
நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்- சரசுவதி வேணுகோபால்; பக்.159; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை 104; )044-2536 1039.
நாட்டுப்புற இலக்கியம் பற்றிய நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலவும் வெளிவந்துள்ளன.
அவ்வரிசையில், நாட்டுப்புற இலக்கியக் கூறுகளான வாய்மொழிப் பாடல்கள், கூத்து, ஆட்டம், விளையாட்டு, பழமொழி, விடுகதைகள், கதைப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மக்கள் வாழ்வியல், பண்பாடு முதலியவற்றை சாறு பிழிந்து தந்திருக்கும் இந்நூல், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட, சில மாத, நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
நாட்டுப்புறவியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியை, நாட்டுப்புறவியலின் போக்குகள், அணுகுமுறைகள், கோட்பாடுகள், வாழ்வியல் உண்மைகள், சமுதாயச் செய்திகள் பலவற்றையும் கூறியதுடன்; நாட்டுப்புற ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வரலாற்று நிலவியல் கோட்பாடு, உளவியல் கோட்பாடு, அமைப்பியல் கோட்பாடு, குறிக்கோள் கோட்பாடு முதலிய பதினெட்டு வகையான கோட்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் நாட்டுப்புற இயலுக்கென்றே தனித் துறை இருப்பதும், அவற்றில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கம், பயிலரங்கம், நாட்டுப்புறவியல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், ஆய்வுத் தலைப்புகள், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் "நாட்டுப்புறவியல் துறை'யின் மூலம் பெருமளவில் ஆய்வு செய்யப்பட்டு வருவது, நாட்டுப்புற கல்வி குறித்த அவசியம், நாட்டுப்புறவியலை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் இந்நூல் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
தெய்வ நம்பிக்கையால் தெய்வத்தின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டுதல், குடும்ப உறவுகளைக் கட்டமைத்தல் ஆகியவற்றையும்; உடல்திறன், மனத்திறன், வாய்ப்புநிலை ஆகிய மூன்றையும் வளர்த்தெடுக்க உதவும் பழங்கால மகளிர் விளையாட்டுகள்; நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கை நிலை, விடுகதைகளின் மூலம் பண்பாட்டைக் கூறும் வழக்கம் என்பன போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.