61. கடலகம் ஏழினோடும் - பாடல் 7

கருணையாளன் என்று அப்பர் பிரான் கூறுவது
Updated on
3 min read

உள்ளுமாய் புறமுமாகி உருவுமாய் அருவுமாகி    
வெள்ளமாய் கரையும் ஆகி விரிகதிர் ஞாயிறாகிக்
கள்ளமாய்க் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தமாகி
அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே
 

விளக்கம்

விரிகதிர் ஞாயிறு என்ற சொல், சந்திரனாக பெருமான் இருக்கும் தன்மையையும் சேர்த்து குறிப்பதாக கொள்ள வேண்டும். உருவுமாய் அருவுமாய் என்று கூறியமையால், இரண்டு நிலைக்கும் இடைப்பட்ட

அருவுருவத்தையும் உணர்த்துவதாக நாம் கொள்ள வேண்டும். அருத்தம் = விளக்கம். அள்ளுவார் = இறையருளை அள்ளிக்கொள்ளும் அடியார்கள். அள்ளல் செய்து = அள்ளிக் கொடுத்து. தனது

அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன எல்லாம் அள்ளிக் கொடுக்கும் கருணையாளன்.

அடியார்கள் வேண்டுவதை அள்ளிக் கொடுக்கும் கருணையாளன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு, திருவாசகம் குழைத்த பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும்
                                  தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப்
                பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் உன்னை
                      வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும்
                 உந்தன் விருப்பு அன்றே

தான் விரும்பும் பொருட்களால் தனக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா என்பதை மனிதமனம் எளிதில் உணர முடிவதில்லை. ஆனால் இதனை நன்கு அறிந்த இறைவன் அத்தகைய

பொருட்களை நமக்குத் தருவதில்லை. ஆனால் இந்த நிலையை புரிந்து கொள்ளாத நாம், இறைவனிடம் மறுபடியும் வேண்டி வேண்டி, அவன் நமக்குத் தவிர்த்துள்ள பொருட்களை மன்றாடி

வேண்டுகின்றோம். இறைவனும் நாம் மீண்டும் மீண்டும் வேண்டுவதால் நமக்கு அந்த பொருட்களைத் தந்து அருள் புரிகின்றான். இந்த கருத்தையே பாடலின் முதல் அடியில் அடிகளார் கூறுகின்றார்.

இவ்வாறு ஏன் நமக்கு தீமை பயக்கக்கூடிய பொருட்களை, அதன் தன்மையை அறிந்திருந்தும் இறைவன் நமக்கு அளிக்கின்றான் என்ற ஐயம் நமக்கு எழலாம். சற்று சிந்தித்தால் நமக்கு காரணங்கள்

புலன்படும். நாம் வேண்டும் பொருள் கிடைத்ததும், தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் நாம் அதனை அனுபவித்தாலும் பின்னர் அந்த பொருளால் தீமை விளையும்போது, நமது அனுபவம் விரிகின்றது. நாமும்

இந்த அனுபவத்தின் பயனால், நாம் வேண்டும் பொருட்கள் நமக்கு அளிக்கவிருக்கும் நன்மை தீமைகளை ஆராய முற்படுகின்றோம்.

இரண்டாவது காரணம், நம்மைப் பற்றியுள்ள வினையாகும். நாம் தீமையை அனுபவிக்க வேண்டிய வினை நம்மை, அத்தைகைய பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும் வகையில் நம்மை உந்துமேயானால்,

நமது மனம் அதனை நாடத்தான் செய்யும். பொருளின் உண்மை நிலையை அறியாமல் நாம் விரும்பும்போது, இறைவனும் அந்த பொருட்களை நமக்கு அளித்து, நமது அனுபவம் விரிவடைய

உதவுவதுடன், ஒரு வகையில் நமது வினையின் ஒரு பகுதி கழியவும் உதவி செய்கின்றான். இந்த காரணங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இதுதான். நாம் விரும்பும் பொருள்

நமக்கு கிடைக்காவிடில், அதற்காக வருத்தம் அடையாமல், நமக்கு வரவிருக்கும் தீமை தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். இவ்வாறு நாம் விரும்பிய பொருள்

கிடைப்பினும் கிடைக்காவிடினும் ஒரே தன்மையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் நமக்கு பொருள் கிடைக்காத ஏமாற்றமும் இராது.

பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவனாக இருந்த நிலையை குறிப்பிட்டு, நாம் தற்போதம் நீங்கியவராக அவனது திருவடிகளில் சரண் அடைய வேண்டும் என்ற கருத்தினை அடிகளார் உணர்த்துகின்றார்.

நாட்டின் முதன்மந்திரியாக இருக்கும் ஒருவர், குதிரைகள் வாங்குவதற்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனினும், மணிவாசகரிடம் அந்த பணி ஒப்படைக்கப்படுகின்றது. இதற்கு காரணம்,

இறைவன் அவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் நெருங்கியதுதான். இந்த செய்தியைத் தான் வேண்டி என்னை பணி கொண்டாய் என்று அடிகளார் கூறுகின்றார்.

குதிரைகள் வாங்குவதற்கு தான் செல்ல வேண்டும் என்று மணிவாசகர் விரும்பவில்லை. இருந்தாலும் இந்த பணி அவரது வாழ்வினில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த இறைவன், இந்த

பணி அவருக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றான். அவன் வேண்டுவது அடிகளாரிடம், அரசனின் கட்டளை மூலம் ஒப்படைக்கப் படுகின்றது. அடிகளாரும் அதனை ஏற்றுக்கொண்டு

அரசனின் கட்டளையை நிறைவேற்ற விழைகின்றார். இவ்வாறு இறைவன் தனக்கு இட்ட பணியினை தான் விரும்பி ஏற்றுக்கொண்டதை நமக்கு உணர்த்தி, ஒரு முக்கியமான செய்தியை நமக்கு அடிகளார்

வழங்குகின்றார். வாழ்க்கையில் நம்மேல் திணிக்கப்படும் எந்த செயலாக இருந்தாலும், அதனை இறைவன் விருப்பத்தால் ஏற்பட்டது என்பதை உணர்ந்து நாம் செய்யத் தொடங்கினால், நாம் ஈடுபடும்

செயல்களில் நமக்கு விருப்பம் ஏற்படும், அதனால் அந்த செயல்களை நாம் செவ்வனே செய்வோம் என்பது தான் அடிகளார் நமக்கு அளிக்கும் செய்தி. இந்த பாடலின் முத்தாய்ப்பாக அடிகளார் கூறும்

செய்தி பாடலின் இறுதி அடியில் உள்ளது. தான் இறைவனிடம் ஏதேனும் வேண்டும் நிலை வருமானால், இறைவனிடத்தில் தனக்கு உள்ள விருப்பம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே என்று உணர்த்தி,

நமது அன்பு இறைவனை விட்டு என்றும் அகலாமல் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்க வேண்டும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் முக்கியமான செய்தியாகும்.

பொழிப்புரை

அனைத்துப் பொருட்களிலும் உள்ளே இருக்கும் பெருமான், பொருட்களின் வெளியே உள்ள இடம் அனைத்திலும் பரவி இருக்கின்றான். மேலும் உருவமாகவும், அருவுருவமாகவும், அருவமாகவும்

விளங்கும் பெருமான், விரிந்த சுடர்களை உடைய ஞாயிறாகவும், சந்திரனாகவும் விளங்குகின்றான். அவன்தான் கரை புரண்டோடும் தண்ணீராகவும் அந்த தண்ணீர், நிலத்தை அழிக்காத வண்ணம் காக்கும்

கரையாகவும் உள்ளான். வஞ்சக எண்ணத்துடன் தன்னை நினைப்பவர்க்கும், அவர்கள் விரும்பியதை அளித்து, அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் பெருமான் இவ்வாறு அருளுவதன் மூலம் அவர்களும்

நாளடைவில் தன்னை விரும்புமாறு செய்கின்றார். தன்னைப் பற்றிய உணர்வினை அள்ளி மனதினில் வைத்துக்கொண்டு வழிபடும் அடியார்கள், விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கும் கருணை

உள்ளம் கொண்டவர் ஆப்பாடி தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com