

பாடல் - 9
யாதும் இல்லை மிக்கு அதனில் என்று
என்று அது கருதிக்
காது செய்வான் கூதை செய்து கடைமுறை
வாழ்க்கையும் போம்,
மா துகிலின் கொடிக்கொள் மாடம்
வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை
கண்டீர் சரணே.
உலக இன்பங்களை விரும்பி, ‘இதைவிடச் சிறந்தது ஏதுமில்லை’ என்று எண்ணி அவற்றின் பின்னேயே செல்கிறவர்கள் எப்படிப்பட்டவர்கள்? சிலர், காதில் தோடு போடுவதற்காகத் துளையிடுவார்கள், பின்னர் அதைப் பெரிது செய்து பெரிது செய்து, தோடே போட இயலாத நிலைக்குச் சென்றுவிடுவார்கள். (காதைக் கெடுத்துக்கொள்வார்கள்). அதுபோல, உலக இன்பங்களையே விரும்புகிறவர்கள் கடைநிலையாகிய உலக வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்வார்கள், உயர்ந்த துணிக்கொடிகள் பறக்கும் மாடங்கள் நிறைந்த வடமதுரையிலே பிறந்த எம்பெருமான், மாலையணிந்த திருத்தோள்களையுடைய கண்ணனைவிட நமக்கு வேறு புகலிடம் இல்லை.
பாடல் - 10
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண், அது
நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப்
பிறந்தான்,
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து
உய்ம்மினோ,
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று
இல்லையே.
கண்ணனைத்தவிர நமக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த மண்ணின் பாரத்தைக் குறைப்பதற்காகவே வடமதுரையிலே பிறந்தவன் அவன், ‘என்னுடையது’ என்று நீங்கள் எதையேனும் நினைத்துக்கொண்டிருந்தால், அதைக் கண்ணனின் திருவடியிலே சேர்த்து உய்யுங்கள். உண்மையில் உங்களுடையது என்று ஏதும் இல்லை, அனைத்தும் அவனுடையவையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.