சிந்துவெளி முத்திரைகளில் வீரப்பண்பும்
தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களும்
மல்லச்சந்திரத்தில் அமைந்துள்ள மற்றொரு கல்திட்டை ஓவியம் குறித்து பேசவில்லை என்றால், இப்பகுதி நிறைவு பெறாது. மல்லச்சந்திரத்தில் விளங்கிக்கொள்ள முடிந்த பத்தாவது கல்திட்டை ஓவியமாக இதனைக் கருதலாம்.
மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியம் - 10
கல்திட்டையின் மேற்குப்புற பலகைக்கல்லில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், வலது மேற்புறத்தில் ஒரு மனிதனின் உருவமும், மூன்று புலி மீது அமர்ந்துள்ள தெளிவான மனித உருவங்களும், மற்றொரு தெளிவற்ற அல்லது சிதைவுற்ற புலி மீது அமர்ந்துள்ள மனித உருவம் ஒன்றும் வரையப்பட்டுள்ளன. இந்த உருவங்களுக்கு இடையே சில குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. உருவங்களுக்குக் கீழே ஒரு கோடு போன்ற ஒன்றும் தீட்டப்பட்டுள்ளது.
வில்லாளி
வலது மேற்புறத்தில் இடம் பெற்றுள்ள மனித வடிவ ஓவியம், வித்தியாசமான குணம் கொண்டது. இவ்வடிவிலான மனித வடிவச் சித்தரிப்பை வேறு எந்தப் பாறை ஓவியங்களிலும் காணமுடியாது. மனிதன் நடப்பதுபோன்று கால்களும் பாதங்களும் காட்டப்பட்டுள்ளதும், முழங்கால் முதல் கழுத்து வரையிலான உடல் பகுதி இயல்புக்கு மீறிய உயரம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளதும், முதலில் கவரும் வித்தியாசமான சித்தரிப்பாக உள்ளது.
இந்த மனித வடிவம் குறித்து கவனிக்கத்தக்க கருத்து ஒன்றை, தமிழகத் தொல்லியல் வெளியீடு ஒன்று முன்வைக்கின்றது. (T.S. Sridhar, (Ed), Rock Art of Tamil Nadu, Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai, 2005, p. 28, & Plate 21). அது, இம்மனிதனின் உருவம் சிறப்பான தலை அலங்காரத்துடன் உள்ளது என்றும், சிறப்பான மகுடம் அணிந்துள்ளது என்றும், அதன் காரணமாக இதில் இடம்பெற்றுள்ள மனித உருவம் தலைவன் ஒருவனுடையதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. மேலோட்டமான பார்வைக்கு முதலில் தோன்றுவது இவ்வாறான இயல்பே.
அம்மனித உருவத்தை மட்டும் தனித்துப் பெரிதுபடுத்திக் கவனிக்கும்போது, இம்மனித உருவத்தில் தலை அலங்காரமோ, மகுடமோ காணப்படுவதில்லை.
மாறாக, இம்மனிதன் தோளில் இருந்து முழங்கால் வரை தொங்கும் மிகப்பெரிய வில் ஒன்றைத் தோளில் சுமந்து செல்வதைக் காணமுடிகிறது. மிகப்பெரியது என்ற வில்லின் சிறப்பைச் சுட்ட, இம்மனிதனின் முழங்காலுக்கு மேல் தோள் வரையிலான பகுதி மிக நீண்டு காட்டப்பட்டுள்ளதில் இதை அறியமுடிகிறது. கை மற்றும் கால்களின் அளவோடு இது பொருந்தாது. இருப்பினும், வேடிக்கை சித்தரிப்பாக இல்லாமல், கவரும் வகையில் உள்ள கற்பனையாக வெளிப்பட்டுள்ளது. இம்மனிதன் மிகப்பெரிய வில்லை பயன்படுத்தியவன் என்ற சிறப்பியல்பையோ அல்லது மிகப்பெரிய வில்லாளி என்பதைக் குறியீடாக்கிய சித்தரிப்பாகவும் இதனைக் காணமுடிகிறது. இவ்வில் வன்மையால் இவன் தன் குழுவின் தலைவனாக விளங்கியிருக்ககூடும். இந்த ஓவியத்தில், போர்க்காட்சி ஏதும் இடம்பெறவில்லை. வில்லும் தோளில் தொங்குவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், இவன் இயல்பான மரணத்தைத் தழுவியவன் எனலாம்.
பெருங் கற்படைச் சின்னங்கள் அக்காலத்தில் இறந்தவர் அனைவருக்கும் எடுக்கப்பட்டவை என்பதை நினைவில் கொண்டால், மேற்குறிப்பிட்ட கருத்துருவம் துலக்கமாகும். இந்தவகையில், இந்த ஓவியம் இடம்பெற்ற கல்திட்டை, சிறந்த வில்லாளியும்/ தலைவனும் ஆன ஒருவனின் நினைவில் எழுப்பப்பட்ட ஒன்று என்றாகிறது.
புலி வீரன் - 1
இம்மனித வடிவத்துக்குக் கீழ் புலியும், அதன் மீது நின்றவாறு உள்ள மனித உருவமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதன் புலியை செலுத்திவருவதுபோல, புலியின் கழுத்தில் ஒரு வார் அல்லது கயிறு கட்டி அதனைப் பிடித்திருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது.
புலி வீரன் - 1
விலங்கு ஒன்றின் மீது அமர்ந்திருப்பது அல்லது அதனைச் செலுத்துவதுபோன்ற சித்தரிப்பு, அவ்விலங்கைப் பழக்கப்படுத்தி, விருப்பப்படி ஆட்கொள்வது என்ற உண்மையைத் தெரிவிப்பதாகும். இங்கு, இம்மனிதன் புலி மீது அதே சித்தரிப்பைக் கொண்டிருக்கிறான். பொதுவில் புலி, சிங்கம் போன்ற வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்த முடியாத கொடிய விலங்குகள் மீது பயணிப்பது என்பது இயல்புக்கு மீறிய செயல். இருந்தும், இங்கு அவ்வகையான சித்தரிப்பு இடம்பெற்றமை, அம்மனிதன் அவ்விலங்கை வெற்றிகொண்டவன் என்ற நிகழ்வைச் சுட்டும் கற்பனையின் வெளிப்பாடே. இவ்வெற்றியை ஈட்டி இம்மனிதனும் மாய்ந்திருக்கலாம். அதாவது, தங்கள் வாழ்வுக்கு அச்சத்தைத் தந்த ஒரு புலியை போரிட்டுக் கொன்று, அப்போரில் தானும் மாய்ந்த ஒரு வீரன் நினைவாக தீட்டப்பட்ட ஓவியம் இது என்றாகிறது. இந்த ஓவியத்தில், விலங்குடன் போரிடும் காட்சி இல்லையே என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, இம்மனிதன் விலங்குடனான போரின்போது இறக்காமல் பின்னர் இறந்திருக்கக்கூடும். எவ்வாறாயினும், இது புலியை வெற்றிகொண்டதன் குறியீடாகியுள்ளது.
இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ள முறை கவனிக்கத்தக்கதாகிறது. புலி உருவம் அடர்த்தியான சுற்று வரைகோட்டு முறையிலும், புலியை வெற்றிகொண்ட மனிதன், குச்சி வடிவ கோட்டுருவ முறையிலும் தீட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு ஓவியத்தில் இரண்டு வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதை, பாறை ஓவியங்களில் முதன்முறையாக இங்குதான் காண முடிகிறது. மேலும், புலியின் கால்களும் நகங்களும் அதன் வலிமையைச் சித்தரிப்பதாக உள்ளன. புலியின் முகம், தன்னை செலுத்துபவனைப் பார்ப்பதுபோல் திரும்பி மேல் நோக்கியுள்ளது. அதன் வால் மேல் நோக்கியவாறு காட்டப்பட்டுள்ளது. வாலின் மயிர்க்கால்கள் புடைத்து நீட்டப்பட்டுள்ளது. இது, அது ஆக்ரோஷத்துடன் உள்ள நிலையை / சீறும் நிலையைச் சுட்டுவதாக உள்ளது. இவ்வாறு மயிர்க்கால்கள் புடைத்து காட்சிப்படுத்துவதை, சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்களுடனான போரில் விலங்குகள் வெளிப்படுத்தியுள்ளதைக் கண்டோம். (பார்க்க: யுத்தபூமி அத்தியாயங்கள் - 30, 31 புலிக்குத்திப்பட்டாள் பெண் காட்சிகள்). அம்மரபு இங்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்துக்குக் கீழ் சில குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
குறியீடுகள்
இக்குறியீடுகள், சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுவதுபோல் உள்ளன. குறியீடுகளுக்கு அருகில் சூரியனா அல்லது ஒருவகை அலங்காரக் கோல வடிவமா என உறுதிசெய்ய முடியாதபடி மங்கியுள்ள சித்தரிப்பையும் காண முடிகிறது.
புலி வீரர்கள் - 2, 3
இக்குறியீடுகளுக்குக் கீழ், குச்சிவடிவ முறையில் தீட்டப்பட்ட விலங்கு ஒன்றின் மீது ஆயுதங்கள் தாங்கிய மனிதனின் உருவம் தீட்டப்பட்டுள்ளது. ஒருகரத்தில் வாள் ஏந்தியிருப்பதை தெளிவாக்கிக்கொள்ள முடிகிறது. மற்றொரு கரத்தில் பிடித்திருப்பது கேடயம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியவில்லை. அது, மனிதனுக்கு அருகில் கதிர்களை வீசும் சூரியன் போன்று உள்ளது. இந்த ஓவியத்தில் உள்ள விலங்கை புலியென்றே அனுமானிக்கலாம்.
புலி வீரர்கள் - 2, 3 மற்றும் குறியீடுகள்
மேலும், இந்த ஓவியத்தில் கோடு போன்ற ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு செடி அல்லது ஊர்வன விலங்காகவும் கருத முடிகிறது. அல்லது சிதைவுற்ற ஓவியத்தின் பகுதியாகவும் இருக்கலாம்.
நான்காவது புலி வீரனின் ஓவியம், இக்கல்திட்டையில் உள்ள ஓவியங்களில் பெரியதாகும். இந்த ஓவியம், வில்லாளி உருவத்துக்கும், புலிவீரன் - 1 உருவத்துக்கும் எதிராக, பலகைக்கல்லின் மையமாக அமைந்துள்ளது. பார்வைப்புலத்துக்கு இதுதான் முக்கிய ஓவியமாகக் காட்சியளிக்கிறது.
புலி வீரன் - 4
இந்த ஓவியத்தில், புலியின் மீது மனிதன் அமர்ந்து அதனைச் செலுத்துவதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புலியின் உருவம், புலி வீரன் 1-ல் கண்டதுபோல் சிறப்பாக இல்லை. உடல் மிக நீண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் வால் தரையை நோக்கித் தொங்கியபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னதென்று அறியமுடியாத ஆயுதத்தை ஏந்தியுள்ள இம்மனிதன், ஒரு கரத்தில் புலியின் கழுத்தில் கட்டியுள்ள வாரைப் பிடித்தபடி உள்ளான். அவனது கரத்தில், மணிக்கட்டுக்கு மேல் காட்டப்பட்டுள்ளது அணிகலன்களின் ஒன்றா அல்லது ஆயுதத்தின் பகுதியா எனத் தெளியமுடியவில்லை.
இந்த ஓவியத்தில் கவனிக்கத்தக்க சிறப்பியல்பாக, புலியில் உடல் மற்றும் வால் பகுதி மயிர்க்கால்கள் குத்திட்டு இருப்பதைக் குறிப்பிடலாம். இச்சித்தரிப்பு, புலி வீரன் 1-ல் இடம்பெற்ற சித்தரிப்பைவிடச் சிறப்பாக உள்ளது. வாலின் மயிர்க்கால்கள் புடைத்து நீட்டப்பட்டுள்ளது. இது முன்னர் குறிப்பிட்டதுபோலவே, ஆக்ரோஷத்துடன் உள்ள நிலையை, சீறும் நிலையைச் சுட்டுவதாக உள்ளது. இச்சித்தரிப்பு, சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்களுடனான போரில் விலங்குகள் வெளிப்படுத்தியுள்ளதை முழுமையாக ஒத்துள்ளது. (பார்க்க: யுத்தபூமி அத்தியாயங்கள்: 30, 31 புலிக்குத்திப்பட்டாள் பெண் காட்சிகள்). அம்மரபு இங்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் தலைமுடியும் குத்திட்டு இருப்பதாகவே காணலாம். இதுவும், சிந்துவெளி புலிக்குத்திப்பட்டாள் முத்திரைகளில் ஒன்றில் காணப்படுவதற்கு இணையானதே.
இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ள முறை கவனிக்கத்தக்கதாகிறது. புலி உருவமும், புலியை வெற்றிகொண்ட மனிதனின் உருவமும், தடிப்பான குச்சி வடிவ கோட்டுருவ முறையில் தீட்டப்பட்டுள்ளது. இது, புலி வீரன் - 1 சித்தரிப்பில் இருந்து வேறுபட்டது.
முதல் ஓவியத்தில் கண்ட வில்லாளியின் கல்பதுக்கையிலேயே பிற புலி மனிதர்களின் ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. அல்லது பெருங் கற்காலப் பண்பாட்டின் புதிர்கள் சிலவற்றை விடுவிக்கிறது என்றும் கொள்ளலாம். அதாவது, ஒரு கல்திட்டை பலருக்கு நினைவிடமாக்கப்பட்டுள்ளது என்பது, அக்காலப் பண்பாட்டின் ஒரு விடுவிக்கப்பட்ட புதிர் எனலாம். இதில் இடம்பெற்ற மனிதர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் வீரப்பண்பை வெளிப்படுத்தி மாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். இவ்வீரப்பண்பு காரணமாகவே, இவர்கள் தாம் சார்ந்த குழுவின் தலைமையை ஏற்றவர்களாகவும் விளங்கியிருக்க வேண்டும்.
இந்த ஓவியத்தொகுப்பில் உள்ள ஓவியங்களில், முதலில் வரையப்பட்ட ஓவியம் எது? அதாவது, இக்கல்திட்டை நினைவுச் சின்னம் யாருக்கு முதலில் எடுக்கப்பட்டது என்பதை அறியமுடியாது உள்ளது. மங்கலான ஓவியங்கள் காலத்தில் பழைமை வாய்ந்தது எனக்கொண்டால், புலி வீரன் 3 முதல் ஓவியமாகிறது. அதன்பிறகு வில்லாளி, புலி வீரன் 2, கடைசியாக புலி வீரன் 1 என வரிசைப்படுத்த முடியும். ஆனால், இது ஏற்கத்தக்கதா என்பது உறுதியில்லை.
வாழிடக்குகை ஓவியத்தின் ஓவியனுக்கும், கல்திட்டை ஓவியத்தின் ஓவியனுக்கும் கிடைக்கும் கால அவகாசம் என்பது வேறுபட்டது. கல்திட்டை ஓவியனுக்கு குறைவான கால அவகாசமே கிடைக்கும். மேலும், கல்திட்டை எழுப்பிய பிறகு பிற சடங்குகள் மேற்கொள்ளத் தொடங்கும்முன்பாகக் கிடைக்கும் சிறு அவகாசத்திலேயே, தன்னுடைய அல்லது தன் குழுவின் கருத்தை வெளிப்படுத்தும் ஓவியத்தைப் படைக்க வேண்டும். இந்த அவகாசமின்மையே, அதாவது நேர நெருக்கடியும் ஓவியங்கள் சிறுத்தும் தெளிவற்றும் இருப்பதற்குக் காரணமாகும். அப்போது, இவ்வரிசை மாறும்.
இக்கல்திட்டை ஓவியங்கள் அனைத்தும் வெள்ளை வண்ணம் கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு தலைமுறை இடைவெளியில் மரணத்தைத் தழுவியவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டவை என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளலாம். இதிலும், தலைமுறை இடைவெளி என்பது சமகால அளவைக் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், புலி வீரன் 1 மற்றும் புலி வீரன் 4-க்கும் கால இடைவெளி மிகக் குறுகியதாக இருக்க வேண்டும் என்பதை ஓவியத் தொழில்நுட்பம் காட்டுகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.