ஈமச்சின்னங்கள்
ஈமச்சின்னங்கள் எழுப்பப்படுவதன் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் தத்துவப் பின்னணி பற்றி அறிவதில் நாம் வெற்றியும் அடைந்தவர்களாகப் பெருமைபட்டுக்கொள்வதும் இருக்கட்டும். அவற்றின் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் குறிந்து வியந்துகிடப்பதும் இருக்கட்டும். தோற்றம் வளர்ச்சி பற்றி தொல்லியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் எதுவாகவும் இருக்கட்டும். மனிதனின் படைப்புகளில், மனிதனை அடையாளப்படுத்துவதில் முன்நிற்பவை ஈமச்சின்னங்கள்தாம்.
மனிதனைப் புரிந்துகொள்ள, மொழி பயன்படா இடங்களாக இருப்பவை இரண்டு. ஒன்று, ஈமச்சின்னங்கள். மற்றொன்று, வழிபாட்டிடங்கள். உண்மையில், ஆதியில் ஈமச்சின்னங்களின் நீட்சியே வழிபாட்டிடங்கள்.
ஏனென்று தெரியாது. மனிதனின் படைப்புகளில் காலம் எதை அழித்தாலும், பெரிதாகக் காப்பாற்றி வந்திருப்பது ஈமச்சின்னங்களைத்தான். அது மிகப் பிரம்மாண்டமாக தரைக்கு மேல் எழுப்பட்ட பிரமிடுகளாகட்டும், தரைக்குக் கீழ் புதைக்கப்பட்ட எளிய தாழி ஆகட்டும் அல்லது இன்னும் எளிய ஈமக்குழியாகட்டும், காலம் பாரபட்சம் காட்டாமல் தன் தேர்வை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. மனிதனின் பண்டைய வாழ்விடங்களையும், மத வழிபாட்டிடங்களையும் காப்பாற்றி அளிப்பதில், காலம் சிறிதுதான் நேரம் ஒதுக்குகிறது என்று தோன்றுகிறது.
உலகில் வேறு எந்தச் சமூகத்தையும் விடவும், தமிழ்ச் சமூகம்தான் இந்த உண்மையை அறிந்துகொண்ட சமூகமாகக் காட்சியளிக்கிறது. சிந்துவெளி தமிழ்ச் சமூகம் இதற்கு விதிவிலக்கு என்று தோன்றலாம். இல்லை, சிந்துவெளியின் அழிவுதான் தமிழ்ச் சமூகத்துக்கு இந்தப் புரிதலை வழங்கியிருக்கக்கூடும். அல்லது இந்த உணர்தலைக் கெட்டிப்படுத்தியிருக்கும். பண்டைய இந்தியாவில், தமிழ்ச் சமூகம் வாழ்ந்த எந்தப் பகுதியிலும், வாழ்விடங்களை அரிதில் முயன்றுதான் அறியமுடியும். அங்கும், அவனது இருப்பிடச் சான்றை ஆயிரத்தில் ஒன்றாகத்தான் அறியமுடியும் என்று உச்சபட்சமாக கூறலாம். இருப்பிடச் சுவடு ஒன்றை அகழாய்வில் அறிந்த தொல்லியல் அறிஞனின் குதூகலம் எல்லையற்றது. அது, அவர் சாதனையில் உச்ச சாதனையாக மதிப்பிடக்கூடியது.
“உணவு, உடை, இருப்பிடம்” என்று மனிதனின் நாகரிகத்தை வரையறுத்த இனம், இம்மூன்றிலும் கொண்டிருந்த எளிமையான பொருளாதாரத்தால் தீர்மானமானது என்றால், அதனை மறுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இருப்பிடச் சிந்தனை, தமிழ்ச் சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களிடமும் வலுவாக இருந்தது. இந்த வாழ்வியலுக்கு உட்பட்டவர்களாகவே தென்னிந்தியாவையும், தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் தன் ஆளுமையைச் செலுத்திய ராஜராஜன், ராஜேந்திரன் முதல், தத்தமது அரசுகளை நிறுவிய சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களும், மற்றும் வள்ளல்கள் முதல் வேளிர்களும் குழுக் குடித் தலைவர்களும் உள்ளனர்.
இத்தனைக்கும், சங்ககால அதியமான் நெடுமான் அஞ்சியின் கோட்டை குறித்தும், அது கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் “தகடூர் யாத்திரை” சித்தரிக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானவை. இங்கு எளிமை இல்லையே என்று தோன்றும். எவ்வளவு பிரம்மாண்டமும் பாதுகாப்பும் இருந்தாலும் அவை நிரந்தரமற்றவை என்ற புரிதல் உருவாக்கிய எளிமையை அது கொண்டிருந்துள்ளன. அதன் காரணமாகவே, அவை அகழாய்வுகளில்கூட அகப்படாத குணத்துடன் அமைக்கப்பட்டன போலும். ஆம், அவை வலிமையானவை, உறுதியானவை; ஆனால், நிரந்தரமானவை அல்ல.
இதனை, அக்காலத்தின் பண்பாட்டின் பின்னணியில்தான் புரிந்துகொள்ள முடியும். அது, ஈமச்சின்னங்கள் எழுப்பும் பண்பாட்டோடு தொடர்புடையது மட்டுமல்ல; சவ அடக்கமுறையில் கல்லின் பங்குடன் உறுதியாகப் பின்னப்பட்டதும் ஆகும். புதிய ஆய்வுகள் வழி, மு.பொ. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் பங்குபெற்ற நினைவுச்சின்னங்களின் வரலாறு இக்காலகட்டத்தில் இருந்துதான் துவங்குகிறது என்று உறுதியாகச் சொல்லலாம். இக்காலப் பண்பாடு பெருங் கற்காலப் பண்பாடு என்றும் பெருங் கற்படைப் பண்பாடு என்றும் குறிக்கப்படுகிறது.
பெருங் கற்காலப் பண்பாட்டில், கல் முக்கியமான பங்கு வகித்தமை எந்த அளவு உண்மையோ, அதோ அளவு உண்மை இதே பண்பாட்டில் தாழி மற்றும் ஈமப்பேழை ஆகிய மண்பாண்டங்களுக்கும் உண்டு. ஆயினும், சிறு சிறு பரல் போன்ற கற்கள் முதல் 10 முதல் 15 டன் வரை எடை கொண்ட கற்கள் கொண்டு இவ்வகை ஈமச்சின்னங்கள் உருவாக்கப்பட்டதால், இக்காலப் பண்பாடு, பின்னதன் குணத்தால் பெருங் கற்காலப் பண்பாடு அல்லது பெருங் கற்படைப் பண்பாடு என்ற பெயரை அடைந்துகொண்டது.
இவ்வாறு, இப் பெருங் கற்படைச் சின்னங்கள் எழுப்பப்பட்ட தன்மை கொண்டு பார்க்கும்போது, இவை ஒரு தனிமனிதனால் உருவாகப்பட்டிருக்காது என்பது திண்ணம். இதன் உருவாக்கத்தில், ஒரு குழு அல்லது தொடர்புடைய சமுதாயமே அதில் பங்குகொண்டிருக்க வேண்டும். மேலும், தம் திறமை முழுவதையும் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது. இவ்வாறு, நீத்தோர் நினைவாக அனைவரும் வியக்கும்வகையில் பிரம்மாண்டமாகவும், நுணுக்கமாகவும் இச்சின்னங்களை உருவாக்கியபோதும், இவற்றை உருவாக்கிய தமிழ் மக்கள், தம் வீடுகளை எளிமையாக கட்டிக்கொண்டு வாழ்ந்திருந்தனர். இது, தமிழர்களின் சிறப்பான பண்புகளில் ஒன்றாக உள்ளது.
தமிழரின் இச் சிறப்புப் பண்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்தொன்று, மிகச் சரியாக அதனை அடையாளப்படுத்துகிறது. “கட்டடக் கலையின் பல்வேறு நுணுக்கங்களை அறிந்திருந்தபோதிலும், தமிழர் தமக்கென ஆடம்பரமான மாளிகைகளை எழுப்பிக்கொள்ளவில்லை. இது, சமகாலச் சமூகத்தின் பிரதிபலிப்பாக அல்லது எதிர்பார்ப்பாக இருக்கலாம். இந்நிலைதான், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் நிலவியது எனலாம். மாபெரும் கோயில்களை உருவாக்கிய பிற்கால மன்னர்களான பல்லவர்களோ, பாண்டியர்களோ, சோழர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் இருப்பதுபோல் அல்லாமல், தமக்கென கல்லால் ஆன எவ்வித அரண்மனைகளையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே, இப் பெரும் சின்னங்கள், அக்கால மக்கள் தமது மூத்தோரின் மீது வைத்திருந்த பற்றுதலையும் ஈடுபாட்டையும் காட்டுகின்றன” (கா. ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம், 2004, ப.22). இங்கு, இந்தியாவின் பிற பகுதி மட்டுமல்ல, உலகின் பிற எந்தப் பகுதியில் இருப்பதில் இருந்தும் தமிழர் பண்பாடு வித்தியாசப்பட்டு நிற்கிறது என்று குறிப்பிடலாம்.
நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட இந் நினைவுச் சின்னங்களில், இறந்தவர்களின் எஞ்சிய எலும்புத் துண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கம், இதற்கு முற்பட்ட காலத்தின் பண்பாடான புதிய கற்காலப் பண்பாட்டு நிலையில் இருந்து வேறுபட்டதாகும். புதிய கற்காலப் பண்பாட்டு நிலை குறித்து அறியும் முன்னர், பழைய கற்கால நிலை குறித்தும் அறிவது, மாந்தரினம் கடந்து வந்த பரிணாம வளர்ச்சி நிலைகளின் ஊடே வளர்த்தெடுத்த பல நிலைப் பண்பாட்டு நிலைகளின் பொழுதான, சவ அடக்க முறைகளை அறிவது அவசியமாகிறது.
பழைய கற்கால நிலை
பழைய கற்கால மனிதன், அலைந்து திரியும் வாழ்க்கையும், நிரந்தர வாழிடம் ஒன்றைக் கொண்டவனாக இருக்கவில்லை. உணவுக்காகத் தொடர்ந்து அலைந்து திரிந்த நிலையில், இக்கால மாந்தரினம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் பலவும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், செங்கல்பட்டு மாவட்டத்தில் (இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்) உள்ள குடியம் குகை குறிப்பிடத்தக்கது. இக்குகையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (சு. இராசவேலு & கோ. திருமூர்த்தி, 1995, ப.10-11) இவ்வகழ்வாய்வுகளில், கீழைப் பழங்கால, மத்தியப் பழங்கால, மேலைப் பழங்கால கல்லாயுதங்களே தொடர்ச்சியாகக் காணப்பட்டாலும், மனிதன் தொடர்ந்து இக்குகையில் வாழ்ந்ததற்கான எச்சங்களைக் காணமுடியவில்லை. (Alchin B & Alcin F.R. 1982).
இது, இந்தியாவின் எல்லா பழைய கற்காலக் கருவிகள் காணப்பட்ட குகைகளுக்கும் பொருந்தும் குணமாக உள்ளது. பழைய கற்காலப் பண்பாட்டுக்கு உரிய மூன்று காலகட்டக் கருவிகள் இங்கு கிடைத்தாலும், மனிதன் இவற்றில் வாழ்ந்ததற்கான தடயங்களை எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆதலால், பழைய கற்கால மனிதன் இக்குகைகளை தாற்காலிகத் தங்கும் இடங்களாகவும், கல்லாயுதங்கள் செய்யும் இடங்களுக்கு அருகில் குகையிருப்பின், அவற்றை ஓய்வு எடுப்பதற்கான இடமாகப் பயன்படுத்தினான் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
பின்னோக்கிச் சென்று பார்த்தால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும், தோற்றத்தில் குரங்கு நிலையில் இருந்த ‘ராமோபிதக்கஸ்’ என அழைக்கப்படும் மனித எச்சமும், தமிழகத்தில் சென்னைக்கு அருகில் இக்கால மனிதனின் கால் எலும்பின் பாகம் மட்டுமே கிடைத்ததும், முறையான புதைகுழி வழக்கத்தைப் பழைய கற்கால மனிதன் கொண்டிருக்கவில்லை என்ற கருத்தை மேலும் உறுதி செய்கிறது.
நுண் கற்காலம் அல்லது இடைப் பழங் கற்காலம்
பெரும்பாலும், இடைநிலைப் பழைய கற்காலம் என்று குறிக்கப்படும் நுண் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில்தான், மனிதன் நிரந்தரமாகக் குகைகளில் வாழப் பழகிக்கொண்டான் என்பதை தற்போதைய ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது. இதே காலகட்டத்தில், மலைக் குகைகளில் மட்டும் அல்லது கடற்கரையை ஒட்டிய ஆற்றுப்படுகை கொண்ட தேரிப்பகுதிகளிலும் நுண் கற்கால மனிதன் வாழ்ந்தமைக்கான சான்றுகளைத் தமிழகப் பரப்பில் இருந்தும் அறியமுடிகிறது. இக்காலத்தில், இவனது வாழ்வில் முறை இதற்குக் காரணமாக உள்ளது என எளிதில் ஊகிக்க முடிகிறது.
பழைய கற்காலத்தில், பெரிய உயிர்க்கொல்லி மிருகங்களுடன் போராடும் வாழ்க்கையும், உணவுக்காக விலங்குகளைத் தேடி அலைந்துகொண்டிருந்த நிலை மாறியதை அறிய அவனது கல்லாயுதங்களின் குணங்களே சான்றாக உள்ளன. இப்பண்பாட்டுக் காலத்திலும், மனிதன் வேட்டையாடுதல் தொழிலைப் புரிந்தான். ஆனால், அவை எளிய, உருவில் சிறிய மிருகங்களாக இருந்தன. மீன்பிடித்தலும், உணவு சேகரித்தலும் பிற தொழில்களாக இருந்தன. பழைய கற்கால மனிதனைவிட, இக்கால மனிதன் சற்று முன்னேறிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். இதனால், தொடர்ந்து நாடோடியாகத் திரிந்த நிலைமாறி, ஓரளவு தொடர்ந்து ஓரிடத்தில் வாழத் தலைப்பட்டான். இதனால், தான் வாழ்ந்த சூழலை முன்பைவிடக் கூர்மையாகக் கவனித்து, அதனை தனக்கு சாதகமாக மாற்ற முற்பட்ட குணம் குறித்து, தற்காலத்திய ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.
இவை எல்லாவற்றையும்விட, மிருகங்களை வீட்டு மிருகங்களாக வளர்க்கக் கற்றுக்கொண்டதையும், மந்தை வளர்பிலும் இக்கால மனிதன் ஈடுபட்ட நிலையையும் அறியமுடிகிறது. இதற்கு, இக்காலக் குடியிருப்புகளில் ஆடு, எருது, பசு, செம்மறி ஆடு போன்றவற்றின் எலும்புத்துண்டுகள் சான்றுகளாகக் கிடைத்துள்ளன. மேலும், நாய் இவனது நண்பனாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், இக்கால மனிதனின் இறப்புக்குப் பிறகான அடக்கமுறைகள் குறித்து சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. எனினும், தமிழகத்தோடு மிக நெருங்கிய பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ள இலங்கையில் (ஈழம்) இச்சான்றுகள் கிடைப்பது கொண்டு, இச்சான்றுகளின் குணமே தமிழகத்துக்குப் பொருந்தும் எனலாம். வட இந்தியப் பகுதிகளிலும் இச்சான்றுகள் கிடைக்கின்றன. இதுவும், பண்டைய தமிழகம் அல்லது தென்னிந்தியாவிலும் இந்த அடக்க முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மேலும், ஆய்வுகள் இந்த உண்மையை உறுதி செய்யக்கூடும்.
ஈழத்தின் தென்பகுதியான “பெலன் பண்டிபலாசா” என்ற இடத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், இக்கால சவ அடக்கமுறைக்கு உறுதியான சான்றாகும். வட இந்தியாவில் பாகோர், சாராய், நாகராய், சொபானி, மண்டோ, லாங்நாஜ் ஆகிய இடங்களிலும், நுண் கற்கால மனிதனின் சவ அடக்கமுறைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இங்கு, இக்கால மனிதன் வாழ்ந்த இடங்களிலேயே, தனித்தனியாகவும், கூட்டாகவும் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில சடலங்கள், நீளவாக்கில் கிடத்தப்பட்ட நிலையிலும், சில மடங்கிய நிலையில் புதைக்கப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. மேலும் இவற்றுடன், எலும்பினால் ஆன கழுத்தில் அணியும் மாலைகள், கல்லால் ஆன அம்பு முனைகள் காணப்படுகின்றன. மேலும், சில மிருகங்களின் எலும்புத்துண்டுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை, இறந்தவர்கள் உண்ட மிருகங்களின் எலும்புத்துண்டுகள் எனக் கருதப்படுகின்றன.
இந்தச் சான்றுகள், இறந்தவரை தக்கமுறையில் அடக்கம் செய்ய இக்கால மனிதன் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்துகின்றன. மேலும், இறந்தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையை இக்கால மனிதன் கொண்டிருந்தான் என்பதை, இறந்தவர்கள் பூண்டிருந்த அணிகள், பயன்படுத்திய பொருள்கள், உணவாக எடுத்துக்கொண்டவை, அவர்களுடைய சடலங்களுடனேயே புதைக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறியமுடிகிறது.
இச் சவ அடக்கங்க,ள் எளிய வகையில், தரைக்குக் கீழ் குழி அமைப்பு ஒன்றை உருவாக்கிச் செய்துள்ளனர். சவ அடக்கத்தை அடையாளப்படுத்த வேறுவகையான அமைப்பு எதையும் இக்கால மக்கள் செய்திருக்கவில்லை. தம் வாழ்விடங்களிலேயே தரைக்குக் கீழ் சவ அடக்கத்தைச் செய்திருப்பதால், வாழ்விட அகழாய்வின் ஒரு பகுதியாகவே இவை வெளிப்படுகின்றன.
பழைய கற்கால வழிபாடுகள்
பழைய கற்காலப் பண்பாட்டின்பொழுதே, மனிதனுக்கு இயற்கைச் சக்திகளான இடி, மின்னல், மேகம், நெருப்பு, சூரியன் மற்றும் சுழன்றடிக்கும் காற்று, பாய்ந்தோடும் நீர் ஆகியவை குறித்து அச்ச உணர்வு எழுந்திருந்தது. அதே நேரத்தில், இவை நன்மையை வழங்கக்கூடியவை என்ற அறிவின் காரணமாக, அவற்றின் மீது நன்றி உணர்வும், நம்பிக்கை உணர்வும் கொண்டாவனாகவும் இருந்தான். மாந்தரினத்தில் அச்சம், நன்றி மற்றும் நம்பிக்கை உணர்வுகளே ஆதி வழிபாட்டை அவனிடத்தில் உருவாக்கியது என்று மானுடவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மரங்கள் அவனுக்குக் காய், கனிகளை வழங்கி நன்மை புரிவதை அறிந்துகொண்டிருந்ததால், மரங்கள் அவனது நன்றிக்குரிய வழிபாட்டு நிலையை அடைந்திருந்தன.
புதிய கற்கால நிலை
தன்னைச் சுற்றியுள்ள சூழலை தக்கவாறு பயன்படுத்த மனிதன் மேற்கொண்ட செயல்களால், புதிய கற்கால மனிதன் வெகுவிரைவில் அவன் நாகரிக நிலையில் உயர்ந்த காலகட்டம், புதிய கற்கால காலகட்டமாகும். நுண் கற்காலத்தில், இவனது முன்னோர்கள் மேற்கொண்டிருந்த மந்தை வளர்ப்பு, வீட்டு விலங்கு வளர்ப்பு, தாவரங்கள் பற்றிய அறிவு ஆகியவை, இக்காலப் பண்பாட்டை மிக விரைவாக மேலெடுத்துச் சென்றது.
இக்கால மனிதன், அணிகலன்களை அணியவும் கற்றுக்கொண்டிருந்தான். இதற்காக, அவன் பலவகைக் கல் இனங்களைத் தெரிந்து, அவற்றை செப்பனிட்டு, வழவழப்பும், பளபளப்பும் கொண்டதாகச் செய்து அணிகளாக்கவும் கற்றுக்கொண்டான். இக்காலத்தில், எலும்பிலும் பலவகைக் கற்கள் கொண்டு செய்த மாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியமைக்குச் சான்றுகள் கிடைத்துவருகின்றன. பழைய கற்காலத்திலும், நுண் கற்காலத்திலும் மரவுரி, மிருகங்களின் தோல் ஆகியவற்றை ஆடையாகக் பயன்படுத்திய மனிதன், புதிய கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினான். இந்த வகையில், மாந்தரினத்தின் முந்தைய காலகட்டங்களைவிடவும், இக்காலத்தில் பலவகைத் தொழில்கள், தொழில் பிரிவுகள், சமூகப் பிரிவுகள் தோன்றி வளர்ச்சிபெற்ற நிலையைக் காணமுடிகிறது.
இடைக் கற்காலமான நுண் கற்காலப் பண்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்டது போன்றே, புதிய கற்காலத்திலும் மக்கள் வாழ்ந்த இடங்களிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது. வயது வந்தோரை நீளமாகக் கிடத்தியும், குழந்தைகளை தாழியில் வைத்தும் அடக்கம் செய்த முறை கடைப்பிடிக்கப்பட்டதை அறியமுடிகிறது. வயது வந்தோருடன், அவர்கள் பயன்படுத்திய மண்கலன்கள், கருவிகள் போன்ற பொருட்களையும் சேர்த்துப் புதைப்பதை கடைப்பிடித்தனர். இவ்வடக்க முறைகள், பின்வந்த பெருங் கற்காலத்திலும் தொடரப்பட்டது. இது, இம்மரபின் ஆழமான தாக்கத்தைக் காட்டுகிறது. புதிய கற்காலத்துக்கும், பெருங் கற்காலத்துக்கும் பொதுக்குணம் மாறி வித்தியாசப்படும் இடம் ஒன்றையும் நினைவுபடுத்திகொள்வது அவசியமாகும். அது, பெருங் கற்காலப் பண்பாட்டில், பெரும்பாலும் நீத்தோரின் எழும்புத்துண்டுகள் மட்டும் வைத்துப் புதைக்கும் வழக்கம் பெரும்பான்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டது, அரிதாகவே முழு எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டன.
புதிய கற்காலப் பண்பாட்டிலும், ஈமச்சின்னங்கள் எழுப்பும் மரபு கடைப்பிடிக்கப்படவில்லை. குடியிருப்புக்களின் அடியில், தரைக்குக் கீழ் எளிய ஈமக்குழி தோண்டி, அதில் முன் குறிப்பிட்ட இருமுறைகளிலும் மூத்தோரை அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது.
மூத்தோர் அடக்கமுறையும் வளமை நம்பிக்கையும்
நீத்தோர் என்றும் மூத்தோர் என்றும் குறிக்கப்படும் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், இறந்தவர்கள் மீது வைத்திருக்கும் பற்று, பாசம், மதிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக இருப்பதுடன், இறந்தவர்களைத் தக்கவாறு பேணல், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்தல் என்பவையே, வாழும் மனிதனின் அதாவது நீத்தோரின் வாரிசுகளின் வளர்ச்சிக்கு வழி அமைக்கும் என்ற நம்பிக்கை இக்காலத்தில் வலுப்பெற்றிருந்தது. தத்தமது இருப்பிடங்களிலேயே இறந்தோரை அடக்கம் செய்த வழக்கம் இதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இதனால், இறந்த பின்பும் வாழும் தம் வாரிசுகளுக்கு வழிகாட்டிகளாக விளங்குவர் என்ற நம்பிக்கை உணர்வும் இருந்தது எனக் கருதலாம்.
சமய நம்பிக்கை
மூத்தோர் வழிபாட்டுடன், இக்காலத்தில் வளர்ச்சிபெற்ற சமய நம்பிக்கை பற்றி அறிவது, பின்னர் வளர்ந்த பெருங் கற்காலப் பண்பாட்டினை முழுமையாக அறிய உதவும். ஏனெனில், தென்னிந்தியாவில் பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை, படிப்படியான வளர்ச்சி நிலைகளைத் தொடர்ச்சியாக ஒன்றை அடுத்து ஒன்று எனக் காணமுடிகிறது.
துவக்கத்தில், பழைய கற்காலத்தில் தான் வாழும் சூழலுக்கு அடிமையாக வாழ்ந்த மனிதன், காலம் செல்லச் செல்ல தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தன்னை வழிநடத்தவும், தன்னை விஞ்சிய சக்தி ஒன்று உண்டு என உணர்ந்தான். இத்தகைய சக்தியை இறைஞ்சுவதன் மூலமே தான் வாழ முடியும் என்றும் உணர்ந்தான் என்று சான்றுகளின் துணை கொண்டு, தொல்லியல் அறிஞர்களும், மானுடவியலாளர்களும் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, தாய் தெய்வ வழிபாட்டினை இக்காலப் பண்பாட்டில் செழுமையாகக் காணமுடிகிறது. மேலும், பலவகை மரபான சடங்குகளும், பலியிடல் போன்ற வழக்கமும், முந்தையப் பண்பாட்டின் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. அதுபோலவே, இயற்கை வழிபடும் தொடரப்பட்டது.
பெருங் கற்கால நிலை
பெருங் கற்கால பண்பாட்டைச் சார்ந்த மாந்தரினம், பரிணாம வளர்ச்சியில் மிகவும் வளர்ச்சி அடைந்த சமூகமாக நிலைபெற்ற சமூகமாகும். இப் பண்பாட்டுக் கால மக்கள், நீத்தோரின் நினைவைப் போற்றும் விதமாகப் பலவகை ஈமச்சின்னங்களை எழுப்பியுள்ளனர். சமயத்தில், 15 டன் வரையிலான கல் கொண்டு ஈமச்சின்னங்களை எழுப்பியதால், இக்காலம் “பெருங் கற்காலம்” என்றும் “பெருங் கற்படைக் காலம்’’ என்றும் அழைக்கும் மரபு உருவானது குறித்து, இந்த அத்தியாயத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.
ஈமச்சின்னங்களின் பகுப்பு
நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், ஈமச்சின்னங்களை நான்கு வகைகளாகப் பகுக்கலாம். அவை -
1. கற்சின்னங்கள்
2. கட்டடச்சின்னங்கள்
3. நினைவுத்தூண்கள்
4. நடுகற்கள்
தென்னிந்தியா முழுவதும் காணப்படும் பெருங் கற்கால ஈமச்சின்னங்களை “கற்சின்னங்கள்” வகைப் பகுப்பில் வைக்கலாம். கட்டடச்சின்னங்கள் என்ற பகுப்பில், தென்னிந்தியாவில் சான்றுகளைக் காணமுடியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லச்சந்திரம், தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டியில் உள்ள பரலுயர்ப்பதுக்கை வகை கல்வட்டங்கள், பழநி மலைப்பகுதி சிறப்பு வடிவ கல்திட்டைகள், நீலகிரி மலைப்பகுதி சிறப்பு வகை ஆழ்கிணறு வகை கல்வட்டச் சின்னங்கள் போன்றவை சிறப்பான கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அவற்றை முழுமையான கட்டட வகைச் சின்னங்களாக ஏற்றுக்கொள்வதற்கில்லை. தமிழகத்தில் எழுப்பப்பட்ட பிற்கால பள்ளிப்படைக் கோயில்கள், கட்டட வகையில் சேர்ந்தவையே.
(எகிப்து பிரமிடுகள்)
உலக அளவில், கட்டட வகை நினைவுச் சின்னங்களாக எகிப்தில் காணப்படும் பிரமிடுகள், இந்திய அளவில் சமண, பெளத்த சமயங்களைச் சார்ந்த ஞானியர்க்குக் கட்டப்பட்ட ஸ்தூபிகளைக் குறிப்பிடலாம். இந்த ஸ்தூபிகளின் நடுவில், ஞானியின் மயிர்ச்சுருள், பல், நகச்சீவல், எலும்புத்துண்டு ஆகியவற்றில் ஒன்றைக் கொண்ட பெட்டியில் – இது அஸ்திப்பெட்டி என்றும் அழைப்பர் - வைத்து புதைத்தோ அல்லது தரையில் வைத்தோ இருப்பர். சமண சமயத்தின் இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவதநாதரின் நினைவில், அவரது உடல் சாம்பலின் மீது சக்ரா என்பவர் எழுப்பிய ஸ்தூபியும், பெளத்த சமயத்தைப் போதித்த கெளதம புத்தரின் உடல் சாம்பல் கொண்டு அசோகரால் எழுப்பப்பட்ட சாஞ்சி, சாரநாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஸ்தூபிகள், கட்டட வகை நினைவுச் சின்னங்களாக இருப்பவையே.
(சாஞ்சி ஸ்தூபி)
நீத்தோர் நினைவில் எழுப்பப்பட்ட தூண்கள், நினைவுத் தூண்கள் என குறிப்பிடப்படுகின்றன. இத்தூண்கள், “லஷ்டி” என்று வடமேற்கு இந்தியப் பகுதிகளில் அழைக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுனகொண்டாவில் எழுப்பப்பட்டுள்ள தூண்கள், இறந்தவர் நினைவில் அமைக்கப்பட்ட தூண் வடிவ ஈமச்சின்னங்களே ஆகும். இவை “சாயத்தம்பம்’’ என்றும் அழைக்கப்படுகின்றன.
(அடுத்த வாரம் – பெருங் கற்கால சமய நிலையும் பெருங் கற்படைச் சின்னங்களும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.