புதிர்ப்பாதை வளமைச் சின்னங்கள் (தொடர்ச்சி)
பயிற்சி கள வடிவப் புதிர்ப்பாதைகள் குறித்து சென்ற அத்தியாயத்தில் சில விவரங்கள் அறியப்பட்டது. உண்மையில், புதிர்ப்பாதையின் மையத்தில் தொன்மை உலகத்தின் ஆழம் காண முடியாத விளங்கா மெய்மை ஒரு புதிராகக் குடிகொண்டிருக்கிறது. வரலாறு நெடுகிலும் புதிர்ப்பாதைகள் ஒரு எதிரெதிரான இருமைப் பண்புகளான நம்பிக்கை மற்றும் அச்சம், வெளிச்சம் மற்றும் இருள், நன்மை மற்றும் தீமை, வனப்பு மற்றும் ஆபத்து, சிறை மற்றும் அரண், தண்டனை மற்றும் பாதுகாப்பு என்ற இருமைகளைக் காட்டிவந்துள்ளது. இருந்தும், அவை நம்முடன் நேரடியாக உரையாடுவதில்லை. அது கவிதையின் மொழியில், உருவகத்தின் வாயிலாக, பல அடுக்கு உண்மைகளுடன் உரையாடுகிறது.
புதிர்ப்பாதைகள் குறித்த சொல்லோவியம், சுமேரிய நாகரிகத்தில் இருந்து தொடங்கி இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டு நவீன இலக்கியவாதிகள் வரை தீராத பசியுடன் எழுதப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. மேற்கத்திய புராண இதிகாசக் காவியங்களின் சித்தரிப்புகளே புதிர்ப்பாதைகளின் கட்டட, நடன அதாவது பயிற்சி கள, தேவாலய மற்றும் தற்காலத்திய கேளிக்கை வடிவங்களுக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
மு.பொ.ஆ. 3000 அளவிலான சுமேரிய நாகரிகப் புராணத்தில், முதல் பதிவை நாம் அறியமுடிகிறது. தாய் தெய்வமான இனன்னா மற்றும் அவரது துணைவனான ‘காட்டுக் காளை’ என்று அறியப்படும் ‘டுமுசி’ (Inanna and Dumuzi) ஆகியோர் பற்றியவை அவை. காளைகள், நம் முன்னோர்களைக் குறிக்கும் ஒரு முக்கிய குறியீடு என்று சான்றோர் கருதுகின்றனர்.
காளைகள் குறித்து பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டுப் பழைய கற்கால ஓவியங்களில் இருந்தே நம்மால் அறியமுடிகிறது. பின்னர், புதிய கற்காலத்தைச் சார்ந்து முன்னர் கண்ட சுமேரிய எழுத்துகளில் இருந்தும், சிந்து சமவெளி நாகரிகச் சுவடுகளில் இருந்தும் பெறமுடிகிறது. இதே காலகட்டத்தைச் சார்ந்த வகைகளாக, சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கலன்களில், வரைகலை வடிவங்களாக அனடொலியாவிலிருந்தும் (இன்றைய துருக்கி) கீரிட் தீவுகளில் இருந்தும் பெறுகிறோம். வெண்கலப் பண்பாட்டுக் காலத்தில், காளை வடிவ மனிதன் அல்லது கடவுள், தாய் தெய்வத்தின் மகனாகவோ, துணைவராகவே சமயங்களில் அரசராகவும் இருந்ததை அறிய வருகிறோம். இந்நிலையில், இவரது கொம்புகள் தாய் தெய்வக் கோயில்களில் அழகு செய்யக் காண்கிறோம்.
சுமேரியக் கதையில், காட்டுக் காளை டுமுசி, ‘குர்’ என்ற அச்சம் தரும் பயங்கர பாதாள உலகுக்கு அனுப்பப்படுகிறார். அவர் அங்கிருக்கும்போது, இனன்னா அவருக்காக இரக்கத்தக்க வகையில் துக்கமடைகிறார். ஆறு மாதம் கழித்து கோடைப் பருவத்தின் இறுதிக்கும், இளவேனில் காலத்துக்கும் மத்தியில், டுமுசி திரும்பி வர அனுமதிக்கப்படுகிறார். இக்கதை, பாபிலோனியப் புராணத்தில் இஸ்தர் தாய் தெய்வத்தின் அன்புக்குரிய தமுஸின் மரணமாகச் சித்தரிக்கப்படுகிறது.
அடுத்ததாக, எகிப்திலிருந்து இசிஸ் (Isis) மற்றும் ஒசிரிஸ் (Osiris) கதை வருகிறது. பொறாமை கொண்ட சகோதரன் ‘செட்’டால், கடவுள் ஒசிரிஸ் வேட்டையாடப்படுகிறார். இசிஸ் அவரைத் தேடிச் செல்கிறார். இறந்திருந்த ஒசிரிஸின் ஆண்குறியைக் கொண்டு மகன் ஹேரஸை கருத்தரிக்கிறார். பின்னர், ஒசிரிஸ் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாதாள உலகின் அரசனாகிறார். இவர்களை ஒத்த கடவுளர்களும், கதாநாயகர்கள் அல்லது வீரர்களும் மரணமுற்றும், மீண்டும் உயிர்ப்பெற்றும் வரும் நிகழ்வுகளை நாம் மெடிட்டரேனியன் மற்றும் பண்டைய கிழக்கு நாடுகளான ஆடோனிஸ் (சிரியா மற்றும் கிரீஸ்), அட்டீஸ் (அனடோலியா), ஓர்பிய்ஸ் (கிரீஸ்), மித்ராஸ் (பெர்சியா மற்றும் ரோம்) பகுதிகளில் இருந்தும், இறுதியாக கிறிஸ்து வரையும் காணமுடிகிறது.
இவை யாவும், மரணம் மற்றும் மறுஉயிர்ப்பு என்ற ஒத்திசைவான பொருளைத் தம்முள் கொண்டுள்ளன. இளவேனில் காலத்தில் கடவுள், மனிதனாக வளர்ந்து, கோடையில் ஆட்சிபுரிந்து, நிலை சரிந்து, பின்னர் இறுதியில் குளிர்கால கதிர்மண்டல திரும்புமுகக் காலமான சங்கராந்திக் காலத்தில் மீண்டும் மறு உயிர்பெறவே மரணமடைகிறார். ஓர் உள்ளார்ந்த அடிப்படை உண்மையான உயிர்வாழ்தல், இதன் ஆழமான பொருளில் உள்ளது, அதாவது, முதியோரின் மரணமே புதிய உயிரை எழுப்புகிறது. (இதனை நம் மரபில் மூத்தோர் ஆசீர்வாதம், மூத்தோரின் வளம் என அனைத்தும் சந்ததிக்குக் கிடைக்கிறது என்பதுடன் காண, நம் மரபுக்கு நெருங்கி வருகிறது).
இது, விவசாயிகள் நன்கு அறிந்தது. அதாவது, உரமேற்றி உழுது தரிசாக விடப்பட்ட காலம் (இது நிலத்தை உழுது பரம்படித்து ஓராண்டு பயிரிடப்படாது விடப்பட்ட தரிசுக்காலத்தை குறிப்பதாகும்), விளைச்சல் பூமிக்கு முக்கியமானது என்பதாகும். எனவே, நம் முன்னேர்கள், வளமையைக் குறிக்கும் கடவுளர்கள் / அரசர்கள் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் மரணிக்க வேண்டும் என்று நம்பினர். இந்தவகையில் காளை, உயிரின் விதையாக, மிகச் சரியாக, வலிமைக்கும் வீரியத்துக்கும் அரசநிலைக்கும் குறியீடாகக் காணப்பட்டது. அவரது (கடவுள்/அரசன்) ரத்தம், உலகத்தைப் புதிப்பித்தது.
நமது முன்னோர்கள், அவரது (கடவுள்/அரசன்) மரணத்தை ஒரு காளையைப் பலி கொடுத்துச் சித்தரித்தனர். சிலபொழுது, ஒரு மரணித்த கடவுள்/அரசனின் உருவம் செய்து, ஒரு படகில் வைத்து ஆற்றில் மூழ்கவிட்டும் சித்தரித்தனர். அரிதாக, நரபலியும் வழக்கில் கொள்ளப்பட்டது. காளை, காளை பலி மற்றும் வளமையும் குறித்த பல தொல்பொருள் தடயங்கள் கிடைத்துள்ளன. (இதுபற்றிய தகவல்களை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்). (*அடைப்புகள் இருப்பவை, நமது மரபுடன் தொடர்புபடுத்தி அறிய 'யுத்தபூமி' ஆசிரியரால் குறிக்கப்பட்டவை. பிற செய்திகள், கிரேக்க. ரோமானிய புராண, இதிகாசங்களின் தொகுப்புகளில் இருந்து திரட்டப்பட்டவை).
புதிர்ப்பாதையின் பன்முகத்தன்மையை அறிய உதவும் தீசியஸ் மற்றும் மினோடோரின் கதை அறிவோம்.
'கடலில் இருந்து பொசைடன் (Poseidon), கீரிட்டின் அரசன் மினோஸுக்கு (Minos) அற்புதமான ஒரு வெண்மை நிறக் காளையை வழங்கினார். அரசன் அக்காளையை கடவுளுக்குப் பலி கொடுக்க வேண்டும். ஆனால், அரசன் அதனை தன்னிடமே வைத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக வேறு ஒரு காளையைப் பலி கொடுத்தான். இதனை அறிந்த பொசைடன், அவன் மனைவி பசிபே (Pasiphae)-வை, அந்தக் காளை மீது காதல் வயப்படச் செய்து மினோஸை தண்டித்தார். அவள், தன் இச்சையை அடக்கமுடியாது, அந்தக் காளையுடன் புணர்ந்து, பாதி காளை உருவும், பாதி மனித வடிவும் கொண்ட அஸ்டிரியஸ் (Asterius) என்ற ஒரு மகனை ஈன்றாள். அவன் மினோடோர் (Minotaur) என்று அழைக்கப்பட்டான்.
அஸ்டிரியஸ் என்பதற்கு விண்மீன் போன்று ஒளிபொருந்தியவன் (Starry) என்பது பொருள். இது, கடவுள் தன்மையை குறிப்பதாகும். மினோஸ் நடந்ததை அறிந்தான். அவன், தன் மனைவி ஈன்ற முரணுருவனை (இயல்பற்ற, அச்சம் தரும் முரண் உருவன் = Monster), டியடலஸ் என்ற கட்டடப் பொறியாளரைக் கொண்டு வடிவமைத்த புதிர்ப்பாதையில் (Maze Type) சிறை வைத்தார். ஒன்பது வருடங்களுக்கு ஒருமுறை, ஏத்தேனின் (Athen) ஏழு இளைஞர்களையும், ஏழு கன்னிகளையும் புதிர்ப்பாதையில் உள்ள மினோடோருக்குக் காணிக்கையாக அனுப்ப வேண்டும் என்று உத்திரவிட்டிருந்தார் மினோஸ்.
ஒரு வருடம், தீசியஸ் (ஏத்தேனின் இளவரசன்) அதனை வெற்றி கண்டுவர வஞ்சினம் கொண்டான். தானும் ஒருவனாக, முரணுருவனுக்குக் காணிக்கையாகச் சென்றான். கீரிட் தீவை அடைந்த தீசியஸை, அவனிடம் காதல் கொண்டிருந்த அரியடேன் (Ariadan) (மினோஸுக்கும் பசிபேவுக்கும் பிறந்தவள்) வரவேற்றாள். அவள் அவனிடம், புதிர்ப்பாதையில் இருந்து வெளியேறும் வழியை அமைத்துக்கொள்ள உதவும் தங்க நூல்பந்து ஒன்றை அளித்தாள். தங்க நூல்பந்துடன், குறுவாள் ஒன்றுடன் புதிர்ப்பாதைக்குள் சென்ற தீசியஸ், முரணுருவனை வென்று வழியில் விட்டுச்சென்ற நூலைப் பின்தொடர்ந்து, புதிர்ப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி, அரியடேனுடன் நாசோசஸ் (Naxos) என்ற தீவுக்குத் தப்புகிறான்.
ஏத்தேனின் அரசனாக முடிசூட்டிக்கொள்ளும் முன்னர், அத்தீவிலேயே அரியடேனை கைவிட்டுச் செல்கிறான். இக்கதை, பிற்காலத்தில் பல சிறு சிறு மாற்றங்களைப் பெற்றது. போலவே, காளைக் கடவுளும் பல சிறு சிறு மாற்றங்களைப் பெற்றார். கிரேக்கக் கடவுளர்கள் ஜீயஸ், பொசைடன், டையோநைசஸ் ஆகியோர், ஏதோ ஒரு கட்டத்தில் காளை உருவைக் கொள்கின்றனர். நாகரிகத்தில் முந்தையதாகக் கருதத்தக்க சிந்துவெளி நாகரிகத்திலும், காளைக் கொம்புகளைப் பூட்டிய சிவன் என்று கருதப்படும் முத்திரைகள், அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன.
புதிர்ப்பாதையில், முரணுருவன் இடம்பெறும் கதையும், புதிர்ப்பாதை ஒரு சிறைக்கூடமாவதும், அதன்மூலம் புதிர்ப்பாதை ஒரு பாதுகாப்புமிக்க அரண்கொண்ட கோட்டை என்று அறியவந்ததும் இதனை அடியொற்றியே ஆகும்.
கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை குறித்தும் மக்கள் ஒரு தொன்மக் கதையை நினைவுகூர்கின்றனர். அது, 'அரசனால் சிறைவைக்கப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட பெண்' குறித்ததாக உள்ளது.
உலகம் தழுவிய நாட்டுப்புறவியல் ஆய்வு நூலான 'பொன்னாலான பெருங்கிளை' (The Golden Bough - உண்மையில் இந்நூலின் தலைப்பை 'விலைமதிப்பற்ற மரக்கிளை' என்று மொழிபெயர்ப்பதுதான் சரியானது என்று தோன்றுகிறது) நூலை எழுதிய சர் ஜேம்ஸ் ப்ரேசர், புதிர்ப்பாதையில் நடனமாடிய அரியடேனின் நடனம், ‘வானத்தில் சூரியனின் சுற்றுப்பாதையைக் சுட்டும் குறியீடு’ என்று, ‘இறந்துகொண்டிருக்கும் கடவுள்’ (The Dying God) என்ற பகுதியில் குறிப்பிடுகிறார். இது, தன்னிகற்ற ஒளிப்பிழம்பு தன் கதிர்களை வீரியத்துடன் செலுத்துவதற்கு ஒத்திசைவான மந்திரம் (sympathetic Magic) போன்றது என்று குறிப்பிடுகிறார்.
அவர், சில்கோட்டின் இந்தியர்கள் (!), சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளும் ஒரு நடைமுறையான, ஒரு வட்டத்தைச் சுற்றியபடி நடந்து, கோல் மீது கவிழ்ந்து சூரியன் வட்டப்பாதையில், கிரகணத்தின் விளைவில் ஒளி குன்றிய சூரியனுக்கு, தன் முழு வலிமையுடன் தனது பயணத்தைத் தொடர உதவுவது போன்ற செயலை நமது கவனத்துக்குக் கொண்டுவருகிறார். அதாவது, சூரிய கிரகணத்தின்போது தடைபட்ட அதன் வீரார்ந்த பயணத்தை, தடைகளில் இருந்து விடுபட்டுப் பயணத்தைத் தொடர உதவுவது போலச் செய்து காட்டும் அல்லது ஒத்திசைவான செயலை மேற்கொள்ளும் பழங்குடிகளின் நம்பிக்கையான செயல் போன்றது. (Sir James Frazer, The Golden Bough, Temple of Earth Publishers p.77b, or Macmillan & co part-3, & Matthews, Maze ad the Labyrinths, 1922, p.160.)
புதிர்ப்பாதைகளின் ஊடே பயணம் செய்வது என்பது அண்டவெளியில் நட்சத்திரங்களுடன் பயணிப்பது போன்றது; ஏகாந்தமாய் பிரபஞ்சவெளியில் சஞ்சரிப்பது (Cosmic) என்பதான ஆய்வுகள், சென்ற நூற்றாண்டு துவங்கி இன்றுவரை வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
இங்கு ஆனந்த குமாரசாமி அவர்கள், சிவனுடைய தாண்டவ நடனம் குறித்து குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. 'இது, சிவனுடைய தாமசிக மூர்த்தமான வைரவர் அல்லது வீரபத்திரர் ஆடும் நடனம். இங்கே, பூதகணங்கள் சூழப் பத்துக் கரங்களை உடைய சிவபெருமான், தேவியோடு சுடலையில் நடனமாடுகிறார். புவனேசுவரம், எல்லோரா, எலிபன்டா ஆகிய இடங்களில் இந்த நடனத்தைக் காட்டும் பழைய சிற்பங்கள் பல உண்டு. தாண்டக் கடவுள், நள்ளிருளில் மயானத்தில் பூதகணங்களோடு செய்யும் நடனம், தாண்டவமாகும். (பாதிக் கடவுளும் பாதிப் பூதமுமாயுள்ளதொரு தெய்வத்தின் நடனமாகும்). மயானத்தில் சங்கரன் ஆடுவதாகவும், தேவியும் அதில் கலந்துகொள்வதாகவும், பிற்காலத்துச் சைவ சாக்த இலக்கியங்கள் குறிப்பிடுவதோடு, அந்நடனத்துக்கு மனத்தைக் கவரக்கூடிய ஆழ்ந்த பொருளையும் கற்பிக்கின்றனர்'. (ஆனந்த குமாரசாமி, சிவானந்த நடனம், (தமிழில்), 1980, ப. 76).
சிவனின் ஏழு தாண்டவங்களும் இவ்வாறான உள்ளார்ந்த பொருளைக் கிளர்த்தியிருப்பவை என்றும், திருநடனங்கள் பஞ்ச கிருத்தியங்களைக் குறிக்கும் என்றும், அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும் என்று சுட்டிக்காடுவது, புதிய கற்காலத்தில் இருந்து வளர்ந்து வரும் ஒரு தொன்மையைச் சுட்டிக்காட்டுவதாகக்கொள்ள இடமுண்டு.
காதல் மரணம் மறுபிறப்பு – காட்டும் சடங்கு
டிராக்லிடெல்லா (Traglitella) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மது சாடியில் வரையப்பட்டுள்ள புதிர்ப்பாதையுடன் கூடிய சித்திரங்கள், ஒரு அரசனின் திருமணச் சடங்கு மற்றும் பூசாரிணியையும் காட்சிப்படுத்துகிறது. இந்த ஓவியத் தொகுப்பில், அரசனின் மரணத்தையும், புதிர்ப்பாதையில் இருந்து மறுபடி உயிர்பெறும் காட்சியும் இடம்பெறுகிறது.
மத்தியில் இருந்து காட்சியின் வரிசைப்படி, அரசன் ஏழு வீரர்களுடன் காட்சியளிக்கிறான். (இது, தீசியஸின் ஆண் கூட்டாளிகளைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம்). அவன் ஒரு முட்டையைப் பூசாரிணியிடம் அளிக்கிறான். பதிலாக, பூசாரிணி அவனுக்கு ஆப்பிள் என்று கருதப்படும் ஒரு பழத்தை அளிக்கிறாள். மேலும், இவ்விரு காட்சிக்கு இடையில், அவள் நடனமாடும் நிலை போன்று சிற்றுருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்த காட்சியில், பூசாரிணி புணர்ந்த நிலையில் இருக்கும் இரு காட்சிகளை குறிப்புணர்த்துகிறாள்.
அக்காட்சியின் தொடர்ச்சியாக, புதிர்ப்பாதையில் இருந்து வெளிவருவது போன்று குதிரையின் மீது அமர்ந்த இரு வீரர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வீரனின் குதிரையின் முதுகில் விலங்கு உருவம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது, புதிர்ப்பாதை அல்லது பாதாள உலகின் படைப்புயிர் ஆகலாம். இறுதிக் காட்சியில், நிர்வாணமாகக் கையில் தடியொன்றை பிடித்து நிற்கும் அசரன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். தடி, அதிகாரத்தின்/ஆட்சியின் குறியீடு ஆகும். சாடி வட்டத்தின் சுழற்சியில் அடுத்த காட்சி, முன்னர் விவரித்த ஏழு வீரர்களுடன் தொடர்கிறது.
இது அரசன், காதல், இறப்பு, மறுபிறப்பு என்ற தொன்மை சிந்தனையின் குறிப்புகள் என்று கருதலாம்.
புதிர்ப்பாதைகளின் பெயர் வழக்குகள்
உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் புதிர்ப்பாதைகள், இடத்துக்கு இடம், வேவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது அல்லது அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது. இது குறித்து, தடிமனான புத்தகமாக விரியும் அளவுக்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; நடந்து வருகின்றன. எந்த ஒரு சொல் பிறப்பியல் பள்ளியும், இன்னொரு சொல் பிறப்பியல் பள்ளியின் கருத்தை ஏற்பதில்லை. இவற்றுள், நமக்கு நெருக்கமாக உள்ள சில ஆய்வுகளைக் கணக்கில் கொள்வோம்.
ஆசியா மைனர் பகுதிகளின் பண்டைய மொழியில் ‘Labrys’ என்ற சொல்லுக்கு ‘கோடாரி’ (axe) என்பது பொருள். இது, இறைவன் (Zeus Labrandeus or Zeus Strations) கையில் உள்ள ஒரு குறியீடுப் பொருள். இப்பகுதிகளில், மிகுதியான அளவில் இருமுகக் கோடாரிகளின் கண்டிபிடிப்பு, இது ஒரு வழிபாட்டுச் சின்னமாக இருந்திருக்கலாம் என்று ஏற்கப்படுகிறது.
இந்த இருமுகக் கோடாரி, இந்துக் கடவுளான சிவனின் கையில் உள்ள ‘வஜ்ரம்’ என்ற ஆயுதத்துடன் ஒப்பு நோக்கக்கூடியது என்பார் (Kern).
*
நெய்தல் நிலப் பினிசீயர், இதனை அரக்கர்போலும் வலிமை உடையவர்களின் அரண் என்று பொருள்படும் ‘ஜடுலின்டார்ஹா’ (Jatulintarha = Gaint’s Fence) என்றும் புனிதர் பீட்டரின் தந்திரம் என்று பொருள்படும் ‘பீட்டரின்லெய்க்கி’ (Pietarinleikki = St. Peter’s Game) என்றும் மிகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.
ஹெல்சிங்கிபோரைச் சுற்றி வசிப்பவர்கள், இதனை ‘ஜெருசலேம் இடிபாடு’, ‘நினெவே நகரம்’, ‘ஜெரிக்கோவின் அரண்’ (Ruins of Jerusalem, City of Nineveh, Walls of Jerico) என்றும், அதற்கு அண்மையில் உள்ள வீபோர்க்கினர், அரக்கர்போல் வலிமையுடையோர் தெரு என்று பொருள்படும் ‘ஜடின்கடு’ (Jatinkatu = Gaints Street) கல் அரண் என்று பொருள்படும் ‘கிவிடார்ஹா’ (Kivitarah = stonefence) என்றும் அழைகின்றனர்.
ஐஸ்லாந்தில் மண்கொண்டு அமைக்கப்படும் புதிர்ப்பாதை வடிவங்கள், ‘விலேண்டின் வீடு’ (Volundarus = Wieland’s or Weyland’s Hosue) என்று அழைக்கின்றனர்.
நார்வே மற்றும் சுவீடன் தேசத்தவர், நன்னின் அரண் என்று பொருள்படவும் (Nunnentarha), கன்னியின் நடனம் (Junfrudans Dance = Maiden’s Dance) என்றும், வட்டக் கோட்டை (Runborg = Round Castle) என்றும், கட்டேகட் தீவுவாசிகள், ‘டிராலின் அல்லது அரக்கன்போல வலிமையானவன் கோட்டை’ (The Troll’s or Giant’s Castle) என்றும் அழைக்கின்றனர். இருந்தும், ‘டிராய் நகரம்’ என்னும் பொருள் படவும் (Trojenburg, Trojenborg, Troborg) அழைக்கின்றனர்.
கவனிக்கத்தகுந்த மற்றொரு பெயர், 'கல் நடனம்’ (Stone Dance) ஆகும். பிமா இந்தியர்கள் மத்தியில், குழந்தைகள் விளையாட்டில் இது அவர்களது புராண கதாபாத்திரமான 'சுக்கூவின் வீடு’ என்று பொருள்பட, சுகிஹிகி (Tcuhiki = House of Tuchu) என்றும் அழைக்கப்படுவதைக் காண முடிகிறது.
இந்தியாவில் இதன் பெயர், பொதுவில் கோட்டை என்றும், மண்டலம் என்று முடிவதைக் காணமுடிகிறது. பிஜப்பூர் அருகில் சித்திமணி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட புதிர்ப்பாதையானது, ‘லட்சுமண் மண்டல்’ என்று அழைக்கப்படுகிறது. கம்பைநல்லூர் - வெதரம்பட்டி புதிர்ப்பாதை, ‘ஏழுசுத்துக்கோட்டை’, ‘ஏழுகல்கோட்டை’ என்று அழைக்கப்படுவதும் நினைவுகொள்ளத்தக்கது.
லட்சுமண் மண்டல் - புதிர்ப்பாதை
மண்டல் என்பது மண்டலம் என்பதன் குறுக்கம் ஆகும். இப்பெயர், பலவகையில் நமக்கு முக்கியமானது.
ஐரோப்பிய வரைகலை வடிவங்கள் நீங்கிய பிற புதிர்ப்பாதை வடிவங்கள், புராண சித்தரிப்புகளில் இருந்து பயிற்சிக் கள மாதிரி வடிவங்களாக வடிவமைக்கப்பட்டவை. இவை படைக்கப்பட்டபோது, அநேகமாக அவை அவற்றின் தொல்குடித் தோற்றக் காலப் பொருளை இழந்துவிட்டன.
சிறை அல்லது அரண் என்ற கோட்டை என்ற பொருள் மிக்க வலிமை கொண்டதாக, இக்காலத்தில் புதிர்ப்பாதைகளின் வடிவங்களுக்கு வழங்கப்பட்டன.
இங்கு சில ரோம புராண வடிவங்களின் புதிர்ப்பதைகளின் வடிவங்களும், இந்திய மந்திர, தந்திர, யந்திரங்களின் புதிர்ப்பாதையை ஒத்த வடிவங்களும் தரப்பட்டுள்ளன. இவற்றின் வடிவமைப்பு ஒற்றுமையே நமக்குச் சிலவற்றை விளக்கவல்லவை.
(4th Cen. CE, Kingston upon Hull, Harpham, England - Labyrinth)
(325 CE, Roman Labyrinth in Cathedral Algiers)
(150 - 200 CE, Roman type Mosaic Labyrinth, Annaba - Algeria)
(1602 - 1608, Germany, Reconstruction of the Egyptian Labyrinth by Athanasius Kircher - A Roman Model)
(200 - 250 CE, Blois, France, Romam theme Labyrinth)
(1000 BCE, Francavilla, Clay Tablets)
(பைரவ பிரதிஷ்டா யந்திரம் - இந்தியjf புதிர்ப்பாதை மாற்று வடிவம்)
(பைரவ பிரதிஷ்டா யந்திரம் - இந்தியjf புதிர்ப்பாதை மாற்று வடிவம்)
(ஸ்ரீ நகரத்தின் உலோகக் கோட்டைகள் - இந்தியப் புதிர்ப்பாதை மாற்று வடிவம்)
(ஸ்ரீ நகரத்தின் மகாபத்பமாடவீ பிராகாரங்கள் - இந்தியப் புதிர்ப்பாதை மாற்று வடிவம்)
(வசீகரண யந்திரங்கள் - இந்தியப் புதிர்ப்பாதை மாற்று வடிவம்)
இந்திய வடிவங்களுக்கும், உலகின் பிற பகுதி வடிவங்களுக்கும் உள்ள வடிவ ஒற்றுமை, புதிர்ப் பாதைகளின் பலவகைப் பயன்பாட்டை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. புதிர்ப்பாதைகளின் மீதான பொருள் கொள்ளல், தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளது. ஆனால், அடியொட்டமான வளமை என்ற பொருள், ஆதிகாலம் தொட்டே தொடர்வதை அறியமுடிகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.