51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 10

பக்தர்களின் நெஞ்சில் நிறைந்திருந்து
Published on
Updated on
3 min read

அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்
செங்கண் வெள்ளேறு அது ஏறும் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

சங்கங்கள் = பூத கணங்கள் முதலியன சங்குகளை எடுத்துப் பாடுதல். சோர = நிலை குலைய, தளர: பல தேவாரப் பதிகங்களில், சிவபெருமான் வேதங்களை முனிவர்களுக்கு அருளியதாக கூறப்படுகின்றது. சிவபெருமானே வேதங்களை மற்றவர்க்கு அருளியதால், மற்றவர்கள்போல் வேதங்களைக் கற்க வேண்டிய அவசியம் சிவபிரானுக்கு இல்லை. இதனை உணர்த்தும் வண்ணம், ஓதாதே வேதம் உணர்ந்தான் என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் (6.26.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மலையை அழுத்திய திருவடியால் கூற்றினை உதைத்தவன் என்று, அரக்கன் ராவணனின் வலியை அடக்கிய செயல் மற்றும் கூற்றுவனை உதைத்து சிறுவன் மார்க்கண்டேயனைக் காத்த செயல் ஆகிய இரண்டையும் அப்பர் பிரான் இந்த பாடலில் இணைத்துக் குறிப்பிடுகின்றார். அகந்தை கொண்டவரை அடக்குவது மற்றும் அடியார்களுக்கு அருள் செய்வது ஆகிய இரண்டு வேறுவேறு செயல்களைச் செய்யும் திருவடியின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. வெற்பு = மலை. அமுதம் உண்ட தேவர்கள் இறந்தார்கள் என்றும் நஞ்சினை உண்ட சிவபெருமான், என்றும் இறவாதவனாய் உள்ளான் என்று நகைச்சுவையாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கடலின் நடுவில் வடவாக்னி உள்ளது என்று புராணங்களில் கூறப்படுகின்றது. நீரும் நெருப்பும் வேறு வேறு தன்மை கொண்டவை. நீர் நெருப்பினை அணைக்கும். நெருப்பு நீரினை வற்றச் செய்யும். ஆனால் வடவாக்னியை கடல்நீர் அணைப்பதுமில்லை: வடவாக்கினியும் கடல்நீரினை முற்றும் ஆவியாக மாற்றுவதில்லை. இறைவனே வடவாக்கினியாக இருப்பதால், நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருக்க முடிகின்றது. கடல்நீர் குறிப்பிட்ட அளவினைத் தாண்டாமல் செயல்படுகின்றது என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. நீரகத்தே அழலானான் என்று வடவாக்னியாக இறைவன் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

வெற்புறுத்திய திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி
            மின்னின் ஒளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத்து ஒருவன் தன்னை ஓதாதே வேதம்
                உணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல் நஞ்சம் உண்டான் தன்னை அமுது உண்டார்
            உலந்தாலும் உலவாதானை
அப்புறுத்த நீரகத்தே அழலானானை ஆரூரில் கண்டு அடியேன்
                    அயர்த்தவாறே

வேதங்களை அருளியது மட்டுமல்லாமல், வேதங்களுக்கு பொருளையும் விரித்துச் சொன்னவன் சிவபெருமான் என்று சம்பந்தர் கூறும் பாடல் (1.48.1) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வேதத்தின் பொருளை புரிந்துகொள்வதில் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைப் போக்கிக்கொள்வதற்காக சனகாதி முனிவர்கள் சிவபெருமானை அணுகி பயன் அடைந்த வரலாறு இங்கே கூறப்படுகின்றது.

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த மேவி நீழல் அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருட்களைப் பற்றிய கருத்துக்கள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளமை முதுகுன்றம் பதிகத்தின் ஒரு பாடலில் கூறப்படுகின்றது. நான்கு வேதங்களையும் சனகாதி முனிவர்களுக்கு மொழிந்தவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. சழிந்த = நெருங்கி இருக்கும். இதழி = கொன்றை மலர். சைவ வேடத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு, ஐம்புலன்களின் ஆதிக்கத்தையும், மனதினில் சிவபிரானைத் தவிர மற்ற சிந்தனைகளையும் அழித்தவர்கள் என்று சனக முனிவர்கள் குரிப்பிடப் படுகின்றார்கள்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல் இதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே

நான்கு வேதங்களாகவும், மற்ற எல்லாப் பொருட்களாகவும் உள்ளவன் இறைவன் என்று சுந்தரர் திருவானைக்கா பதிகத்தை (7.75) தொடங்குகின்றார். மேலும் இந்த பாடலில், மற்ற சமயங்களாகவும் அவைகளின் இறைவனாகவும், அந்த சமயங்களுக்கும் முன்னே தோன்றிய பழம் பொருளாகவும், வீடுபேறாகவும் இருப்பது சிவபெருமான்தான் என்பதையும் உணர்த்துகின்றார். அடியார்க்கு அடியார் என்று விருப்பத்துடன் சொல்லிக் கொள்ளும் சுந்தரர் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், ஆனைக்கா அண்ணலைத் தொழும் அடியார்கள் தன்னை அடிமையாக ஆட்கொள்ளும் உரிமை பெற்றவர்கள் என்று கூறுகின்றார்.

மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருட்கள் எல்லாத்
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையையும்                                                     ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இறைவன் அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

மறைகளை அருளிய சிவபெருமானை மறையோன் என்று மணிவாசகர் குழைத்தப் பத்து பதிகத்தின் கடைப் பாடலில் அழைக்கின்றார். அந்தணர்கள் மறை ஓதுவதால், அவர்களை மறையோர் என்று அழைப்பதுண்டு.

அழகே புரிந்திட்டு அடி நாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி எனைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்து அருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே

திருவிளையாடல் புராணத்தில், வேதத்துக்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் நைமிசாரண்ய வனத்தில் வாழ்ந்து வந்த கண்ணுவர், கருக்கர் (வடமொழிப் பெயர்கள், கர்கர், கண்வர்) ஆகிய முனிவர்களுக்கு மதுரையில், வேதங்களுக்கு பொருளினை அருளி, சிவபெருமான் அவர்களது ஐயங்களை நிவர்த்தி செய்ததாக கூறப்படுகின்றது. பரஞ்சோதி அடிகள் இந்த படலத்தின் ஒரு பாடலில் சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய நூல்களைப் பற்றி கூறுகிறார். வடகிழக்கை நோக்கி உள்ள பளிங்கு நிறமான ஈசான முகத்தில் இருந்து சிவ ஆகமங்களும், கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்தில் இருந்து இருபத்தியொரு சாகைகள் கொண்ட இருக்கு வேதமும், தெற்கு நோக்கிய கருநிற அகோர முகத்தில் இருந்து நூறு சாகைகள் கொண்ட யஜுர் வேதமும், வடக்கு நோக்கிய செம்மை நிற வாமதேவ முகத்தில் இருந்து ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதமும், மேற்கு நோக்கிய சத்தியோஜாதம் முகத்தில் இருந்து ஒன்பது சாகைகள் கொண்ட அதர்வண வேதமும் தோன்றியது. இதனைக் குறிக்கும் திருவிளையாடல் புராணம் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழ்த்திசை முகத்தொன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்ததால்
                இருக்கு அது தென்பால்
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வட திசை
                    முகத்தின்
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை
                                          முகத்தில்
நாட்டிய ஒன்பது உருவோடு கிளைத்து நடந்தது நான்கதாம்
                    மறையே

பொழிப்புரை

சிவந்த கண்களை உடைய வெள்ளை எருதினை வாகனமாகக் கொண்ட இறைவனாகிய சிவபெருமான் நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களையும் சனகாதி முனிவர்களுக்கு அருளினார். அருகிலுள்ள பூத கணங்களும் ஏனையோரும், சங்குகள் இசைத்துப் பாட, அந்த பாடலுக்கு ஏற்ப சிவபெருமான் நடமாடுகின்றார். கயிலை மலையை பேர்த்தேடுக்க, அரக்கன் இராவணன் முயற்சி செய்தபோது, அரக்கனது உடல் உறுப்புகள் நிலை குலைந்து தளருமாறு அவனை வருத்தினார். தவறினை உணர்ந்து அரக்கன் ராவணன், சாமகானம் பாடி இறைவனை மகிழ்விக்க, சிவபெருமான் அவனுக்கு வரங்கள் நல்கி நன்மைகள் புரிந்த சங்கரனாகத் திகழ்ந்தார். அத்தகைய கருணை உள்ளம் கொண்டு அனைவர்க்கும் நன்மையைச் செய்யும் பெருமான் செம்பொன்பள்ளியில் உறைகின்றார்.

முடிவுரை

இந்த பதிகத்தின் பாடல்களில் பலவிதமான மனிதர்களுக்கு எவ்வாறு சிவபெருமான் உள்ளார் என்பது கூறப்பட்டுள்ளது: முதல் பாடலில் பக்தர்களின் நெஞ்சில் நிறைந்திருந்து, அவர்களுக்கு இனிமை அளிப்பவர் சிவபிரான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இரண்டாவது பாடலில் நமது உள்ளமாகிய விளக்கில் உள்ள திரியாகவும் திரியின் விளக்காகவும் உள்ள பெருமான், மூன்றாவது பாடலில், ஞானியர்களின் உள்ளத்து இருளைப் போக்குபவராக சித்தரிக்கப்படுகின்றார். நான்காவது பாடலில், அவரைச் சரணடைந்த தேவர்களின் சிந்தையில் சிவமாக இருக்கும் நிலையும், ஐந்தாவது பாடலில் அடியார்களுக்கு அன்பராக இருக்கும் நிலையும் உணர்த்தப்படுகின்றது. ஆறாவது பாடலில், போலியாக சிவபிரானை வழிபடுவோர், தங்களது போலியான கோலத்தை விடுத்து, காமம், உலோபம் ஆகிய ஆறு தீய குணங்களையும் நீக்கினால், அவர்களுக்கு ஒழுக்கத்தினை கொடுத்து தவ வாழ்க்கையை சிவபெருமான் மேற்கொள்ளச் செய்வார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் அடியார்களும் முனிவர்களும் தினமும் மூன்று காலங்களிலும் சிவபிரானை தியானித்து வணங்குகின்றார்கள் என்று கூறும் அப்பர் பிரான், மூன்று காலங்களிலும் நிலையாக இருக்கின்றார் என்றும், வழிபாட்டில் பயன்படும் மலர்களாகவும் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். எட்டாவது பாடலில் அடியாரால் புகழ்ந்து பாடும் பாடல்களாக உள்ள தன்மை கூறப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com