

பாடல் - 5
என்னுடைக் கோவலனே, என் பொல்லாக்
கருமாணிக்கமே,
உன்னுடை உந்திமலர் உலகம் அவை
மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால்
உன்னைக் கண்டுகொண்டிட்டு
என்னுடை ஆர்உயிரார் எங்ஙனேகொல்
வந்து எய்துவரே?
என்னுடைய கோபாலனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, உன்னுடைய திருவுந்தித் தாமரையிலே பிறந்த மூன்று உலகங்களிலே இருக்கும் எல்லாப் பொருட்களிலும் என்னுடைய அரிய உயிரானவர் திளைக்கிறார், இவர் (இந்த உயிர்), உன்னுடைய சோதிவெள்ளம் நிறைந்த வைகுண்டத்திலே உன்னைக் கண்டுகொண்டு எப்படி வந்து சேர்வார்?
***
பாடல் - 6
வந்து எய்தும் ஆறு அறியேன், மல்கு நீலச்
சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம்
சேர்வதுபோல்
அந்தரம்மேல் செம்பட்டோடு அடி, உந்தி, கை,
மார்பு, கண், வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே.
எம்பெருமானின் திரு அரையில் அவன் உடுத்தியுள்ள செம்பட்டுப் பீதாம்பரம் பேரழகாக இருக்கிறது, அதைக் காணும்போது, குறைவில்லாத நீலச் சுடர் மென்மேலும் வளர, சிவந்த சுடராகிய சோதிகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு மாணிக்கத்தை வணங்குவதுபோலிருக்கிறது, (நீலவண்ணம் எம்பெருமானுடையது, செஞ்சுடர்கள் பீதாம்பரத்திலிருந்து எழுபவை.) அத்துடன், எம்பெருமானின் திருவடி, திருவுந்தி, திருக்கைகள், திருமார்பு, திருக்கண்கள், திருவாய் ஆகியவையும் செஞ்சுடராக ஒளிவிடுகின்றன. திருமகள் உறையும் திருமார்பைக்கொண்ட அத்தகைய எம்பெருமானை நான் எப்படி வந்துசேர்வேன்? எனக்குத் தெரியவில்லையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.