ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

செழுமையான வயல்கள்
ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read


பாடல் - 9

வீற்று இடம் கொண்டு வியன்கொள் மா ஞாலத்து
இதன் உளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிரப்
புதுமலர் ஆகத்தைப் பருகச்
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
செழும் பணைத் திருப்புளிங்குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள் வல்லானே.

சேறு மிகுந்த தண்ணீரிலே இள வாளைகள் செந்நெல்லின் நடுவே துள்ளுகிற செழுமையான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடியிலே அருள்புரிபவனே, அசுரர்களுக்கு எமனாக வந்து அவர்களுடைய குலத்தை வேரோடு அறுக்கும் கொடிய வினையைச் செய்யும் படைகளைச் செலுத்தவல்லவனே, அடியவர்களாகிய நாங்கள் உன்னைப் போற்றி, கண் குளிரும்படி ஓயாமல் உன்னுடைய புதுமலர் போன்ற திருமேனியைக் கண்டு அனுபவிக்கவேண்டும், அதற்காக, உன்னுடைய பெருமை விளங்கும்படி இந்த அகன்ற, பெரிய உலகத்திலும் இருந்தருள்வாய்.

பாடல் - 10

கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
இடர் கெட, அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே, என்னுடை அமுதே,
கலிவயல் திருப்புளிங்குடியாய்,
வடிவு இணை இல்லா மலர்மகள், மற்றை
நிலமகள் பிடிக்கு மெல் அடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல், வருதல் செய்யாயே.

தீயோருக்குக் கொடிய வினைகளைச் செய்கிற படைகளைச் செலுத்தவல்லவனே, அமரர்களுடைய துன்பங்களைக் கெடுத்து, அசுரர்களுக்குத் துன்பங்களைச் செய்கிறவனே, அசுரர்களை வேகமாக அழிக்கும் நஞ்சே, என்னுடைய அமுதமே, செழுமையான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடியிலே அருள்புரிபவனே, வடிவழகிலே தனக்கு இணையாக யாருமே இல்லாத மலர்மகள், மற்றும் நிலமகள் ஆகியோர் பிடித்துவிடுகிற உன்னுடைய மென்மையான திருவடிகளைக் கொடிய வினைகளைச் செய்தவனான நானும் பிடிக்கவேண்டும், அதற்காக என்றேனும் ஒருநாள் என்னை உன்னிடம் கூவி அழைத்துக்கொள்ளவேண்டும், அல்லது, நீ இங்கே வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com