

பாடல் - 1
மாசு அறு சோதி, என் செய்யவாய் மணிக்குன்றத்தை,
ஆசு அறு சீலனை, ஆதிமூர்த்தியை நாடியே
பாசு அற எய்தி அறிவு இழந்து எனை நாளையம்,
ஏசு அறும் ஊரவர் கவ்வை, தோழி, என்செய்யுமே?
(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) குற்றமற்ற சோதி வடிவானவன், சிவந்த வாயைக்கொண்ட என்னுடைய மாணிக்க மலை, பிழையில்லாத ஒழுக்கம் கொண்டவன், ஆதிமூர்த்தி, எம்பெருமான், அந்தப் பெருமானை விரும்பியதால், என் உடலின் பசுமைத்தன்மை (நிறம்) நீங்கியது, அறிவு கெட்டது, இன்னும் எத்தனை நாள் இப்படி அவனைப் பிரிந்திருக்கப் போகிறேனோ! தோழி, இந்த ஊரார் என்னைப் பற்றி ஏதேதோ பேசுகிறார்கள், அந்தப் பழிச்சொற்களெல்லாம் என்னை என்ன செய்யும்?
******
பாடல் - 2
என்செய்யும் ஊரவர் கவ்வை, தோழீ, இனி நம்மை,
என் செய்ய தாமரைக்கண்ணன் என்னை நிறைகொண்டான்,
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும்கண்ணும் பயப்பு ஊர்ந்ததுவே.
தோழி, என்னுடைய செந்தாமரைக்கண்ணன் என் அடக்கத்தைக் கொள்ளைகொண்டான், அதனால், முன்பு எனக்கிருந்த செம்மையான மாமை நிறம் கெட்டது, மேனி மெலிந்தது, என்னுடைய செவ்வாயும் கரிய கண்களும் பசலை கொண்டன, இனி, இந்த ஊராரின் பழிச்சொற்கள் நம்மை என்ன செய்யும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.