2. கூற்றாயினவாறு - பாடல் 2

வஞ்சம் என்று தனக்கு வந்துள்ள சூலை நோயினை இங்கே அப்பர் பிரான் குறிக்கிறார்.
Published on
Updated on
2 min read

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்தறியேன்

வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட

நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்

துரந்துதல் = நீக்குதல்; கரத்தல் = மறைத்தல்.

ஏதேனும் செய்து தனது நோயினை நீக்க வேண்டும் என்று நோயாளி துடிப்பதைப்போல், எப்படியாவது, நீக்கியோ அல்லது மறைத்தோ தனது சூலை நோயினைத் இறைவன் தீர்க்க வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே விரும்புகிறார்.

சிவபிரான் தன்னை ஏற்றுக்கொண்டதாக உணர்ந்த அப்பர் பிரான், ஏற்றாய் அடிக்கே என்று இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் பாடிய அப்பர் பிரான், இந்தப் பாடலில் தனது நெஞ்சத்தை சிவபெருமான் இருப்பதற்காக ஒதுக்கியுள்ளதாக கூறுகிறார். தனது தமக்கையின் கையால் திருநீறு பெற்றபோதே பெருவாழ்வு வந்தது என்று உணர்ந்து கூறிய அப்பர் பிரானின் மனம், அப்போதே சிவபெருமானை இறைவனாக ஏற்றுக்கொள்வதற்குப் பண்பட்டுவிட்டது. அதனால்தான், தன்னை அடிமையாக சிவபெருமான் ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல் பாடலில் கூறியுள்ளார்.

வஞ்சம் என்று தனக்கு வந்துள்ள சூலை நோயினை இங்கே அப்பர் பிரான் குறிக்கிறார். எப்படி வந்தது என்று எவராலும் உணரமுடியாமல் இருப்பதாலும், வெளியே தோன்றாமல் இருப்பதாலும், வஞ்சனையாக வந்துள்ள நோய் என்று குறிப்பிடுகிறார். இத்தகைய சூலை நோயினை இதுவரை எவரும் கண்டதாகத் தான் அறிந்ததில்லை என்று கூறி, எவராலும் தீர்க்க முடியாத நோய் என்பதையும் இங்கே சிவபெருமானுக்கு உணர்த்துவதை நாம் அறியலாம்.

முதல் பாடலில் கூற்றுபோல் தன்னை சூலை நோய் வருத்துவதாகக் கூறிய அப்பர் பிரான், இங்கே நஞ்சாகி வருத்துவதாகக் கூறுகிறார். நஞ்சினையும் அமுதமாக மாற்றியவர் (ஆலகால விஷத்தை உட்கொண்ட பின்னரும் அந்தக் கொடிய விஷத்தின் தன்மையை அமுதமாக மாற்றிய) சிவபெருமான்தான், சூலை நோயின் தன்மையை மாற்றமுடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ள பாடல். சென்ற பாடலில் ஆரம்பித்த உரையாடல் இங்கும் தொடர்கிறது. கடுமையான நோயால் வாடும் நோயாளி, மருத்துவரிடம் முதலில் வேண்டுவது, எனது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று சொல்லுங்களேன் என்பதுதானே. அதுபோல் அப்பர் பெருமானும், அஞ்சேல் என்ற சொல்லை சிவபிரானது வாயிலிருந்து கேட்க ஆசைப்படுகிறார்.

அஞ்சேல் என்று சிவபிரானின் வாயினால் ஆறுதல் வார்த்தை கேட்க விரும்பும் அப்பர் பிரானின் பாடல், நமக்கு மணிவாசகரின் திருவாசகப் பாடலை (ஆசைப்பத்து பதிகம் - பத்தாவது பாடல்) நினைவுபடுத்துகிறது.

வெஞ்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு

நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணை காணேன்

பஞ்சேர் அடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்

அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

பொழிப்புரை

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எனது நெஞ்சத்தை உமக்கு உறைவிடமாக ஒதுக்கியுள்ளேன். இனிமேல் உம்மை ஒருபொழுதும் நினையாமல் இருக்கமாட்டேன். நோயின் மூல காரணத்தை எவராலும் அறியமுடியாததாகவும், இத்தகைய கொடிய நோயினை இதுவரை எவரும் அனுபவித்ததாகத் தான் கேட்டறியாததாகவும் உள்ள இந்த சூலை நோய், மிகவும் வஞ்சனையான முறையில் என்னை வந்தடைந்துள்ளது. இந்த சூலை நோய் எனது குடலினை சுருட்டி, மற்ற உள்ளுறுப்புக்களைச் செயல்படவிடாமல் கொடிய விஷம்போல் என்னை வருத்தி நலிவடையச் செய்துள்ளது. இந்த சூலை நோய் என்னை வருத்தாமல் அதனைத் துரத்தியோ, மறைத்தோ எனக்கு அருள் செய்ய வேண்டும். அஞ்சேல் என்று நீர் அடியேனுக்கு ஆறுதல் கூற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com