ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 5

சிவபெருமானை பித்தன் என்று நால்வர் பெருமானார்கள் அனைவரும் அழைக்கின்றார்கள். அவ்வாறு அழைப்பது பெருமானுக்கு மிகவும் பிடிக்கும்போலும். நடக்கவிருந்த

Updated On :28 ஜூலை 2016, 9:43 am

பாடல் 5

பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

விளக்கம்

சிவபெருமானை பித்தன் என்று நால்வர் பெருமானார்கள் அனைவரும் அழைக்கின்றார்கள். அவ்வாறு அழைப்பது பெருமானுக்கு மிகவும் பிடிக்கும்போலும். நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து சுந்தரரை ஆட்கொண்ட பெருமானை நோக்கி, சுந்தரர் எவ்வாறு உன்னைப் புகழ்ந்து பாடும் பாடலைத் தொடங்குவது என்று கேட்டபோது, முன்னம் நீ என்னை பித்தன் என்று அழைத்தமையால் பித்தா என்று பாடலைத் தொடங்கு என்று கூறுகின்றார். ஆனால் இந்த பெயர் உண்மையில் சுந்தரரால் சூட்டப்பட்டதா என்பதை ஆராய்ந்தால், நமக்கு ஒரு உண்மை புலனாகும். சுந்தரரை ஆட்கொள்வதற்காக முதியவராக வந்த சிவபெருமான் கொண்டுவந்த ஒலையின் வாசகத்தில் பெருமானின் பெயர் வெண்ணெய்நல்லூர் பித்தன் என்று இருக்கின்றது. எனவே இந்த பெயரை, பெருமானே விரும்பி வைத்துக்கொண்ட பெயர் என்பது நமக்கு புலனாகின்றது.

எருக்கத்தம்புலியூர் பதிகத்தின் ஒரு பாடலில் (1.89.3) சம்பந்தர் பித்தா பிறைசூடி என்று பெருமானை, அழைக்கின்றார். தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தாலும், யானையையோ, குதிரையையோ வாகனமாகக் கொள்ளாமல் எருதினை வாகனமாக உடையவன் சிவபெருமான்; தான் கொண்டுள்ள வாகனத்தில் மட்டுமா மாறுபட்டு நிற்கின்றான். உடல் திறத்திலும் மிகவும் வித்தியாசமான ஒருவனாக சிவபெருமான் உள்ளான்: உடலினொரு பாதியில் பெண்ணினைக் கொண்டு, முழுதும் பெண்ணாகவும் அல்லாமல், ஆணாகவும் அல்லாமல் அலியாக விளங்கும் ஒருவனை, பித்தன் என்று அழைப்பது பொருத்தமாகத் தான் நமக்குத் தோன்றுகின்றது.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண் ஆண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என் வல்லார்க்கு அடையா வினைதானே

வாய்மூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.50.8) அப்பர் பிரான் சிவபெருமானை பித்தர் என்று கூறுகின்றார். பத்து பாடல்கள் பாடிய பின்னரும் அடைக்கப்பட்டு இருந்த மறைக்காடு தலத்தின், திருக்கோயில் கதவுகளை திறக்கமுடியாமல், பதினோராவது பாடல் மூலம் திறந்த நானும், என்னிலும் அதிகமாக தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்று பதிகத்தின் முதல் பாடல் மூலம் கோயில் கதவுகளை அடைத்த ஞானசம்பந்தரும் இருக்கும்போது, உன்னை நீ மறைத்துக்கொள்ள நினைத்தால் நீ பித்தனே என்ற பொருள்பட, பாடிய பாடல். அப்பர் பிரான் பாடியதற்கு ஏற்ப, இறைவன் தனது நடனக் கோலத்தை காட்ட, இருவரும் கண்டு மகிழ்ந்தார்கள்.

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார் இவர் பித்தரோ

அழகான உடலைக்கொண்டு, மிகவும் அழகான கண்களையும் வாயினையும் கொண்டு காணப்படும் சிவபெருமானே, நீர் தைக்கப்பட்ட கோவணத்தை அணிந்து, சுடுகாட்டில் உள்ள பேய்களோடு இணைந்து நடனம் ஆடுகின்றீரே, நீர் என்ன பித்தரா என்று சுந்தரர் கேள்வி கேட்கும் பாடல் (7.36.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. துன்ன = தைக்கப்பட்ட.

தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்.
பேயோடு ஆடலைத் தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே
பாயும் நீர்க்கு இடம் கார் கமலமும் பைந்தண் புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே

எளிதாக பிட்டு பெரும் வழிமுறைகள் பல இருக்கையில், அவற்றில் ஒன்றினைப் பின்பற்றாமல், பிட்டு வேண்டும் என்பதற்காக மண் சுமந்த பெருமானை பித்தன் என்று மணிவாசகர் கூறும் பாடல், திருக்கழுக்குன்றப் பதிகத்தில் காணப்படுகின்றது. சழக்கன் = குற்றம் உடையவன். உன்னைப் பின்பற்றாத காரணத்தால் என்னால் உன்னை அடைய முடியவில்லை. ஆயினும் எல்லையில்லாத உனது கருணை, நாயினும் தாழ்ந்த என்னை ஆட்கொள்கின்றது. எனவே தான் நீ எனக்கு கழுக்குன்றத்தில் காட்சி அளித்துள்ளாய் என்று இறைவனின் கருணையை நினைத்து மணிவாசகர் மகிழும் பாடல் இது.

பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறுநாயினும் கடையாய எம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

நடனம் ஆடுபவர் பொதுவாக, நகரத்தின் நடுவில் உள்ள பெரிய அரங்கத்தினைத் தேர்ந்து எடுப்பார்கள். அவ்வாறு செய்யாமல், காட்டினை அரங்கமாகத் தேர்ந்தெடுத்து நடனம் ஆடுபவன் பித்தனாகத்தானே இருக்கமுடியும். எனவேதான், அப்பர் பிரான் இங்கே காட்டினை அரங்கமாகக் கொண்டு நடனம் ஆடும் பித்தனே என்று அழைக்கின்றார். முத்தன் = முக்தி அருள்பவன், பாசங்களிலிருந்து இயல்பாகவே விடுபட்டு முக்தி நிலை அடைந்தவன் என்று இரண்டு பொருள்களில் எதனைக் கொண்டாலும் பொருத்தமாக உள்ளது. முளை வெண்மதி என்று இளம்பிறை குறிக்கப்படுகின்றது. சித்தன் என்பதற்கு, அடியார்களின் சித்தத்தில் இருப்பவன், எல்லாச் சித்துகளையும் செய்ய வல்லவன், அட்டமா சித்திகளை அருள்பவன் என்று பல பொருட்கள் பொருத்தமாக கூறப்படுகின்றன. அத்தன் = தகப்பன், தலைவன்.

பொழிப்புரை

நாட்டினில் உள்ள அரங்கங்களை விடுத்து, சுடுகாட்டினை அரங்கமாகத் தேர்ந்தெடுத்து நடனமாடும் பித்தனே, இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனே, முக்தி அளிக்கக் கூடிய வல்லமை பெற்றவனே, இளம்பிறையைச் சூடியவனே, அடியார்களின் சித்தத்தில் இருப்பவனே, தூய செம்பொன்னினால் வேயப்பட்ட பொன்னம்பலத்துள் நின்று நடனம் ஆடும் தலைவனே உன்னை மறந்து நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் உன்னை நான் நினைத்தவாறே இருப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.