அத்தியாயம் 36 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 29

காலத்தை ஒப்பிடுகையில், பாறை ஓவியங்களைவிட கல்திட்டை வகை பெருங் கற்படை ஈமச்சின்னங்களில் காணப்படும் ஓவியங்களின் செய்திகள் அண்மைக் காலத்தியவை. காட்சிகளில் எளிமை கொண்டவை. போர் மற்றும் தனியனின் வீரத்தை வெளிப்படுத்தும் நோக்கை முதன்மையாகக் கொண்டவை. அரிதாக, வேட்டைக் காட்சியையும், சமூகத்தையும் வெளிப்படுத்துபவை.
Updated on
8 min read

சிந்துவெளி முத்திரைகளில் வீரப்பண்பும் தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களும்

கல்திட்டைகளில் காணப்படும் ஓவியங்கள், பாறை ஓவியங்களில் இருந்து கருத்துப் பரிமாற்றத்தில் நுட்பமான வேறுபாட்டுடன் வெளிப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் குகைகளில் இருந்தாலும் வெளிப்புறத்தில் இருந்தாலும், அவை அவ்வக்கால வாழ்வின் நிகழ்வுகளை, கட்புலனான காட்சிகளை, நம்பிக்கைகளை, அடியோட்டமான சிந்தனைகளை, அழுத்தமான சிந்தனைகளை, திடீர் உணர்சிகளை, புலனுறுப்புகளால் உணர்ந்தவற்றை, ஆட்டத்தை, கேளிக்கையை, கொண்டாட்டத்தை, விளையாட்டை, முன்னோர்களின் நினைவுகளை, தனியனின் வீரத்தை, குழுவின் வீரத்தை என பலவற்றையும் காட்சிப்படுத்த முனைகின்றன. இக்குணங்கள் கொண்டே, இவ்வோவியங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதால் இவை வாழ்விட ஓவியங்கள் என்றும் அழைக்கப்படலாயின.

இக்குகைகளில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளைப் பெறமுடியவில்லை. இவை தாற்காலிக வாழ்விடங்களாகவோ, வழிபாடு நிகழ்த்தக் கூடும் இடங்களாகவோ இருந்துள்ளன என்பதை ஊகிக்கமுடிகிறது. எவ்வாறு ஆயினும், அவ்வக்கால வாழ்வியலின் எல்லாக் கூறுகளையும் இவை தெரிவிக்க முனைந்துள்ளன.

வார்த்தைகள் அற்ற உரையாடலை நிகழ்த்தும் இவை, அக்கால மதநம்பிக்கை, கனவு, விருப்பம், வேடிக்கையான நிகழ்வுகள், கற்பனைகள், புனைவுகள் போன்றவறையும் கொண்டிருக்கக்கூடும். இக்காலத்தில், ஒரு பொதுத்தளத்தில் பார்வையாளனின், பொழுதுபோக்கு விரும்பியின், இலக்கியவாதியின், வரலாற்று ஆசிரியனின், விமரிசகனின், தொல்லியலாளனின், கலைவிற்பனனின் பார்வைக்குத் தனித்தனியான புரிதல்களையும், கருத்துகளையும் இவை உருவாக்குகின்றன. அவரவர் சிந்தனையும், அனுபவ அறிவும் புதிய புதிய விளக்கங்களை, அணுகுமுறைகளை வழங்கிவருகின்றன.

அக்கால மக்களின் அறிவு உலகைத் தேடிய பயணத்தின் விளைவுகள் இவை. இன்னும், அக்கால மக்களின் பன்முகத்தை அறிய விரும்பியதின் விளைவுகள் இவை. இவை, மானுடவியலின் துணையோடும், வழிபாடு மற்றும் சமயங்களின் தொல்சிந்தனைகளின் துணையோடும் ஆய்வுக்கு உட்படுத்த, பல புதிய விளக்கங்களைப் பெறக்கூடும்.

காலத்தை ஒப்பிடுகையில், பாறை ஓவியங்களைவிட கல்திட்டை வகை பெருங் கற்படை ஈமச்சின்னங்களில் காணப்படும் ஓவியங்களின் செய்திகள் அண்மைக் காலத்தியவை. காட்சிகளில் எளிமை கொண்டவை. போர் மற்றும் தனியனின் வீரத்தை வெளிப்படுத்தும் நோக்கை முதன்மையாகக் கொண்டவை. அரிதாக, வேட்டைக் காட்சியையும், சமூகத்தையும் வெளிப்படுத்துபவை.

குகை முதலான வாழிட ஓவியங்கள் வழிபட்டு நிகழ்வுடன், பொழுதுபோக்குடன், ஆடுவது போன்ற கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. அவை பிற்கால வரையறைக்கு உட்பட்ட இசை, நாட்டியம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் முன்னோடியாக இருக்கக்கூடும்.

ஈமச்சின்னங்கள் அக்கால வழிபாட்டிடங்களான கோயில்கள். இவற்றில், ஓவியங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அறியப்பட்டுள்ளன. அதுவும், தகடூர்ப் பகுதியில் மட்டும் இவை வெளிப்பட்டுள்ளன. எனில், இவை இப்பகுதியின் பிரத்தியேகமான வேறு பகுதிகளில் காணமுடியாத குணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். பொதுவில், இவற்றில் ஆடுவது போன்ற பொழுதுபோக்குக் கருத்துகள் வெளியாகவில்லை. வழிபடுதல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் காட்சிகள் உள்ளன. ஆனால், அவ்வாறு குறிக்கப்பட்டவை வேறு ஒரு கருத்தையும் தெரிவிப்பதாக இருக்கக்கூடும்.

கல்திட்டை ஓவியங்களின் சிறப்பியல்புகளை; வெளிப்படுத்தும் கருத்துகளை உள்வாங்கிக்கொள்ளாமல்; இவற்றின் பண்பாட்டுத் தொடர்ச்சியாக உள்ள நடுகற்கள் வெளிப்படுத்தும் கருத்துகளை விளக்கிக்கொள்ள முடியாதுபோகக்கூடும்.

அமைவிடங்கள்

கல்திட்டை ஓவியங்கள் பெரும்பான்மையும், கல்திட்டையின் மேற்குப்புற அல்லது இடுதுளைக்கு நேர் எதிரே அமையும் பலகைக்கல்லில் உட்புறத்தில் தீட்டப்பெற்றுள்ளன. தேவைக்குத்தக்கவாறு பிற பலகைக்கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (மல்லச்சந்திரம், பார்க்க: யுத்தபூமி அத்தியாயங்கள்: 31, 32, 33) உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறமும் ஓவியங்கள் இடம்பெற்றதையும் அறியமுடிகிறது (ஒரமணகுண்டா, பார்க்க அத்தியாயம்: 35). பொதுவில், ஓவியத்தொகுப்பின் வரைவு யுத்தியாக கற்பலகையின் மேற்கில் இருந்து வடக்காகவும் பின்னர் தெற்காகவும் வரையப்பட்டுள்ளன.

எண்ணிக்கை

ஒன்று முதல் முப்பதுக்கும் மேலான எண்ணிக்கையில் தனி ஓவியங்களாகவும், ஒன்று முதல் ஐந்து எண்ணிக்கையிலான ஓவியத்தொகுப்புகளையும் காணமுடிகிறது. ஓவியக்காட்சிகளை தொகுப்பான காண்கையில் ஓவியம் வெளிப்படுத்த முனையும் கருத்துக்கு நெருக்கமாகச் செல்லமுடிகிறது.

கல்திட்டை ஓவியங்கள் காலந்தோறும் தொடர்ச்சியாக தீட்டப்பட்டவை அல்ல என்பதால், சிதைவற்ற மூலவடிவத்தைப் பெறமுடிகிறது. சில கல்திட்டைகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்டதையும், சில கல்திட்டைகள் பலருக்கு மறுபயன்பாட்டுக்கும் உள்ளாக்கப்பட்டதையும் வரைவுகளில் இருந்து அறியமுடிகிறது.

காட்சிகள்

போர்க்காட்சி முதன்மையாக உள்ளது. இதில் விலங்குகளுடன் புரிந்த யுத்தங்களும், குறிப்பாக புலியுடன் நிகழ்ந்த யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன (மல்லச்சந்திரம். பார்க்க அத்தியாயம்: 33). போர் புரிபவர்கள் குதிரைமீது அமர்ந்த நிலையிலும்; தரையில் நின்ற நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு இடம்பெறும் குதிரையின் உருவங்கள் ஏதோ ஒரு விலங்கை போன்றுள்ளன. யானை போன்ற விலங்குகளைக் கொண்ட போர்க்காட்சியை அறிய முடியவில்லை. யானை, இக்காலத்துக்கு முன்னரே போர்விலங்காக பயன்படுத்தப்பட்டதை வாழிட குகை ஓவியங்கள் மூலம் அறியமுடிகிறது.

வில் அம்பு கொண்டுள்ள மனிதர்களின் ஓவியங்கள், வேட்டைச் சமூகத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. சில, வேளாண்மைச் சமூகத்துக்கு உரியனவும் அறியப்பட்டுள்ளன. நிலவியல் அமைப்பு சார்ந்து, தகடூர்ப் பகுதியைச் சார்ந்த இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பகுதிகள் குறிஞ்சி, முல்லை சார்ந்ததால் இங்கு மேய்த்தல் வாழ்க்கையே சிறப்புற்றிருந்தது. வாழிட ஓவியங்கள், மேய்த்தல் சமூக வாழ்க்கையை அதற்காக நடந்த போர்களைக் காட்சிப்படுத்துகின்றன. சங்க இலக்கியங்களும், பிற்கால நடுகற்களும் இங்கு முதன்மையாக ஆநிரை தொடர்பான பூசல்கள் மிகுந்திருந்ததைக் காட்டுகின்றன. இவற்றை பின்னோட்டமாகக் கொண்டால், இந்தக் கல்திட்டை ஓவியங்கள் சுட்டும் போர்க்காட்சிகள் பெரும்பான்மையும், ஆநிரை தொடர்பாக நிகழ்ந்ததைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

பாறை ஓவியங்களில் சுட்டப்பட்ட வேட்டைக்காட்சிகளும், போர்காட்சிகளும் மாயம், மந்திரம், சடங்கு போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையாக அமைந்திருப்பவை. காட்சிகளில், சடங்கு தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது இக்கருத்தை உறுதிசெய்கின்றன. ஆனால், கல்திட்டை ஓவியங்களில் போர்க்காட்சி மட்டும் தெளிவாக இருக்க, பிற நம்பிக்கை அடிப்படையிலான காட்சிகள் இடம்பெறாமல் உள்ளன. இது, இவ்விரு வழிபாட்டு முறைகளுக்கு உள்ள துல்லியமான வேறுபாட்டை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

ஆட்டமும் (நடனமும்), கொண்டாடமும் நிறைந்த நிகழ்த்துகலைக் காட்சிகள், வேட்டை மற்றும் போர் நிகழ்வுகளுக்கு முன்னர் மேற்கொண்ட மாயம். மந்திரம், சடங்கு போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையான செயல்களாகும். நிகழ்வு வெற்றியோ தோல்வியோ, அங்கு வீரனின் மரணம் நிகழ்ந்ததால், வீரனின் வீரத்தைச் சிறப்பிக்கும், அந்நல் ஆவி தம் மக்களையும், சமூகத்தையும் காக்க வேண்டி மேற்கொள்ளப்பட்ட வழிபாடாக கல்திட்டை சார்ந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அடிப்படையில், அது துக்கம் சார்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.

துவக்கத்தில் பொழுதுபோக்குக்கு இருபாலராலும் ஆடப்பட்ட குரவைக்கூத்துகள், பிற்காலத்தில் ஏறுதழுவல் போன்ற நிகழ்ச்சிக்குப்பின், வெற்றிபெற்றவரைப் பாராட்டும் நிலையில் நிகழ்த்தப்பட்டதை சங்க இலக்கியம் காட்சிப்படுத்துகிறது. சிலப்பதிகாரத்தில் குரவை பாடல் நிலை, வழிபாட்டு நிலை என்ற போக்குகளில் வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகிறது. துணங்கைக் கூத்தும் குரவை போன்றதே, பொருளிலும் நிகழ்த்துதலிலும். இதில் பெரும்பான்மையாகப் பெண்கள் பங்குபெற்றனர். இவற்றில் இருந்து சற்று மாறுபட்டது, வெறியாட்டு என்ற சடங்கில் கரைந்த கலை. இது, போர் தொடர்பாகவும் நிகழ்த்தப்பட்டது. பெரிதும், முருக வழிபாட்டில் தொடர்புடைதாக ஆக்கப்பட்டுவிட்டது.

வழிபாடு, அதனுடன் தொடர்புகொண்ட சடங்கு மற்றும் நோக்கான வேண்டுதல் என்ற அடியோட்டத்தில் துவங்கிய இவை, பின்னர் பல்வேறு பரிமாணங்கள் பெற்று சமூகத்தில் இடம்பெற்ற நிலைகளையும் சிலப்பதிகாரம் கட்சிப்படுத்துகிறது. இவற்றின் ஆதிநிலையை பாறை ஓவியங்களில் அடையாளம் காண முடியும். குறிப்பாக, வரலாற்று உதய கால மற்றும் வரலாற்றுக் கால பாறை ஓவியங்களில்.

கல்திட்டைகளில் இடம்பெற்ற ஓவியங்கள், வரலாற்று உதய கால மற்றும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவையாகக் கொள்ளமுடியும். இவை, தம்முள் கொண்டுள்ள சிந்துவெளி எழுத்துகளை ஒத்த எழுத்துகள், கீறல் குறியீடுகள் மேற்குறித்த காலக்கணிப்பை உறுதிசெய்ய உதவும்.

இப்பின்னணியில், சடங்கு நிலைகளில் இருந்த வேறுபாட்டை கல்திட்டை ஓவியங்கள் தெரிவிக்கின்றன எனக் கொள்ளலாம். இந்த வேறுபாடு, தொல்காப்பியம் சுட்டும் நடுகல் வழிபாட்டில் உள்ள சடங்குமுறைகளை ஒத்ததாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஓவியங்கள் இடம்பெற்ற கல்திட்டைகளின் கால நிலை, அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை. எனினும், அவை வரலாற்று உதய காலமாகக் கருதப்படும் மு.பொ.ஆ. 700 முதல் பிற்பட்டு இருக்கக்கூடும். மு.பொ. 7-ம் நூற்றாண்டு முதல் மு.பொ. 3-ம் நூற்றாண்டுவரை என பல்வேறாக தொல்காப்பியத்தின் காலம் சுட்டப்படும் நிலையில், தன்காலத்துக்கு முற்பட்ட பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டுகிறது. இந்தவகையில் சுட்டப்படும் நடுகல் நிகழ்வுகளுக்கு, இக்கல்திட்டை ஓவியங்கள் மரபின் அடையாளமாக மாற உதவியிருக்கக்கூடும் அல்லது சமகால அடையாளமாகவும் இருக்கக்கூடும்.

மனித வடிவங்கள்

கல்திட்டை ஓவியங்களில் இடம்பெற்றுள்ள மனித வடிவங்கள் எளியவை. குச்சிவடிவில் கோட்டுருவங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பவை. அடர்வண்ணப்பூச்சு முறை அரிதாகவே கல்திட்டை ஓவியங்களில் காணமுடிகிறது. வாழிட ஓவியங்களில் இடம்பெற்ற விலங்குத்தலை, பறவைமூக்கு பெற்ற மனித ஓவியங்களை கல்திட்டைகளில் காணமுடியவில்லை. முகமூடி அணிந்தது போன்ற, ஒளிவட்டம் கொண்டது போன்ற சித்தரிப்புகளை கொண்ட மனித ஓவியங்களைக் காணமுடிகிறது. இவ்வகைச் சித்தரிப்பும் அம்மனிதனின் சிறப்புத் தகுதியை அல்லது நிலைச் சுட்டுவதாகக் கொள்ளமுடியும்.

மனிதனும் விலங்கினங்களும்

கல்திட்டை ஓவியங்களில் போர்க்காட்சிகளே முதன்மைபெறுவதால், அவை போர் விலங்காகப் பழக்கப்படுத்திய குதிரை விலங்கையே முதன்மையாகக் காட்சிப்படுத்துகின்றன என்பதை காட்சிகள் தலைப்பில் கண்டோம். கல்திட்டைகளில், உணவுடன் தொடர்புடைய வேட்டை விலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகள், சடங்குகளின் பலி விலங்குகள் போன்றவை இடம்பெறவில்லை. போலவே, இன்றுவரை அறியப்பட்ட கல்திட்டை ஓவியங்களில் விலங்கைப்பிடித்தல் நிகழ்வுடன் தொடர்புடைய காட்சிகளைக் காணமுடியவில்லை. வாழிட ஓவியங்களில் இக்காட்சியைக் காணமுடிகிறது. வீரத்தின் வெளிப்பாடான இந்நிகழ்வு கல்திட்டைகளில் காண இயலாமை, இக்காலத்தில் மந்தையின் மூலம் விலங்கு வளத்தை மனிதன் பெருக்கிக்கொண்ட நிலையை அடைந்ததாகக் கொள்ளமுடியும்.

வேறு எந்த விலங்கினத்தைவிடவும் குதிரை சிறப்பிடம் பெற்றுள்ளது. அதே சமயத்தில், விலங்கு உருவத்தை குலக்குறியாகப் பயன்படுத்திய நிலையை கல்திட்டை ஓவியங்களில் காணமுடியவில்லை.

புள்ளியிட்டு வரையப்பட்ட ஓவியங்கள்

தொல் ஓவியங்களில் கோட்டுருவ முறை, அடர்பூச்சு முறை என்ற இரு முறைகளுடன் மூன்றாம் முறை எனக் கருதப்படுவது, புள்ளியிட்டு வரைதல் ஆகும். இது, தனித்தும் கோட்டுருவ ஓவியங்களுடன் இணைத்தும் வெளிப்படுவதை காணமுடிகிறது. கல்திட்டை ஓவியங்களில் புள்ளியிட்டு வரைதல் முறை, இவ்விரு பயன்பாட்டிலும் வெளிப்பட்டுள்ளது (காண்க, ஒரமணகுண்டா ஓவியங்கள் - அத்தியாயங்கள் 34, 35).

புள்ளியிட்டுக்கொள்ளுதல் என்பது கற்காலப் பண்பாடு முதல் மனிதன் மேற்கொண்டுள்ள முறையாகும். பல வண்ணங்களில், முகத்திலும் உடம்பிலும் புள்ளிகளை வைத்துக்கொண்டு அழகுபடுத்திக்கொள்வது. அல்லது உருவத்தோற்றத்தை மாற்றிக்கொள்வது என்பவை, அக்கால மனிதனிடத்தில் இருந்த நம்பிக்கை அடிப்படையில் எழுந்தவை என்பதை மானிடவியலாளர்கள் காட்டுகின்றனர். இந்நம்பிக்கை பல்வேறு நாடுகளில் தொல் ஓவியங்களில் வெளிப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. தகடூர்ப் பகுதி வாழிட மற்றும் கல்திட்டை ஓவியங்களில் இப்பாணி ஓவியங்கள் வெளிப்பட்டுள்ளன (காண்க, ஒரமணகுண்டா கல்திட்டை ஓவியங்கள் - அத்தியாயங்கள் 34, 35).

பக்க நேர் வடிவ பாணி

இவ்வடிவப் பாணியில், ஆற்றல்மிக்க விலங்கினங்களின் உருவ அமைப்பில் பாதி முகத் தோற்றமும், அதன் பின்பகுதியும் உள்ளவாறு அமையும் ஒருபக்கத்தின் கட்சியாகும். அதாவது, இப்பாணியில் ஒரு விலங்கின் நேரான தோற்றமற்றப் பக்கத்தோற்றம் முழுமையாகவோ, முழு நிறைவு பெறா நிலையிலோ இடம்பெறும். இப்பாணியில் அமைந்த ஓவியங்களை கல்திட்டைகளில் காணமுடியவில்லை.

நேர் வடிவ பாணி

இப்பாணியில், விலங்கின் முகம், தலை போன்ற உறுப்புகள் நேர் வடிவமாக தீட்டப்படும்.

திரும்பிப் பார்க்கும் பாணி

இவ்வகைப்பாணி ஓவியங்கள், விலங்கு வடிவம் தம் தலையை திரும்பிப் பார்க்கும் நிலையில் காட்சிப்படுத்தப்படும். உலகின் பல பகுதிகளில், இப்பாணியில் அமைந்த மிகத்தொன்மையான ஓவியங்கள் காணப்படுகின்றன. மல்லச்சந்திரம் கல்திட்டை ஒன்றில் புலி வீரர்கள் இடம்பெற்ற ஓவியம் ஒன்றில் புலி திரும்பிப் பார்க்கும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டதை சான்றாகக் கொள்ளலாம். (பார்க்க: யுத்தபூமி - அத்தியாயம் 33).

சிந்துவெளி எழுத்துகள் மற்றும் குறியீடுகள்

தமிழகத்தில் கீழ்வாழை, புறாக்கல், திருமலை உட்பட சில இடங்களில், சிந்துவெளி எழுத்துகளை ஒத்த எழுத்துகளும், பெருங் கற்காலப் பானை ஓடுகளில் கிடைக்கும் கீறல் குறியீடுகள் போன்றவையும் தகடூர்ப் பகுதியான இன்றைய தருமபுரி -  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாழிட மற்றும் கல்திட்டை ஓவியங்களில் அதிகமாக வெளிப்பட்டுள்ளன. வாழிட ஓவியங்களில் இடம்பெற்ற கீறல் குறியீடுகளில் ஒத்தகுணம் பெற்றவையும், கட்டுமான அமைப்புகள் போன்ற வடிவங்களில் கல்திட்டைக் கீறல் குறியீடுகள் வேறுபடுகின்றன. வித்தியாசமான சித்தரிப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன.

இயற்கைக் காட்சிகள்

கல்திட்டை ஓவியங்களில் வாழிட ஓவியங்களைப்போலவே மரம், மலை, ஆறு போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை. சில காட்சிகளில் செடி போன்ற வடிவங்களும், மலைத்தொடர் போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் பயன்பாடு பற்றி விளக்கிக்கொள்ள முடியாத நிலையே நீடிக்கிறது.

வண்ணங்கள்

கல்திட்டை ஓவியங்களில் வெள்ளை வண்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இரு வண்ண ஓவியங்களை கல்திட்டைகளில் அறியமுடியவில்லை.

ஆயுதங்கள்

கல்திட்டையில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பெரும்பான்மையும் இரும்பினால் ஆன ஆயுதங்களாக இருக்கின்றன. வில் போன்ற ஆயுதங்கள், மரத்தினாலோ மூங்கிலாலோ செய்யப்பட்டிருக்கலாம். மல்லச்சந்திரம் புலி வீரர்கள் இடம்பெற்ற கல்திட்டை ஓவியத்தில், மிகப்பெரிய வில்லை தோளில் சுமந்துள்ள மனிதனின் உருவம் தீட்டப்பட்டுள்ளது. வில்லின் உயரத்தைக் காட்ட, அம்மனிதன் வழக்கமான உயரத்தைவிடவும் உயரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இது இக்காலத்தில், வில் பெற்றிருந்த செல்வாக்கை சுட்டுவதாகவும் பொருள்பட வைக்கிறது. அம்பு முனைகள் இரும்பினால் ஆனவை. கோடயம், வாள், குறுவாள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புலி வீரர்கள் ஓவியத்தில் சக்கரம் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவோ என்ற தோற்றம் தரும் காட்சிகளும் உள்ளன. இவை கேடயங்களாகவோ, சக்கரமாகவோ கருதவும் இடமேற்படுகிறது. அது, கதிர் வீசும் சூரியனாவும் காட்சியாகிறது. (பார்க்க: அத்தியாயம் 33).

மேற்கண்டவாறு, கல்திட்டை ஓவியங்களில் போருக்கு உரிய, வேட்டைக்குரிய ஆயுதங்களே காணக் கிடைகின்றன.

கட்டுமான வடிவங்கள்

கல்திட்டை ஓவியங்களில் பல வகையான கட்டுமான வடிவங்களைக் காணமுடிகிறது. எண்ணிக்கை மிகுதியிலும் காணமுடிகிறது. இவை சுட்டும் பொருளை தெளிவான முறையில் அறிந்துகொள்ள மேலும் சான்றுகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, இவை கல்திட்டைகளில் இடம்பெற்றுள்ள நிலைக்கு. இவை, கல்திட்டை வீரனின் குடியிருப்பையோ, ஊரையோ அல்லது வெற்றிகொண்ட இடத்தையோ, ஊரையோ சுட்டக்கூடும். இருவிதமான கட்டுமான சித்தரிப்புகள் இடம்பெற்ற நிலையில், அது யுத்தத்தில் ஈடுபட்ட இரு வேறு ஊர்களையோ அல்லது குடிகளின் அடையாளங்களைச் சுட்டுவதாக இருக்கக்கூடும். தொல் ஓவியங்கள் பெரிதும் சடங்கு மற்றும் வழிபாட்டு நோக்கத்தில் தீட்டப்பட்டவை என்பதால், இக்கட்டுமான வடிவங்களைச் சடங்கு தொடர்புடைய இடங்களை, வீடுகளைக் குறிப்பதாகவும், முன்னோர் வழிபாட்டு இடங்களைச் சுட்டுவதாகவும் கருதலாம்.

விளக்கங்கள் எவ்வாறாயினும், மூத்தோர் வழிபாட்டில் கல்திட்டை ஓவியங்கள், நடுகல் மரபுக்கு முன்மாதிரியாக அமைந்தன என்பது இங்கு தெளிவாகிறது.

ஆநிரைப் பூசல் ஓவியங்கள்

தொல்காப்பியம் போற்றும் ஆநிரைப் பூசலை காட்சிப்படுத்துவதில், இன்றுவரை அறியப்பட்ட கல்திட்டை ஓவியங்கள் உதவவில்லை. ஆனால், வாழிட ஓவியங்களான குகை மற்றும் பாறை ஓவியங்களில் ஆநிரைப் பூசல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆநிரைப் பூசல் ஓவியங்களை இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட மயிலாடும்பாறை, ஒப்பத்தவாடி, ஒரமணகுண்டா மற்றும் நீலகிரி மாவட்ட கொணவக்கரை ஆகிய இடங்களில் காணப்படும் குகை / பாறை ஓவியங்களில் காணமுடிகிறது.

இக்காட்சிகளில், வீரர்கள் ஆநிரை கொள்ள முன்னேறி விரையும் காட்சி இடம்பெற்றுள்ளன. பொதுவில், இக்காட்சிகளில் ஆநிரைகளின் கூட்டத்தில் இருப்பதுபோன்றும், வாள், குறுவாள், ஈட்டி, வில், அம்பு மற்றும் கேடயம் போன்ற ஆயுதங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். சில காட்சிகளில், விலங்கு அல்லது ஆநிரையின் மீது ஒரு சதுரமான கட்டத்தின் உள்ளோ அல்லது சிறப்பான தலைமுடி அலங்காரத்துடனோ அந்த வீரர்கள்  காட்டப்பட்டுள்ளனர். இங்கு, சதுரமான கட்டம் நடுகல்லை சுட்டக்கூடும். அதனுள்ளே ஆநிரை கொள்ளப்பட்ட வீரனோ, ஆநிரை மீட்டுப்பட்ட வீரனோ சித்தரிப்புக்கு உள்ளாகியிருக்கிறான். இவ்வகையான வீரனின் சித்தரிப்புகளை மயிலாடும்பாறை, ஒரமணகுண்டா, ஒப்பத்தவாடி ஓவியங்களில் காணமுடிகிறது. இவ்வகையான சித்தரிப்புகளில் சில, போரில் பட்ட வீரனுக்காகவும், விலங்குகளுடன் போரிட்டுப்பட்டவனுக்காகவும் தீட்டப்பட்டவையாக இருக்கக்கூடும். வீரனின் வீரத்தைப் போற்றும் நடுகல் மரபுக்கு இவை முன்னோடிகளாக விளங்குகின்றன.

தமிழகத்தில் முதலில் அறியப்பட்ட ஓவியமான மல்லப்பாடி ஓவியமும், ஆநிரைகளுடன் மேய்த்தல் அல்லது காத்தல் நிகழ்வுடன் தொடர்புடையதாக கருத இடமுள்ளது. மல்லப்பாடி ஓவியத்தில், மூன்றாம் தொகுப்பில் தெளிவற்று உள்ள காட்சி, கொம்புகளையுடைய ஒரு காளை என்றோ அல்லது மூன்று நான்கு சிறு விலங்குகள் பதுங்கிய நிலையில் உள்ளதாகவோ கருதலாம். இவ்விலங்கு(கள்) பொருட்டே, பிற இரு ஓவியத்தொகுப்பில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் நிகழ்ந்ததாகக் கருதலாம்.

தாளப்பள்ளி ஓவியமும் ஆண் குறி வளமைச் சடங்கும்

கல்திட்டை ஓவியங்களும், சில குகை / பாறை ஓவியங்களும் நடுகல் பண்பாட்டுக்கு முன்னோடிகளாக விளங்கியதைத் தெளியமுடிகிறது.

புதிய கற்காலப் பண்பாட்டில் இருந்து, குறிப்பாக வேளாண்மைச் சமூகத்தில் தாய் தெய்வ வளமைச் சடங்குகள் மிகையாக வெளிப்பட்டன. தென்மையான இச்சடங்கில், தாய் தெய்வங்கள் பருத்த கொங்கைகள், பெருத்துச் சரிந்த வயிறு கொண்டு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மற்றொரு வகை, பெண்குறி வழிபாடாகும். இவ்வழிபாட்டில், பெண்குறி வழிபாட்டுக்கு உள்ளான நிலையைக் காணமுடிகிறது. விஜயநகர / நாயக்கர் கால கோயில் கோபுரச் சிற்பங்களிலும் பெண்குறி சிற்பங்கள் இடம்பெற்றமை, இவ்வளமைச் சடங்கு மரபின் தொடர்ச்சி எனலாம். சிந்துவெளி முத்திரைகளில் ஒன்று, பெண்குறியில் இருந்து செடி முளைத்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. பெண்குறி, வளமையின் குறியீடாக விளங்கிய கருத்தின் வார்த்தைகள் அற்ற உரையாடலாக இது செயல்படுகிறது.

மேய்த்தல் தொழிலின் விளைவாக, ஆண்குறி வழிபாடு உருவாகியிருக்கக் காரணங்கள் உண்டு. இது வளமையும், வீரமும் கொண்ட பொருளில் பிற்காலத்தில் குறியீடாக்கப்பட்டிருக்கலாம்.

லிங்க வழிபாடு, ஆண் - பெண் குறிகளின் இணைவில் உருவான சிந்தனையாகும். லிங்கத்தின் ஆவுடையார் பாகம், பெண்குறியின் சித்தரிப்பாகும். பாண பாகம், ஆண்குறியின் சித்தரிப்பாகும். சிந்துவெளிப் பகுதி உள்பட உலகின் பல பகுதிகளில் ஆண்குறி சித்தரிப்புகள் அறியப்பட்டுள்ளன. பிற்காலத்தில், பாண பாகம் மட்டும் இடம்பெறும் சித்தரிப்புகளும் லிங்கமாகக் கருதப்படுகின்றன.

தாளப்பள்ளி என்ற இடம் கிருஷ்ணகிரி – இராயக்கோட்டை சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பெருங் கற்காலக் கல்திட்டைகள் காணப்படுகின்றன. தாளப்பள்ளி மலைப்பகுதியில், இயற்கையாக அமைந்த குகைகள் காணப்படுகின்றன. இங்கு வெள்ளை வண்ணத்தில் தீட்டப்பட்ட பல ஓவியங்களைக் காணமுடிகிறது. இவை, கோட்டோவியம் முறையில் தீட்டப்பட்டவை.

இங்கு குரங்கு குண்டு, அமாவாசை குண்டு என்று அழைக்கப்படும் இரு குகைகள் உள்ளன. குரங்கு குண்டு கோட்டைக்குண்டு என்றும் அழைக்கப்படுகிறது. குரங்கு குண்டில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூன்று தொகுப்புகளாகவும், தனி ஓவியமாகவும் வரையப்படுள்ளன. அமாவாசைக் குண்டில் நான்கு தொகுப்புகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இவ்வோவியத் தொகுப்பில் ஒன்று, ஆண்குறி, நடனக்காட்சி, வீடு அல்லது வசிப்பிடத்தைச் சுட்டும் குறியீடு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள குறியீடுகளின் தன்மை கொண்டு, இவை வளமைச் சடங்குடன் அல்லது மந்திரச் சடங்குடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளலாம். புள்ளியிடும் பாணியும் இவ்வோவியத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தாளப்பள்ளி ஓவியம் 1 - ஆண்குறி

அடுத்ததாக இடம்பெறும் ஓவியக்காட்சி, இரண்டு வகைச் சித்தரிப்புகளுடன் உள்ளன. முதல் சித்தரிப்பில், நான்கு மனித வடிவங்கள் இரண்டாம் சித்தரிப்பான ஒரு வீடு அல்லது வசிப்பிடத்தைச் சுட்டும் கட்டுமான அமைப்பின் முன் வரிசையாக நிற்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமான வடிவத்தை சடங்கு தொடர்பான இடமாகக் கருதலாம். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நான்கு மனித வடிவங்களை, நாட்டியம் நிகழ்த்த உள்ளது போன்ற சித்தரிப்பை நினைவுபடுத்துபவையாக உள்ளன.

எனில், இந்த ஓவியத்தொகுப்பு, ஆண்குறி வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் பொருள் தருகிறது. பிற்காலத்தில், வீரத்தின் வளமைச் சின்னமாக ஆண்குறி மாற்றம் கொண்டிருக்க வேண்டும். அந்நிலையையே தாளப்பள்ளியின் இந்த ஓவியத்தொகுப்பு தெரிவிக்கிறது.

இதனுடன், ஆண் தெய்வமான குடிமல்லம் ஈமச்சின்னத்தை இணைத்துப் பார்க்கும்போது, குடிமல்லம் சின்னத்துக்கு தாளப்பள்ளி ஓவியம் முன்னுதாரணம் ஆகலாம்.

குடிமல்லம் சித்திரம்

(குடிமல்லம் ஈமச்சின்னத்தின் விவரங்களை “மோட்டூர் வகை தாய் தெய்வமும் குடிமல்லம் வகை ஆண் தெய்வமும்” என்ற தலைப்பில் அமைந்த யுத்தபூமி அத்தியாயம் 29 காண்க).

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com