

பாடல் - 1
இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயிற் பேடைகாள்,
என் உயிர் கண்ணபிரானை நீர் வரக் கூவுகிலீர்,
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ?
(காதலி சொல்கிறாள்) பெண் குயில்களே, உங்களுக்கு இனிய உயிரான ஆண் குயில்களோடு சேர்ந்து நீங்கள் கூவுகிறீர்கள், அதைக் கேட்டு என்னுடைய உயிர் நோகிறது, ஆகவே, அவ்வாறு கூவாதீர்கள், எனக்கு உயிரான கண்ணபிரான் இங்கே வரவேண்டும் என்று நீங்கள் கூவ மறுக்கிறீர்கள், என்னுடைய உயிரைப் பறித்து அவனிடம் கொடுக்கப்பார்க்கிறீர்கள், நீங்கள் இப்படிச் செய்யலாமா?
பாடல் - 2
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ, அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்,
வித்தகன், கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்,
அத்தனை ஆம், இனி என் உயிர் அவன் கையதே.
(காதலி சொல்கிறாள்) பெண் அன்றில் பறவைகளே, நீங்களும் உங்கள் சேவல்களும் சேர்ந்து கூவி உருகுகிறீர்கள், என்னை அழிக்க நீங்கள் இந்த அளவு சிரமப்படவேண்டியதில்லை, அடடா, அந்த வித்தகன், கோவிந்தன் யாருக்கும் உண்மையானவன் இல்லைபோல, இனி என்னுடைய உயிர் அவன் கையில், அவ்வளவுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.