல்லை,
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே
இறுமினே.
நீங்கள் உங்களுடைய உள்ளத்தில் நிறுத்திவைத்திருக்கும் மற்ற தெய்வங்கள் எல்லாம் உங்களை எப்படிக் காக்கிறார்கள் தெரியுமா? எம்பெருமான் திருமாலின் அருளால்தான். இதற்கு மார்க்கண்டேயர் சாட்சி, கண்ணனைத் தவிர இன்னொரு தெய்வம் இல்லை, இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம், ஆகவே, உங்களுடைய தினசரிக் கடமைகளையெல்லாம், எம்பெருமானின் மூர்த்திக்குச் செய்கிறோம் என்கிற எண்ணத்துடனே செய்யுங்கள்.
******
பாடல் - 8
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ் உலகுக்கும் தன்
மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன்தானே,
மறுத் திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார், மேவித் தொழுது
உய்ம்மினீரே.
மார்பில் மறுவும் திருமகளும் கொண்ட எம்பெருமான் திருமால், தன்னுடைய மூர்த்தியையே பல தெய்வங்களாக்கி எல்லா உலகங்களும் தொழும்படி நிறுத்தினான், மக்கள் அந்தத் தெய்வங்களை வழிபடுகிறார்கள், செலுத்தவேண்டியவற்றைச் செலுத்தி வணங்குகிறார்கள், அத்தகைய தெய்வங்களுக்கெல்லாம் நாயகன் எம்பெருமான், அவனுடைய பக்தர்கள் அவன் புகழைப் பாடி உலகெங்கும் நிறைந்துள்ளார்கள், இவ்வுலக வாழ்க்கையின் மீது வெறுப்பின்றி, அவனை வணங்கி வாழ்கிறார்கள், நீங்களும் அவர்களுடன் இணைந்து சென்று எம்பெருமானைத் தொழுது உய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.