ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

எம்பெருமானைத் தேடுவேன்
ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read

பாடல் - 9

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்,
அன்னையர்காள், என்னைத் தேற்றவேண்டா,
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை,
கார்வண்ணன், கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ணபிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப்பேரெயில் மாநகரே.

என்னுடைய தோழிகளே, அன்னையரே, என்னைத் தேற்றவேண்டாம், நீங்கள் சொல்கிற சொல்லால் என்னுடைய துயரத்துக்கு என்ன முடிவு வந்துவிடும்? (ஏதும் வராது.) என் நெஞ்சும் இங்கே இல்லை, அதில் இருக்கவேண்டிய குணமாகிய அடக்கமும் இங்கே இல்லை, (அவை கண்ணனிடம் சென்றுவிட்டன.) மேகவண்ணன், கருநிறக் கடலால் சூழப்பட்ட உலகத்தை உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த திருநகரம், ஏர் வளம் நிறைந்த, அழகிய கழனிகள், வயல்வெளிகளால் சூழப்பட்ட மருத நிலங்களைக்கொண்ட தென் திருப்பெயில் மாநகருக்கு நான் சென்று சேர்வேன்.

***

பாடல் - 10

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்,
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்,
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன், மாயன்,
நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்வண்ணன், நேமியான், என்
நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே.

என் தோழிகளே, பல நகரங்கள், நாடுகளைக் கடந்து நான் எம்பெருமானைத் தேடுவேன், யார் என்ன நினைப்பார்களோ என்று வெட்கப்படமாட்டேன், சிகரங்களையுடைய, அழகிய, நீண்ட மாடங்கள் நிலைத்திருக்கிற தென் திருப்பேரெயிலிலே வீற்றிருக்கும் எம்பெருமான், மகர நெடுங்குழைகளைக் காதில் அணிந்தவன், மாயன், அன்றைக்கு நூறு கௌரவர்கள் மங்கும்படி அழித்த நிகரில்லாத மேகவண்ணன், சக்ராயுதத்தை ஏந்தியவன், அவன் என் நெஞ்சத்தைக் கவர்ந்துவிட்டான், பல ஊழிக்காலமாக அங்கேயே தங்கியிருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com