

பாடல் 9
பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவு ஆர் இசைமறை வேதியர்
ஒலி வேலையின் நின்று ஒலிப்பக்
கரவு ஆர் தடம் தொறும் தாமரைக்
கயம் தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப்
புகழ் அன்றி மற்றே.
குளிர்ந்த நீரின் நிறத்தைக்கொண்ட கண்ணபிரானின் பெருமைகளை இசையோடு கலந்து பாடுகிறார்கள் வேதம் சொல்லும் வேதியர்கள், அந்த ஒலி கடலைப்போல் ஒலிக்கிறது, முதலைகள் நிறைந்த பொய்கைகளிலெல்லாம் தாமரைக் கூட்டங்கள் விளக்குகளைப்போல நிற்கின்றன, அத்தகைய செழிப்பு மிகுந்த கழனிகளால் சூழப்பட்ட திருத்தலம், திருப்புலியூர். இந்தப் பெண், இரவுபகலாக அந்தத் திருப்புலியூரின் புகழையே பேசுகிறாள், அதைத்தவிர வேறெதையும் பேசுவதில்லை.
பாடல் 10
அன்றி மற்று ஓர் உபாயம் என்?
இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்றம் மாமணி மாடமாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கித்
தென் திசைத் திலதம் புரை
குட்டநாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப்பிரான் திரு
அருளாம் இவள் நேர்பட்டதே.
இவளுடைய உடலில் அழகிய, குளிர்ந்த திருத்துழாயின் மணம் கமழ்கிறதே, அதற்கு என்ன காரணம்? குன்றுபோல் உயர்ந்த மணிமாடங்களைக்கொண்ட மாளிகைகளின் அழகிய கூட்டங்கள் நிறைந்த ஊர், தென் திசைக்குத் திலகத்தைப்போலச் சிறந்துவிளங்கும் குட்டநாட்டுத் திருப்புலியூர், அங்கே நின்ற மாயப்பிரானின் திருவருளை இவள் பெற்றிருக்கவேண்டும். அதைத்தவிர இதற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.