(தில்லை – திருத்தாண்டகம்)
பின்னணி
தில்லைச் சிற்றம்பலத்து அரனின் பெருமையைப் பல பதிகங்களில் பாடிய அப்பர் பிரானுக்கு, தான் பல வருடங்கள் சமண மதத்தைச் சார்ந்து இருந்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தற்கு வருத்தம் ஏற்பட்டது போலும். அந்த நாட்களை ஒரு கெட்ட கனவாக மறக்க நினைத்தவர், சிவபெருமானின் புகழைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்ற முடிவுக்கு வந்தார் போலும். அந்த எண்ணத்தைப் பதிகமாக வடித்து ஒவ்வொரு பாடலின் முடிவிலும் சிவபிரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று முடியும் வண்ணம் இந்தத் திருத்தாண்டகத்தை அருளியுள்ளார். இந்த பதிகத்தினை சேக்கிழார் பெரியத் திருத்தாண்டகம் என்று அழைக்கின்றார்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவனானாலும், அடியவர்களுக்கு மிகவும் எளியவன் சிவபெருமான் என்று இறைவனை அப்பர் பிரான் நமக்கு அடையாளம் காட்டியபடியால், அடியவர்கள் இந்தப் பதிகத்தினை தங்களது சிந்தையில் நிலையாக வைத்துள்ளார்கள் என்று சேக்கிழார் கூறுகின்றார். மிகவும் முக்கியமான பதிகமாகக் கருதப்பட்டு, அடியவர்கள் தங்கள் சிந்தையில் வைத்ததால், பெரிய என்ற அடைமொழியை அளித்து பெரிய திருத்தாண்டம் என்று, சேக்கிழார் அழைக்கின்றார். சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பதிகம் அனைவரும் மனப்பாடம் செய்து மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய பதிகமாகும்.
அரியானை என்று எடுத்தே அடியவர்க்கு எளியானை என்று அவர் சிந்தை
பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ்வுலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்
இந்தப் பதிகம் ஆறாம் திருமுறையின் முதல் பதிகமாகும். தில்லைச்சிற்றம்பலத்தைக் குறிப்பிடும் கீழ்க்கண்ட நான்கு பாடல்கள், அந்தந்த திருமுறையின் முதல் பாடலாக வரும் பெருமையை உடையன.
திருமுறை எண் தொடக்கச் சொற்கள்
மூன்று ஆடினாய் நறு நெய்யொடு
ஆறு அரியானை அந்தணர் தம்
ஒன்பது ஒளிவளர் விளக்கே
பன்னிரண்டு உலகெலாம் உணர்ந்து
எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் முதல் பாடலாகிய சிவபுராணம் தில்லையில் அருளப்பட்டதாக கருதப்படுகின்றது. மேற்கண்ட நான்கு பாடல்களில் நாம் ஒரு ஒற்றுமையை உணரலாம். இந்த நான்கு பாடல்களும் உயிரெழுத்துடன் தொடங்குகின்றன. தில்லைச் சிதம்பரம்தான், சைவர்களின் உயிர் மூச்சு, என்னும் கருத்தினை உணர்த்தும் வகையில், இவ்வாறு அமைந்திட, திருவருள் கூட்டியதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்ட புலிக்கால் முனிவர், மிகுந்த பற்றுகொண்டு வழிபட்ட தலம் என்பதை உணர்த்தும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்று தில்லைச் சிதம்பரம் அழைக்கப்படுகின்றது.
மத்தியந்தினர் என்ற பெயருடன் காசியில் வசித்து வந்த அந்தணர், தனது தந்தை மூலமாக தில்லையின் சிறப்பினைக் கேட்டு, தில்லை வந்தடைந்தார். தில்லை வந்த அவர், தில்லை வனத்தின் நடுவே ஒரு சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு அதனை தினமும் வழிபட்டு வந்தார். அதே சமயத்தில், ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன், சிவபெருமானின் நடனக் கோலத்தைக் காண்பதற்காக மண்ணுலகம் வந்தார். வந்தவர் தில்லையில் மத்தியந்தினரை சந்தித்தார். அவரிடம் சிவபெருமான் தாருகாவனத்தில் ஆடிய நடனத்தின் சிறப்பு பற்றி, திருமாலிடம் தான் கேட்டு அறிந்த விவரத்தைக் கூறினார். இருவரும் சிவபிரானை நோக்கித் தீவிரமாக தவம் இருந்தனர்.
சிவபெருமானை வழிபடுவதற்காக, வண்டுகள் மொய்க்காத மலர்கள் பறிக்க வசதியாக தனக்கு, புலியின் கண்களும் புலியின் பாதங்களும் வேண்டும் என்று சிவபிரானிடம் வேண்ட, சிவபிரானின் அருளால் அவ்வாறு அமைந்தமையால் மத்தியந்தினருக்கு வியாக்ரபாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான், பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் காட்சி கொடுத்து, தக்க சமயத்தில் அவர்களுக்கு தனது நடனத் திருக்கோலத்தை காட்டுவதாக வாக்களித்தார். பின்னர் காளியுடன் நடனப் போட்டியில் ஈடுபட்ட சமயத்தில், வியாக்ரபாதர், பதஞ்சலி இருவருக்கும், அந்த நடனக் காட்சியினை காணும் வாய்ப்பினை அளித்தார். சிவபெருமான் தனக்கு நடனக் காட்சி அருளியதால் மிகவும் மகிழ்ந்த வியாக்ரபாதர் தில்லையில் தங்கி, இறைவனை தொடர்ந்து வழிபட்டார்.
இவ்வாறு இறைவனின் மீது மிகுந்த பற்று கொண்டு வழிபட்டமையால், அவர் இறைவன் மீது கொண்ட பற்றினை நினைவூட்டும் வகையில், இந்தத் தலத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்று பெயர் ஏற்பட்டது. வியாக்ரபாதர் என்ற அடியவருக்கு மிகவும் எளியவனாகத் திகழ்ந்து அவருக்கு புலிக்கால் அருளி. நடனக்காட்சியும் அருளிய இறைவன் என்பதை இந்தப் பெயர் மூலம் நமக்கு நினைவூட்டும் அப்பர் பிரான், இறைவன் மீது பற்றுகொண்டு வழிபட்டால் நமக்கும் இறைவன் எளியவனாக இருப்பான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெரும்பற்றப்புலியூர் என்ற பெயரினையே அனைத்துப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார்.
பாடல் 1
அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின்
அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத்
தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக்
குலவரையை கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

அரியான் = அரியவன். தங்களது முயற்சியால் அறிந்துவிடலாம் என்று நினைப்பவர், அவர் எத்தைகைய தகுதி படைத்தவராயினும், அவர்களால் அறிய முடியாதவன் என்று பொருள். கல்விக்கு அதிபதியாக விளங்கும் பிரமனும், செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமாலும், அன்னமாகப் பறந்தும், பன்றியாக ஆழ்ந்தும் முயற்சி செய்தபோது அவர்களால் காணமுடியாத நிலையில் இருந்ததை நாம் இங்கே நினைவு கூரலாம். இறைவன் மீது நாம் வைத்துள்ள பக்தி, அன்பு என்ற கருவிகளால் மட்டும்தான் நாம் அவனை அறியமுடியும்.

அந்தணர் = தில்லைவாழ் அந்தணர்கள். பரம்பரை பரம்பரையாக, தங்களை ஆடவல்லானின் திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்ட அந்தணர்கள். கரி = சாட்சி. கரியான் = சாட்சியாக உள்ளவன். கரியான் = திருமால் (மற்றொரு பொருள்). பிறவா நாள் = இறந்த நாள். வாழாத நாள் என்பதை மங்களகரமாக, பிறவா நாள் என்று எதிர்மறையாக சொல்லுகின்றார். திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத அரியவன், மிகவும் எளிமையான் முறையில் அந்தணர்களின் சிந்தையில் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது, தேவர்களும் காணமுடியாத அரியவனாக உள்ள இறைவன் என்று நாம் மலைத்துவிடாமல், அவனிடம் பக்திகொண்டு அவனை வழிபட்டால் நமக்கு மிகவும் எளியவனாக மாறுவான் என்னும் கருத்து சொல்லப்படுவதால், இந்தப் பதிகம் அடியார்களால் மிகவும் விரும்பப்படுகின்றது என்று சேக்கிழார் கூறியுள்ளதை நாம் முன்னுரையில் கண்டோம். கனை கடல் = ஒலிக்கின்ற கடல்.

அளவிடமுடியாத பெரிய உருவத்தினனாக இருக்கும் சிவபிரான், மிகவும் நுண்ணியனாகவும் உள்ளான் என்பதை, நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே என்ற திருவாசக சொற்றொடர் உணர்த்துவது இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

பொழிப்புரை

சிவபெருமான், தங்களது முயற்சியால் கண்டுகொள்ளலாம் என்று நினைப்பவர்க்கு (அவர்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும்), மிகவும் அரியவன், பரம்பரை பரம்பரையாக, தங்களைத் தில்லை சிற்றம்பலத்து இறைவனின் திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்ட அந்தணர்களின் சிந்தையில் வசிப்பவன்; சிறப்பான வேதங்களின் உட்பொருளாக உள்ளவன், பகுத்துப் பார்க்க முடியாத அணுவினும் நுண்ணியன், தங்களது முயற்சியால் எவரும் உணரமுடியாத மெய்ப்பொருள், தேன் போலும் பால் போலும் மிகவும் இனிமையாக இருப்பவன், சுயம் பிரகாசமாகத் தானே ஒளிரும் ஒளியான்; திருமாலாகவும் பிரமனாகவும் தீயாகவும் காற்றாகவும் ஒலிக்கும் கடலாகவும், உயர்ந்த மலைகளாகவும் உடன் இருந்து செயல்படுபவன்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லையில் உறைகின்றான். அவனது புகழினைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு