

பாடல் - 9
படைப்பொடு கெடுப்புக் காப்பவன், பிரம
பரம்பரன், சிவபிரான் அவனே,
இடப் புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை, அவனே,
புகழ்வு இல்லை, யாவையும் தானே,
கொடைப் பெரும் புகழார், இனையர், தன் ஆனார்
கூரிய விச்சையோடு ஒழுக்கம்,
நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் எம்பெருமானே புரிகிறான், பிரம்மனாகிய உயர்ந்த இறைவனும் அவனே, சிவபிரானும் அவனே, இவர்களுக்கிடையே உள்ள திருமாலும் அவனே, எல்லா உயிர்களும் அவனே, அத்தகைய பெருமான், கொடைக்குணத்துக்காகப் பெரும் புகழ் பெற்றவர்கள், ‘இவர்கள் இப்படிப்பட்டவர்கள்’ என்று பிறரால் பாராட்டப்படுகிறவர்கள், எம்பெருமானை வழிபட்டு அவனாகவே ஒன்றிவிட்டவர்கள், கூர்மையான அறிவு, ஒழுக்கம், தினந்தோறும் எம்பெருமானைப் பூசித்தல் ஆகியவற்றையே இயல்பாகக்கொண்டவர்கள் வாழ்கிற திருச்செங்குன்றூர்ச் சிற்றாற்றில் எழுந்தருளியிருக்கிறார். அவரைப்பற்றி நாம் என்ன சொன்னாலும் அது புகழ்ச்சி ஆகாது. (அனைத்தும் நிஜமே.)
பாடல் 10
அமர்ந்த நாதனை, அவர் அவர் ஆகி
அவர்க்கு அருள் அருளும் அம்மானை,
அமர்ந்த தண் பழனம் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரையானை,
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்
தம் பதி, அவனி தேவர் வாழ்வு,
அமர்ந்த மாயோனை, முக்கண் அம்மானை,
நான்முகனை அமர்ந்தேனே.
தகுதிமிக்க நாதன், வழிபடும் பக்தர்களாகவே ஆகி, அவர்களுக்கு விருப்பமானவற்றைச் செய்து அருளும் அம்மான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு, அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிறப்பு மிகுந்த மூவாயிரம் வேதியர்கள் விரும்பிச் சேர்வதற்கு உரியவன், பூவுலகில் வாழும் தேவர்களான வைணவர்களின் வாழ்வு, அந்த மாயோனை, முக்கண் பெருமானான சிவன், நான்முகனான பிரமன் ஆகியோராகவும் திகழ்கிற பெருமானை நான் அடைந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.