ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

அலைகடலிலே பள்ளிகொள்கிற
ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8
Updated on
1 min read

பாடல் - 7

வலையுள் அகப்படுத்து என்னை நல்நெஞ்சம் கூவிக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான்தன்னைக்
கலைகொள் அகல் அல்குல் தோழி, தம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவுமாம்கொலோ? தையலார் முன்பே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) புடைவை அணிந்த, அகன்ற அல்குலையுடைய தோழியே, எம்பெருமான் என்னைத் தன் அன்பு வலையில் அகப்படுத்தினார், என்னுடைய நல்ல நெஞ்சத்தைக் கூவி அழைத்துக்கொண்டார், (என்னைப் பற்றிப் பழிச்சொல் பேசுகிற இந்தப்) பெண்கள் முன்னிலையில், அலைகடலிலே பள்ளிகொள்கிற அந்த அம்மானை, ஆழிப்பிரானை நான் கண்களால் காண வேண்டும், தலையால் வணங்க வேண்டும், அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்குமா!

******

பாடல் - 8

பேய்முலை உண்டு, சகடம் பாய்ந்து, மருது இடை
போய் முதல்சாய்த்து, புள்வாய் பிளந்து, களிறு அட்ட
தூமுறுவல் தொண்டைவாய்ப்பிரானை எந்நாள்கொலோ
நாம் உறுகின்றது, தோழீ, அன்னையர் நாணவே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) பேயாக வந்த பூதனையின் முலையைச் சுவைத்து அவளை வீழ்த்தியவன், சக்கரமாக வந்த சகடாசுரன் மீது பாய்ந்து அழித்தவன், மருதமரங்களுக்கு இடையே சென்று அவற்றை வேரோடு சாய்த்தவன், பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், குவலயாபீடம் என்கிற யானையை வென்றவன் அந்தக் கண்ணன், இத்தனையையும் செய்துவிட்டு, இயல்பாகத் தூய புன்முறுவல் செய்கிற கொவ்வைப்பழம் போன்ற வாயைக்கொண்ட பிரான், எம்பெருமான், தோழி, என்னைப் பற்றிக் குறைசொல்லும் தாய்மார்களெல்லாம் நாணமடையும்படி அந்தப் பெருமானோடு நான் சேர்வது எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com