ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

Published on

பாடல் - 1

பண்டை நாளாலே நின் திரு அருளும்
பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதிவாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்,
தெள் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப்புளிக்குடிக் கிடந்தானே.

பழங்காலம் முதலே உன்னுடைய திருவருளையும், தாமரை மலரில் அமர்ந்த திருமகளின் திருவருளையும் பெற்று, உன்னுடைய ஆலயத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்கிற பாக்கியத்தைப் பல காலமாக, பல பரம்பரைகளாக பெற்றுள்ள தொண்டர்கள் நாங்கள், எம்பெருமானே, தெளிவான அலைகள் அடிக்கிற தாமிரபரணியின் கரையிலே குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருப்புளிங்குடி என்னும் திருத்தலத்திலே கிடந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பவனே, எங்களுக்கு அருள்செய்வாய், உன்னுடைய சோதித் திருவாயைத் திறந்து, உன்னுடைய தாமரைபோன்ற திருக்கண்களால் எங்களைப் பார்ப்பாய்.

பாடல் - 2

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த
அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழிவருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
பங்கயமே தலைக்கு அணியாய்
கொடிக்கொள் பொன் மதிள்சூழ் குளிர் வயல் சோலைத்
திருப்புளிங்குடிக் கிடந்தானே.

கொடிகள் நிறைந்த, அழகிய மதிளால் சூழப்பட்ட குளிர்ந்த வயல்கள், சோலைகள் நிறைந்த திருப்புளிங்குடி என்னும் திருத்தலத்திலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரியும் எம்பெருமானே, நாங்கள் பரம்பரை பரம்பரையாக உனக்குத் தொண்டு செய்கிறவர்கள், மற்ற விருப்பங்களை அகற்றி உனக்கு அடிமைகளாகக் குற்றேவல் செய்துவருகிறவர்கள், உன்னுடைய அழகிய திருவடிகளைவிட்டு நகராதவர்கள், அத்தகைய அடியவர்களாகிய எங்களுக்கு நீ அருள்செய்வாய், பூமி அளவுக்கு நிமிர்ந்து அளந்த உன்னுடைய திருவடிகளை என்றேனும் ஒருநாள் எங்கள் தலைக்கு ஏற்ற அணிகலனாகத் தந்து அருள்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com