
பாடல் - 9
‘என் திருமகள் சேர் மார்பனே’ என்னும்,
‘என்னுடை ஆவியே’ என்னும்,
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே’ என்னும்,
‘அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே’ என்னும்,
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே,
தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.
(தாய் சொல்கிறார்) என் மகள், ‘என்னுடைய திருமகள் சேரும் திருமார்பைக் கொண்டவனே’ என்கிறாள், ‘என்னுடைய உயிரே’ என்கிறாள், ‘உன்னுடைய திரு எயிற்றால் இடந்தெடுத்து நீ மணந்துகொண்ட நிலமகளின் கணவனே’ என்கிறாள், ‘அன்றைக்குப் பயம் தரும் ஏழு எருதுகளைத் தழுவி, அவற்றை வென்று நீ மணந்துகொண்ட ஆயர் குலமகளான நப்பின்னையின் அன்பனே’ என்கிறாள், தென்திசையில் உள்ள திருவரங்கத்தில் கோயில் கொண்டவனே, இவளுடைய துயரம் எப்போது/எப்படி முடியும்? எனக்குத் தெரியவில்லை.
***
பாடல் - 10
‘முடிவு இவள்தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்,
‘மூ உலகு ஆளியே’ என்னும்,
‘கடிகமழ் கொன்றைச் சடையனே’ என்னும்,
‘நான்முகக் கடவுளே’ என்னும்,
‘வடிவு உடை வானோர் தலைவனே’ என்னும்,
‘வண் திருவரங்கனே’ என்னும்,
அடி அடையாதாள்போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
(தாய் சொல்கிறார்) என் மகள், ‘எனக்கு முடிவொன்று தெரியவில்லையே’ என்கிறாள், ‘மூன்று உலகங்களை ஆள்பவனே’ என்கிறாள், ‘நறுமணம் கமழும் கொன்றை மாலையைச் சடையில் அணிந்த சிவனே’ என்கிறாள், ‘நான்கு முகங்களைக்கொண்ட கடவுளான பிரம்மனே’ என்கிறாள், ‘அழகிய வானோரின் தலைவனே’ என்கிறாள், ‘வளம் நிறைந்த திருவரங்கத்துப் பெருமானே’ என்கிறாள், எம்பெருமானுடைய திருவடிகளை அடையாதவள்போலிருந்த இவள், அப்பெருமானைப் பக்தியால் அணுகினாள், அந்த முகில்வண்ணனின் திருவடிகளை அடைந்தாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.