127. பிறையணி படர்சடை - பாடல் 1

ஞானமே வடிவமாக தேவி
127. பிறையணி படர்சடை - பாடல் 1
Published on
Updated on
2 min read

பின்னணி:

அப்பர் பிரான் திருஞானசம்பந்தரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களை தரிசிப்பதற்கு சென்ற பின்னர், ஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து பல வித்தியாசமான பதிகங்கள் பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, வழிமொழி விராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த பதிகங்களில் பல பதிகங்களை நாம் இதுவரை சிந்தித்தோம். அத்தகைய பதிகங்களில் ஒரு வகை தான் முடுகும் இராகம் எனப்படும் வகையில் உள்ள பதிகம். முடுகிய சந்தம் என்பதற்கு வேகமாக பாடும் வகையில் அமைந்த பண் கொண்ட பாடல் என்று பொருள். அத்தகைய பதிகம் தான் நாம் இப்போது சிந்திக்கவிருக்கும் இந்த பதிகம். இந்த பதிகம் வேறொரு சிறப்பினையும் உடையது. இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின்  கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம்வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை மற்ற மூன்று பதிகங்கள். 

இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் ஐ என்ற எழுத்துடன் இணையும் உயிர்மெய் எழுத்துக்கள் குறில் எழுத்துகள் என்று தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாத்திரை அளவுள்ள ஐ எழுத்து, உயிர்மெய் எழுத்தாக வரும்போது இரண்டுக்கும் குறைந்த மாத்திரையுடன் வருவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப் படுகின்றன. இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய சம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய ஞானசம்பந்தர், வல்லமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.           

பாடல் 1:

    பிறை அணி படர் சடை முடி இடை பெருகிய புனல் உடையவன் இறை
    இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை
    கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்
    நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே

விளக்கம்:

பெருகிய புனல்=வெள்ளமாக பெருகி கீழே இறங்கி வந்த கங்கை நதி; இறை=முன்கை; இணை முலை=தேவியின் இணையான இரண்டு மார்பகங்கள்; ஞானமே வடிவமாக தேவி இருப்பதாக கடுதப்படுவதால், தேவியின் இரண்டு மார்பகங்களும் பரஞானத்தையும் அபர ஞானத்தையும் குறிப்பிடுவதாக கூறுவார்கள். விரை=நறுமணம்; இணைவன்=இணைபவன்; இணை முலைகள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிராட்டியின் மார்பகங்களின் அழகுக்கு வேறு எதனையும் ஒப்பாக சொல்ல முடியாது என்பது உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் ஒரு மார்பகமே மற்றொரு மார்பகத்திற்கு இணையாக இருக்க முடியும் என்று அழகாக சம்பந்தர் கூறுகின்றார். கறை=இருள்; மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நெருக்கமாக காணப்படுவதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புக முடியாத வண்ணம் நெருங்கி காணப்படுவதால், சோலைகள் இருள் நிறைந்து காணப்படுவதாக சம்பந்தர் கூறுகின்றார். நெருக்கமாக வளத்துடன் மரங்கள் இருப்பது சோலைகளுக்கு அழகு சேர்ப்பதால் இங்கே இருளினை சோலைக்கு அணிகலனாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நறை=தேன்; நறுவிரை=நறுமணம்; நல்கு=கலந்து பொருந்திய;               

பொழிப்புரை:

அழியும் தன்மையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனின் ஒற்றைப் பிறையினை, தனது படர்ந்த சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த சடையின் இடையே மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தேக்கியவர் ஆவார்; தனது முன் கையில் வளையல்களை அணிந்தவளும், அழகில் ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் இணைத்துக் கொண்டவனும் ஆகிய சிவபெருமான் இருக்கும் அழகிய இடங்களில் ஒரு இடமாவது, நெருங்கி இருக்கும் தன்மையால் இருளினை ஒரு அணிகலனாகக் கொண்டுள்ள சோலைகள் நிறைந்த கழுமலம் நகரமாகும். இவ்வாறு அழகிய சோலைகளும்  வளம் வாய்ந்த வயல்களும் கொண்டுள்ள கழுமலம் நகரத்தில் அமர்ந்துள்ள இறைவன், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தில் திருமேனி உடையவன் ஆவான். தேன் உடையதும் நறுமணம் வீசுவதும் ஆகிய மலர்கள் இந்த பெருமானின் திருவடிகளில் கலந்து பொருந்தி உள்ளன. தன்னை வணங்கித் தொழும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் விளைவிக்கும் அந்த திருவடிகளைச் சார்ந்து தொழுது வணங்கி நலன்கள் பெறுவீர்களாக.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com