

பாடல் 7
அதுவே வீடு, வீடுபேற்று இன்பம்
தானும் அது தேறி
எதுவேதானும் பற்று இன்றி
யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு, வீடுபேற்று இன்பம்,
தானும் அது தேறாது
எதுவே வீடு, ஏது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.
ஆன்மாவே இறைவனின் உடலாக இருக்கிறது என்ற உணர்வோடு பெறுகின்ற அந்த அனுபவமே மோட்சம்; அதனால் கிடைக்கும் இன்பமும் அதுவே என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்துவிட்டால் உலகப் பொருட்களில் பற்று நீங்கும், அவற்றின்மீது விருப்பம் நீங்கும், அந்நிலையே மோட்சமாகும்; அதுவே இன்பத்தையும் தரும், இதனை உணராமல், எது மோட்சம், எது இன்பம் என்று தேடித்தேடி அலைகிறவர்கள், அலைந்து அலைந்து களைத்துப்போக வேண்டியதுதான்.
பாடல் 8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்தாம்
போகும்போது உன்மத்தர்போல்
பித்தே ஏறி அநுராகம்
பொழியும்போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உளம் கூடக்
கூடிற்று ஆகில் நல் உறைப்பே.
ஒருவருடைய உயிர் பிரிகிற நேரத்தில், ’அடடா, இவர் இறக்கிறாரே’ என்று வீட்டில் உள்ளவர்களும் வெளியில் உள்ளவர்களும் சேர்ந்து அலறிக் கட்டி அழுவார்கள், அப்போது அவருடைய மனம் பித்துப்பிடித்ததுபோல் கலங்கும், ஆசை அதிகரிக்கும், அந்த நேரத்திலே அவருக்குப் பெருமானுடைய எண்ணம் வந்தால், உள்ளம் அவரோடு கூடினால், அதுவே நல்ல உறுதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.