அத்தியாயம் 22 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 15

ஒரு பல்கூட்டு ஈமச்சின்னத்தில் குழி வடிவத்தை அறிவதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தனித்து அடையாளம் ஆகும் குழிவடிவமே ஒரு பல்கூட்டு வடிவத்தில் முதன்மைச்சின்னமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நிலத்துக்குக் கீழ் தோண்டி உருவாக்கப்படும் எல்லா ஈமச்சின்ன வகைகளும், குறிப்பாக தாழி, பேழை மட்டுமல்லாது...
அத்தியாயம் 22 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 15
Updated on
8 min read

பல்கூட்டு ஈமச்சின்னங்கள்

இரண்டு முதன்மை ஈமச்சின்னங்கள் மற்றும் அரண் உறுப்புகளும் அலங்கார உறுப்புகளும் இடம்பெறும் ஈமச்சின்னங்கள், “பல்கூட்டு ஈமச்சின்னங்கள்” என்று தனித்து அடையாளம் காணப்படுகிறன.

பல்கூட்டு ஈமச்சின்னங்களில் முதன்மை அலகான ‘‘குழி’’ சின்னமானது, “தாழி” மற்றும் “பேழை” ஈமச்சின்னங்களுடனும், “தாழி” மற்றும் “பேழை” ஆகிய இரு முதன்மை ஈமச்சின்னங்களும் பிற மூன்று முதன்மை ஈமச்சின்னங்களாகிய “கல்பதுக்கை, கல்திட்டை, கல்பதுக்கை போன்ற கல்திட்டை” ஆகியவற்றுடன் இணைந்து பல்கூடு ஈமச்சின்னங்களை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. இதனுடன் அரண் உறுப்புகளும் அலங்கார உறுப்புகளும் இணைக்கப்பெற்று ஒரு முழுமையான பல்கூட்டு ஈமச்சின்னம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பல்கூட்டு ஈமச்சின்னத்தில் குழி வடிவத்தை அறிவதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தனித்து அடையாளம் ஆகும் குழிவடிவமே ஒரு பல்கூட்டு வடிவத்தில் முதன்மைச்சின்னமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நிலத்துக்குக் கீழ் தோண்டி உருவாக்கப்படும் எல்லா ஈமச்சின்ன வகைகளும், குறிப்பாக தாழி, பேழை மட்டுமல்லாது கல்பதுக்கை மற்றும் கல்பதுக்கை போன்ற கல்லறையின் எல்லா வடிவங்களும் குழியை ஒரு அலகாகக் கொண்டு இருப்பதுதானே என்ற மயக்கம் தரும் சிந்தனையையோ அல்லது ஒரு வாதத்துக்கான கருத்துருவத்தையோ தரலாம். அதாவது, உண்மையில் குழி அமைப்பில்தானே பிற முதன்மை அலகுகள் (கல்திட்டை அலகு நீங்கலாக) அமைக்கப்படுகின்றன. ஆதலால், எல்லாக் கூட்டு மற்றும் பல்கூட்டு ஈமச்சின்னங்களும் முதன்மை அலகான குழியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டவையே என்று வாதிக்கலாம்.

உண்மையில், நிலத்தைத் தோண்டி உருவாக்கப்படும் பிற வகை ஈமச்சின்னங்களில், குழி ஒரு சின்னமாகத் தனித்து அடையாளமாவதில்லை. இந்நிலையில், தோண்டப்படும் குழியின் பயன் என்பது சின்னத்துக்கு ஒரு அரண் உறுப்பின் பயன் போன்றதே. ஆனால், குழி ஒரு அரண் உறுப்பு அல்ல. இதன் காரணமாகவே, பல்கூட்டு ஈமச்சின்னத்தின் குழியை அடையாளப்படுத்திக்கொள்வதில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது. ஈமச்சின்னத்தில் முதன்மை அலகுகளின் செயல்பாடு மற்றும் அமைக்கும் நோக்கத்தின் அடிப்படையில், பல்கூட்டு வடிவத்தில் இடம்பெறும் குழியின் பயன்பாடும் நோக்கமும் வேறுபட்டது என்பதை உணருவதில் இத்தெளிவு உள்ளது. ஒரு சிறிய உதாரணம் காட்டலாம் எனில், இது நிலத்தைத் தோண்டி தாழ்வறை ஒன்றை உருவாக்குவதற்கும், கடைக்கால் ஒன்றுக்கு நிலத்தை தோண்டுவதற்கும் உள்ள வித்தியாசம் எனலாம்.

இந்தவகையில், பல்கூட்டு ஈமச்சின்னங்களை கீழ்க்கண்டவாறு அமைக்கமுடியும் என்ற ஒரு கொள்கை முடிவை உருவாக்கலாம். அதாவது, “இரு முதன்மை உறுப்புகள் மற்றும் அரண் உறுப்புகளும் அலங்கார உறுப்புகளும் இணைந்து ஒரு பல்கூட்டு ஈமச்சின்னத்தை அமைக்கின்றன. இவ்வமைப்பில் முதன்மை அலகான குழியானது தாழி, பேழையுடன் இணைந்தும், தாழியும், பேழையும் ஆகிய இரு முதன்மை அலகுகளும் கல்பதுக்கை, கல்திட்டை, கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஆகியவற்றுடன் இணைந்து அரணுறுப்புகளான, கல்நிரவல், கல்சுவர் மற்றும் அலங்கார உறுப்புகளான உருளைக் கல்வட்டம், பலகைக் கல்வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு, குத்துக்கல் போன்றவை இடம்பெறுகின்றன”.

இங்கு குறிப்பிடும் வடிவங்களை, கொள்கை முடிவு என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. இங்கு குறிப்பிட்டுள்ள கொள்கை முடிவில் அடைந்த எல்லாவகையான ஈமச்சின்னங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அகழாய்வுகளே ஈமச்சின்னங்களின் வடிவங்களை முழுமையாக வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன என்பதாலும், வெளித்தோற்றத்தில் மண்குவையும், கல்திரளும், கல்குவையும், பரல் உயர் அடுக்கும், குத்துக்கல்லும் தெரிய, முதன்மை அலகுகளோ, அவற்றின் கூட்டோ புலனாவதில்லை என்பதை நினைவில் கொண்டு பார்க்கும்போது, இந்நாள் வரை அடையாளப்படுத்தியுள்ள கூட்டு மற்றும் பல்கூட்டு வடிவங்கள் எண்ணிக்கையில் குறைவே எனலாம். இப்பின்புலத்தில், பல்கூட்டு வடிவத்தில் இங்கு கொள்கை முடிவாகக் குறிக்கப்பெற்ற வடிவங்களை விடவும், கூடுதலான சிறப்புகள் அல்லது உறுப்புகள் கொண்ட ஈமச்சின்னங்கள் கிடைக்கப்பெறலாம் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

எனில், ஈமக்குழியை முதன்மை அலகாகக் கொண்ட பல்கூட்டுச் சின்னங்களாகக் கீழ்க்கண்ட வகையினங்களை உருவாக்க முடியும் என்ற ஒரு கொள்கை முடிவுக்கு வரலாம்.

குழி தாழியுடன் இணைந்து உருவாகும் ஈமச்சின்னங்கள் சில –

(முதன்மை அலகுகள், அரண் / அலங்கார உறுப்புகள், உருவாகும் ஈமச்சின்னத்தின் பெயர் என்ற வரிசையில்…)

  • குழி - தாழி, குழித்தாழி;

  • குழி – தாழி, மண்குவை, குழித்தாழி மண்குவை;

  • குழி - தாழி, மண்குவை, குழிவட்டம் (அ) வாய்க்கால் வட்டம், குழித்தாழி மண்குவை குழிவட்டம் (அ) குழித்தாழி மண்குவை வாய்க்கால் வட்டம்;

  • குழி - தாழி, பரல் உயர் அடுக்கு, குழித்தாழி பரல் உயர் அடுக்கு;

  • குழி - தாழி, பலகைக் கல் – கல்வட்டம் – குத்துக்கல்,  குழித்தாழி பலகைக் கல்வட்டக் குத்துக்கல்.

இவ்வாறே, குழிச் சின்னம் பேழையுடன் இணைந்து மேற்கண்டவாறு பலவகையான பல்கூட்டு ஈமச்சின்னங்களை உருவாக்க முடியும். உம்:

  • குழி + பேழை = குழிப்பேழை

  • குழி + பேழை + உருளைக் கல்வட்டம் = குழிப்பேழை உருளைக் கல்வட்டம்

  • குழி + பேழை + பலகைக் கல்வட்டம் = குழிப்பேழை பலகைக் கல்வட்டம்

  • குழி + பேழை + பலகைக் கல்வட்டம் = குழிப்பேழை பலகைக் கல்வட்டம்

  • குழி + பேழை + உருளைக் கல்வட்டம் + பரல் உயர் அடுக்கு = குழிப்பேழை உருளைக் கல்வட்டப் பரல் உயர் அடுக்கு.

  • குழி + பேழை + உருளைக் கல்வட்டம் + குத்துக்கல் = குழிப்பேழை உருளைக் கல்வட்டக் குத்துக்கல்.

பல்கூட்டுச் சின்னங்களில் மற்றொரு வகையினத்தில், தாழியும் கல்பதுக்கையும் இணைந்து கீழ்க்கண்டவாறு சின்னங்கள் அமையலாம்.

(முதன்மை அலகுகள், அரண் / அலங்கார உறுப்புகள், உருவாகும் ஈமச்சின்னத்தின் பெயர் என்ற வரிசையில்…)

  • தாழி - கல்பதுக்கை, தாழிக் கல்பதுக்கை;

  • தாழி - கல்பதுக்கை, கல்குவை - குழிவட்டம் (அ) வாய்க்கால் வட்டம், தாழிக் கல்பதுக்கை கல்குவை குழிவட்டம் (அ) தாழிக் கல்பதுக்கை கல்குவை வாய்க்கால் வட்டம்;

  • தாழி - கல்பதுக்கை, பரல் உயர் அடுக்கு, தாழிக் கல்பதுக்கை பரல் உயர் அடுக்கு;

  • தாழி - கல்பதுக்கை, உருளைக் கல்வட்டம் - பரல் உயர் அடுக்கு, தாழிக் கல்பதுக்கை உருளைக் கல்வட்டப் பரல் உயர் அடுக்கு.

  • தாழி- கல்பதுக்கை, பலகைக் கல்வட்டம் - குத்துக்கல், தாழிக் கல்பதுக்கை பலகைக் கல்வட்டக் குத்துக்கல்.

இவ்வாறே, முதன்மை அலகாகிய தாழிக் கல்திட்டையுடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பல்கூட்டு வடிவ ஈமச்சின்னங்களை உருவாக்க முடியும்.

(முதன்மை அலகுகள், அரண் / அலங்கார உறுப்புகள், உருவாகும் ஈமச்சின்னத்தின் பெயர் என்ற வரிசையில்…)

  • தாழி - கல்திட்டை, தாழிக் கல்திட்டை;

  • தாழி - கல்திட்டை, மண்குவை, தாழிக் கல்திட்டை மண்குவை;

  • தாழி - கல்திட்டை, உருளைக் கல்வட்டம் - கல்குவை, தாழிக் கல்திட்டை உருளைக் கல்வட்டக் கல்குவை;

  • தாழி - கல்திட்டை, பலகைக் கல்வட்டம் - கல்குவை திரள், தாழிக் கல்திட்டை பலகைக் கல்வட்டக் கல்குவை திரள்;

  • தாழி - கல்திட்டை, உருளைக் கல்வட்டம் - பரல் உயர் அடுக்கு, தாழிக் கல்திட்டை பலகைக் கல்வட்டப் பரல் உயர் அடுக்கு.

இவ்வாறே முதன்மை அலகாகிய தாழி கல்பதுக்கை போன்ற கல்திட்டையுடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பல்கூட்டு வடிவ ஈமச்சின்னங்களை உருவாக்க முடியும்.

(முதன்மை அலகுகள், அரண் / அலங்கார உறுப்புகள், உருவாகும் ஈமச்சின்னத்தின் பெயர் என்ற வரிசையில்…)

  • தாழி - கல்பதுக்கை போன்ற கல்திட்டை, தாழிக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை;

  • தாழி - கல்பதுக்கை போன்ற கல்திட்டை, கல்குவை,   தாழிக் கல்பதுக்கை போன்ற கல்திட்டைக்  கல்குவை;

  • தாழி - கல்பதுக்கை போன்ற கல்திட்டை, உருளைக் கல்வட்டம் - மண்குவை, தாழிக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை உருளைக் கல்வட்ட மண்குவை;

  • தாழி - கல்பதுக்கை போன்ற கல்திட்டை, பலகைக் கல்வட்டம் - கல்குவை,      தாழிக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை பலகைக் கல்வட்டக் கல்குவை;

  • தாழி - கல்பதுக்கை போன்ற கல்திட்டை, உருளைக் கல்வட்டம் - பரல் உயர் அடுக்கு, தாழிக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை பலகைக் கல்வட்டப் பரல் உயர் அடுக்கு.

இவ்வாறே மற்றொரு முதன்மை அலகாகிய பேழை, பிற முதன்மை அலகுகளான கல்பதுக்கை, கல்திட்டை, கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஆகியவற்றுடன் இணைந்து மேற்கண்டவாறு மூன்று தொகுப்புகளில் பல்கூட்டு ஈமச்சின்னங்களை உருவாக்க முடியும் எனலாம். இவ்வாறெல்லாம் கூட்டு ஈமச்சின்னங்களை உருவாக்க முடியும் என்பது ஒரு கொள்கை முடிவே.

ஏனெனில், தென்னிந்தியா முழுவதும் பரவலாகவும் விரவியும் இருக்கும் பெருங் கற்படைச் சின்னங்கள் அகழப்பட்டு எல்லா வடிவங்களின் செய்திகளும் வெளிகொண்டுவரப்படவில்லை. தேர்ந்தெடுத்து அகழாய்வு மேற்கொண்டவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகை மாதிரியை வெளிப்படுத்துவதால். இங்கு ஒரு கொள்கை முடிவாகக் குறிக்கப்பட்டுள்ள பல்கூட்டு வடிவங்கள் அல்லது இன்னும் கூடுதல் குணங்களுடன் கிடைக்கும் வாய்ப்புகள் மிகுதி என மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

பேழைச் சின்னம் இடம்பெற்ற பல்கூட்டு ஈமச்சின்னங்களுக்குச் சுட்டுப் பெயரில் பேழையை இடம்பெறச் செய்து ஈமச்சின்னத்தின் பெயர்ச்சொல்லை அமைக்கலாம். உம்:

பேழை + கல்பதுக்கை = பேழைக் கல்பதுக்கை.

பேழை + கல்திட்டை = பேழைக் கல்திட்டை

பேழை + கல்பதுக்கை + மண்குவை = பேழைக் கல்பதுக்கை மண்குவை

பேழை + கல்பதுக்கை + உருளைக் கல்வட்டம் + கல்குவை = பேழைக் கல்பதுக்கை உருளைக் கல்வட்டக் கல்குவை

பேழை + கல்பதுக்கை + உருளைக் கல்வட்டம் + பரல் உயர் அடுக்கு = பேழைக் கல்பதுக்கை உருளைக் கல்வட்டப் பரல் உயர் அடுக்கு.

பேழை + கல்பதுக்கை + உருளைக் கல்வட்டம் + குத்துக்கல் = பேழைக் கல்பதுக்கை உருளைக் கல்வட்டக் குத்துக்கல்.

பேழை + கல்பதுக்கை போன்ற கல்லறை + உருளைக் கல்வட்டம் = பேழைக் கல்பதுக்கை போன்ற கல்திட்டை உருளைக் கல்வட்டம்.

இப்படியாக, பிற கூட்டுவடிவங்களின் பெயர்கள் அமைக்கலாம்.

ஒரே வகை முதன்மை ஈனச்சின்னங்களின் பல்கூட்டுவடிவம்

இதுவரை ஒருவகை முதன்மைச் சின்னம் மற்றொரு வகை முதன்மைச் சின்னத்துடன் சேர்ந்து உருவாகும் கூட்டு ஈமச்சின்னங்கள் குறித்து கண்டோம். கூட்டுவடிவங்களில் காணக்கிடைக்கும் மற்றொரு குணமான, ஒரே வகை முதன்மைச் சின்னங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை இணைந்து உருவாகும் பல்கூட்டு ஈமச்சின்னங்கள், அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட தாழிகளைக் கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட பேழைகளைக் கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட கல்பதுக்கைகள் கொண்டவை என்பன பல்கூட்டுச் சின்னங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை குறித்தும் வரும் அத்தியாயங்களில் காண இருக்கிறோம்.

***

இதுவரை ஒரு ஈமச்சின்னமானது, துவக்கத்தில் இருந்து படிப்படியாக தனி முதன்மை வடிவம், கூட்டுவடிவம், மற்றும் பல்கூட்டு வடிவம் என்று படிப்படியாக உருப்பெற்று வளர்ச்சி அடைந்த நிலைகள் குறித்து விளக்கப்பட்டது.

வளர்ச்சி நிலைகளின் படி அடுக்கை அமைக்க நான் இன்னும் முயற்சிக்கவில்லை. ஈமச்சின்னங்களின் வகை மாதிரிகளை அறிந்து ஒழுங்குபடுத்திக்கொள்ளாமலும், பெயர்வைப்பு முறைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளாமலும், ஈமச்சின்னங்களின் விவரிப்புகளில் துல்லியத்தை அடைந்துகொள்ளாமலும் இம்முயற்சியில் ஈடுபடுவது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.

நான் இங்கு குறிப்பிடும், 1. வகை மாதரிகள், 2. பெயர் மரபு, 3. விவரிப்பின் துல்லியம் ஆகிய மூன்று காரணங்களும், மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை என்ன பிரச்னையைத் தரும் என்று கருதலாம். நான் சந்தித்த பிரச்னைகள் குறித்து வரும் அத்தியாயத்தில் விவாதிக்க இருக்கிறேன்.

அதற்கு முன்னர், ஈமச்சின்னங்களில் குறிப்பாக கல்பதுக்கைக் கல்லறையில் உருவாக்கப்பெற்ற கூடுதல் அமைப்புகள், துணை அமைப்புகள் அவற்றின் வளர்ச்சியையும் அரண் உறுப்புகள் மற்றும் அலங்கார உறுப்புகளின் வளர்ச்சிகள் பற்றியும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஈமச்சின்னத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவாக்க வளர்ச்சியானது, உறுதித்தன்மையைக் கூட்டுவது, வசதிகளை உருவாக்குவது, அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவது மற்றும் தோற்றப்பொழிலை அளிப்பது என முதன்மையான நோக்கங்களைக்  கொண்டிருக்கின்றன. அதேசமயத்தில், இவை பல்வேறு வகையான தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் அவற்றின் வளர்ச்சிகளையும் நமக்கு அடையாளப்படுத்துபவையாக உள்ளன.

கல்பதுக்கையின் கூடுதல் வசதி அமைப்புகள்

ஈமச்சின்னங்களின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கல்பதுக்கையில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. கல்பதுக்கையில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் அமைப்புகளை இருவகையாகப் பிரித்து அறியலாம். அவை - 1. கல்பதுக்கைக் கல்லறைக் கூடுதல் அமைப்புகள், 2. கல்பதுக்கைக் கூடுதல் துணை அமைப்புகள்.

1. கல்பதுக்கைக் கல்லறைக் கூடுதல் அமைப்புகள்

ஒரு கல்பதுக்கையின் கல்லறையில் உட்புறமாக மேற்கொள்ளப்படும் கூடுதல் அமைப்புகள் “கல்பதுக்கைக் கல்லறைக் கூடுதல் அமைப்புகள்” எனக் குறிக்கலாம். இவ்வாறு மேற்கொள்ளப்படும் கூடுதல் அமைப்புகளில், கல்லறைப்பகுப்பும், விசிப்பலகை அமைப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை இடவசதியையும், பயன்பாட்டு வசதியையும் கூடுதலாக்குகின்றன.

கல்லறைப் பகுப்புகள்

ஒரு கல்லறையானது குறுக்குவாக்கிலோ நீளவாக்கிலோ மற்றொரு பலகைக்கல் கொண்டு தடுக்கப்பட்டு இரு அறைகளாக அமைக்கப்படுவதே கல்லறைப்பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. மூன்று அறைகள் கொண்டதாகவும் ஒரு கல்லறை பகுக்கப்படலாம். இவ்வாறு பகுத்தல், மூன்று சம அளவு கொண்ட அறைகளாகவோ அல்லது ஒரு அறை அரைப் பங்கு கொண்டதாகவும், மற்ற இரு அறைகள் கால் கால் பங்கு கொண்டவையாகவும் குறுக்குவாட்டிலோ அல்லது நீளவாட்டிலோ அமைக்கப்படலாம்.

இவை இவ்வாறு பகுக்கக் காரணங்கள் பல சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இரு அல்லது மூன்று ஈமங்களை வைக்க அல்லது இடுபொருட்களை வைக்க என்பது போன்ற காரணங்கள் வலுவாகப் பொருந்துகின்றன. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புகளுக்காகவும், கணவன் மனைவிக்கு எடுக்கப்பட்ட அமைப்பாகவும்கூட இவ்வாறு அமைத்திருக்கலாம். மூன்றாகப் பகுக்கப்பெற்றவை குழந்தைகளுக்குப் பெற்றோர் எடுக்கப்பட்டதாகலாம்.

விசிப்பலகை அமைப்புகள்

கல்பதுக்கைக் கல்லறை ஒன்றில் ஒரு பக்கத்தில் அல்லது இருபக்கங்களில் கல்லறையின் பாதி அளவு உயரத்தில் விசிப்பலகை போன்று பொருத்திவைப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இவை இடுபொருட்களை வைக்கவும், தாழி, பேழை ஆகிய ஈமச்சின்னங்களை வைக்கவும் பயன்படுத்த அமைத்திருக்கலாம். விசிப்பலகை அமைப்பை குடைவரை ஈமச்சின்னங்களிலும் காண்கிறோம். அதன் பயன்பாட்டு நோக்கமே இங்கும் பொருந்துகிறது.

2. கல்பதுக்கைக் கூடுதல் துணை அமைப்புகள்

ஒரு கல்பதுக்கைக்கு வெளியே அதனை ஒட்டியவாறோ அல்லது அருகிலேயோ மேற்கொள்ளப்படும் கூடுதல் அறை அல்லது பிற அமைப்புகள் இந்தப்பகுப்பில் கொண்டுவரப்படுகின்றன.

ஒட்டி அமைக்கப்பெறும் அமைப்புகள், மையக் கல்லறையின் நான்கு புறங்களிலோ அல்லது நான்கு மூலைகளிலோ அமைக்கப்படலாம். அருகில் அமைக்கப்படும் அமைப்புகள், கல்லறையைச் சுற்றி நான்கு புறமும் அமைக்கப்பெறலாம். ஒட்டி அமைக்கப்பெறும்போது, அரண் உறுப்புகளான கல்நிரவல் மற்றும் கல்சுவர் அமைப்புகள் கூடுதல் அமைப்புகளுக்கும் சேர்த்து அமைக்கப்பெறும். அருகில் தனியாக அமைக்கப்பெறும் கூடுதல் அமைப்புகளுக்குத் தனியாக அரண் உறுப்புகள் அமைக்கப்பெறும்.

அரண் உறுப்புகள் மற்றும் அலங்கார உறுப்புகளின் வளர்ச்சி

அரண் உறுப்புகளின் வளர்ச்சி, ஈமச்சின்னத்துக்குக் கூடுதல் பாதுகாப்பையும், உறுதித்தன்மையினை கூட்டுவதற்குப் பயன்படுகிறது. அலங்கார உறுப்புகளின் வளர்ச்சி தோற்றப்பொழிலை முதன்மைக் காரணமாகவும் உறுதித்தன்மைக்குப் பக்கபலமாக இருப்பதை கூடுதல் காரணமாகவும் கொண்டிருக்கின்றன. பிற்காலத்தில், வாய்க்கால் வட்டங்களும் கல்வட்டங்களும் சின்னத்தின் எல்லையை வரையறுக்கவும் பயன்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆறு வகையான முதன்மைச் சின்னங்களில் கூடுதலாக அமைக்கப்படும் எல்லாவகையான கூடுதல் கட்டுமானங்களும் அரண் உறுப்புகளாகவோ அல்லது அலங்கார உறுப்புகளாகவோ செயல்புரிபவை என்பதை நினைவுபடுத்திக்கொண்டு இவ்விரண்டின் வளர்ச்சிகளை இனி அறியலாம்.

கல்நிரவல் மற்றும் கல்சுவர் அமைப்புகள் முதன்மையான அரண் உறுப்புகளாகச் செயல்படுபவை. உருளைக் கல் மற்றும் பலகைக் கல் வட்டங்கள் அலங்கார வடிவமாக முதன்மைக் காரணமாகவும், அரணுறுப்பின் செயலை கூடுதல் நோக்கமாகவும் கொண்டிருப்பவை.

கல்பதுக்கைக் கல்லறையின் அளவின் விரிவும், பலகைக் கல்லின் கனத்தின் பெருக்கமும், மண்ணின் இலகுத்தன்மையும் அரணுறுப்புகளின் தேவையையும் விரிவாக்கத்தையும் வேண்டின எனலாம். பெரிதும் சிறிதுமான கூழாங் கற்கள் முதல் உருளைக் கற்கள் வரை கல்நிரவலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு வரிசை முதல் பல வரிசைகள் வரை கல்நிரவல் முறையாகயும் தாறுமாறாகவும் அமைக்கப்பட்டமையை சில அகழாய்வுகளும் சேதப்படுத்தப்பட்ட சின்னங்களும் காட்டியுள்ளன. பல வரிசை முறையில் நிரவலின்போது, கல்லறையை ஒட்டி பெரிய கற்களும், கல்வட்டம் அல்லது வாய்க்கால் வட்டம் நோக்கிச் செல்லச் செல்ல, சிறிய கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போலவே, கல் அடுக்குகளும் கல்லறையினை ஒட்டி பல அடுக்குகளும் அடுத்தடுத்த வரிசைகளில் கல் அடுக்கு உயரம் குறைந்தும் சரிவாகவும் அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. இந்த அமைப்பு, கல்லறையின் பலகைக் கற்கள் நேராகவும் வெளிப்புறமாகச் சரியாமலும் இருக்கப் பயன்படுகிறது.

ஸ்வஸ்திக் அல்லது எதிர்-ஸ்வஸ்திக் (கவஸ்திக்) அதாவது கடிகாரச் சுற்று முறை கடிகார எதிர்சுற்று முறையில் பலகைக் கற்களை நிறுத்துவது, அவை உட்பறமாக சரியாமல் இருக்க உதவுகின்றன என்பதை முன்னர் விளக்கப்பட்டதை நினைவு கொள்வோம்.

கல்வட்டங்களின் வளர்ச்சி

கல்வட்ட வகைகளான உருளைக் கல் மற்றும் பலகைக் கல்வட்டங்களின் வளர்ச்சி அரண் உறுப்புச் செயலைவிட அழகுணர்ச்சியின் செயலே முதன்மையாக உள்ளது.

இரு வரிசை உருளைக் கல்வட்டங்கள், பலவரிசை உருளைக் கல்வட்டங்கள், இரு வரிசை பலகைக் கல்வட்டங்கள், பல வரிசை பலகைக் கல்வட்டங்கள், உருளைக்கல் மற்றும் பலகைக் கல்வட்டங்கள் இணைந்த கல்வட்டங்கள் என இவற்றின் வளர்ச்சிகளை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது. இரண்டும் இணைந்த வடிவங்கள் அழகுணர்ச்சியின் வடிவங்களாக வெளிப்பட்டுள்ளன. பல வரிசைகளாக இரண்டு வடிவங்களும் இணைந்து அமைந்தவை கவினுற அமைந்தவையாகக் காட்சியளிக்கின்றன.

* * *

குறிப்பு

இங்கு கொள்கை முடிவில் உருவாகும் ஈமச்சின்னத்துக்குப் பெயர்களாக முதன்மை அலகுகளின் பெயர் மற்றும் அரண், அலங்கார உறுப்புகளின் பெயர்களை இணைத்து வேறு இணைப்புச் சொற்களான ‘கூடிய’, ‘கொண்ட’, ‘இணைந்த’, ‘சேர்ந்த’ போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் வழங்கியிருக்கிறேன். உதாரணமாக, “தாழியுடன் கூடிய கல்பதுகை”, “கல்வட்டம் கொண்ட கல்திட்டை”, “பலகைக் கல்வட்டமும் உருளைக் கல்வட்டமும் இணைந்த குத்துக்கல்” போன்ற சுட்டும் தொடர்கள் நமது பயன்பாட்டில் உள்ளன.

நான் எனக்குள் உருவான இரு கருத்துருவங்களின் அடிப்படையில் இணைப்புச் சொற்களின் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கிறேன். 1. இங்கு பயின்று வரும் ஒற்றுகளே இணைப்புச் சொற்களின் முழுமையான பயனை அளித்துவிடுகின்றன. 2. நடைமுறையில் உள்ள பயன்பாடு எது, முதன்மைச் சின்னம் எது, கூடுதல் உறுப்புகள் அதாவது அரண் அலங்கர உறுப்புகள் எவை என்பதை அடையாளப்படுத்தத் தவறுகின்றன.

எனது இப்புதிய பயன்பாடு, வெறுமனே சொற்களின் சேர்க்கையாகத் தோன்றலாம். ஆனால், பயன்பாட்டுக்குப் பிறகு அவை வழங்கும் அர்த்தம் அல்லது புரிதல் மிகப் புதியதாகவும் குழப்பமின்றியும் இருப்பதை உணர்கிறேன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com