ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

தீய வினைகள்
ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8
Updated on
1 min read


பாடல் - 7

நீள் நகரம் அதுவே மலர்ச்
சோலைகள் சூழ் திருவாறன்விளை,
நீள் நகரத்து உறைகின்ற பிரான்,
நெடுமால், கண்ணன், விண்ணவர்கோன்,
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத்
தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்
சரண் அன்றி மற்று ஒன்று இலமே.

‘சிறந்த நகரம் இதுவே’ என்னும்படியான திருத்தலம், மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருவாறன்விளை, அந்தச் சிறந்த நகரத்திலே உறைகின்ற பெருமான், நெடுமால், கண்ணன், விண்ணோர் தலைவன், வாணபுரத்தில் புகுந்து வெம்மையான போர் செய்தவன், அங்கே தன்னை எதிர்த்த முக்கண் பிரானான சிவபெருமானைத் தோற்கடித்தவன், வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தவன், அப்பெருமானின் திருவடிகளே நமக்குப் புகலிடம், வேறேதும் இல்லை.

***

பாடல் - 8

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே
என்று அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள்கழல் ஏத்திய
ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற
செழும்பொழில் சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலம்செய ஒன்றுமோ
தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.

கஜேந்திரன் என்கிற யானை, அகன்ற, பெரிய பொய்கையிலே நின்று எம்பெருமானை வணங்கியது, ‘உன்னுடைய திருவடிகளைத்தவிர எனக்கு இன்னொரு புகலிடம் இல்லை’ என அவருடைய திருவடிகளைத் துதித்தது, உடனே, அந்த யானையின் நெஞ்சத்து இடரைத் தீர்த்தார் எம்பெருமான், அத்தகைய பெருமான் சென்று இனிதாக உறைகின்ற திருநகரம், செழுமையான பொழில்களால் சூழப்பட்ட திருவாறன்விளை, அந்தத் திருத்தலத்துக்குச் சென்று வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? அப்படி வணங்கினால், தீய வினைகள் உள்ளத்தில் சேராதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com