அத்தியாயம் 35 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 28

புலி போன்ற விலங்கை வீட்டு விலங்கைப்போல இழுப்புக் கயிருடன் காட்சிப்படுத்தியிருப்பது மிகை சித்தரிப்பே என்றாலும், அங்கு வீரனின் வீரம் முதன்மையான குறியீடாக்கப்பட்டு சித்தரிப்பாகிறது என்று கருதமுடிகிறது.
Updated on
6 min read

சிந்துவெளி முத்திரைகளில் வீரப்பண்பும்,

தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களும்

(தொடர்ச்சி)

ஒரமணகுண்டா - 7

இந்தக் கல்திட்டை ஓவியத்தொகுப்பில் விலங்கு மீது அமர்ந்த மனித வடிவம் ஒன்று, தனிமனித வடிவம் ஒன்று, கட்டங்களால் ஆன குறியீடு ஒன்று, குத்துக்கோடும் புள்ளிகளால் ஆன குறுக்குக்கோடுகள் கொண்ட குறியீடு ஒன்று என நான்கு வடிவங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியத்தில் இடம்பெறும் விலங்கு மீது அமர்ந்த மனித வடிவம், 15 கட்டங்கள் கொண்ட புரிந்துகொள்ள முடியாத குறியீடு ஒன்றின் மீது காட்டப்பட்டுள்ளது. இக்குறியீட்டில் ஆறு கட்டங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று அமைந்த இரு வரிசையும், மூன்றாவது வரிசையில் மூன்று கட்டங்கள் இடம்பெற்று, அடுத்த மூன்றாவது வரிசையில் மூன்று கட்டங்கள் இடம்பெற்று, அடுத்த மூன்று கட்டங்களுக்கான இடத்தில் விலங்கு மீது அமர்ந்த மனிதனின் வடிவம் இடம்பெற்றுள்ளது.

ஒரமணகுண்டா - கல்திட்டை ஓவியம் 7

இந்தக் குறியீட்டை கீழ்க்கண்டவாறும் அடையாளப்படுத்த முடியும். வரிசைக்கு ஆறு சிறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு பெரிய கட்டத்தின் மேல்வரிசையில், இடதுபுற மூன்று கட்டங்கள் இடம் பெற வேண்டிய இடத்தில், விலங்கு மீது அமர்ந்த மனிதன் உருவம் இடம்பெற்றுள்ளது.

இதனை கட்டுமான வடிவமாகக் கருதுவர். இக்கருத்தின் அடிப்படையில், இந்த ஓவியத்தில் இடம்பெற்றவன், விடுபட்ட அந்த மூன்று சிறு கட்டங்களுக்கு உரிய பகுதிக்கு உரிமையானவனாகவோ, காவல் புரிந்தவனாகவோ, அல்லது எதிரிகளின் இடத்தில் ஊடுருவியனாகவோ இருக்கக்கூடும்.

இக்குறியீட்டுக்கு சற்றுத் தொலைவில் ஒரு தனிமனித வடிவம் இடம்பெற்றுள்ளது. இந்த இரு சித்தரிப்புகளுக்கு மத்தியில் சற்றுக் கீழ்ப் பக்கத்தில் நேர்க்கோடு ஒன்றும், அதன் உச்சியானது கிளை பிரிந்தும், நடுவில் ஒருபுள்ளி பெற்றும், நேர்க்கோட்டின் குறுக்கே புள்ளியால் ஆன நான்கு குறுக்குக் கோடுகளும் கொண்ட குறியீடு ஒன்று வரையப்பட்டுள்ளது. இக்குறியீட்டையும் கட்டுமான வடிவமாகவே காண்பர். இருந்தும், இக்குறியீட்டின் நோக்கம் விளங்கவில்லை.

ஒரமணகுண்டா - 8

இந்தக் கல்திட்டை ஓவியத்தொகுப்பில், ஒரு குறியீடும் ஒரு விலங்கு மீது அமர்ந்த மனித வடிவமும் இடம்பெற்றுள்ளன. இக்குறியீடும் புதிரான ஒன்றாகவே இருக்கிறது. முட்டை வடிவ வட்டத்தின் மையத்தில் நேர் குத்துக்கோடு ஒன்றும், மேல் பகுதியில் இரண்டு குறுக்குக் கோடுகளும், கீழ்ப் பகுதியில் அரைவடிவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இக்குறியீட்டையும் கட்டுமான வடிவம் என்று கருதுவர். இது குறிப்பிடும் செய்தியை அறியமுடியவில்லை. அதற்கு அடுத்து விலங்குடன் கூடிய மனித வடிவம் ஒன்று வரைப்பட்டுள்ளது.

ஒரமணகுண்டா - கல்திட்டை ஓவியம் 8

ஒரமணகுண்டா - 9

இந்தக் கல்திட்டை ஓவியத்தொகுப்பில் விலங்கு மீது அமர்ந்த இரு மனித வடிவங்களும், குத்துக்கோடும், அதன் குறுக்கே புள்ளிகளால் ஆன குறுக்குக் கோடுகள் கொண்ட குறியீடு ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இக்குறியீடு, கல்திட்டை 7-ல் இடம்பெற்ற குறியீட்டை நினைவுபடுத்துவதுபோல இருப்பினும், சிற்சில வேறுபாடுகளைக் காணமுடிகிறது. குறிப்பாக, இதில் கிளை பிரியும் உச்சியாகக் காட்டப்படவில்லை; புள்ளிகளால் ஆன குறுக்குக் கோடுகளில் முழுமையைக் காணமுடியவில்லை. விலங்கு மீது அமர்ந்த இரு மனித வடிவங்களும் குத்துக்கோடும் குறுக்குக்கோடும் இடம்பெற்ற குறியீட்டுக்கு இருபுறமும், நேருக்கு நேர் பார்ப்பதுபோலும் தீட்டப்பட்டுள்ளன. இம்மனித வடிவங்கள் இரண்டின் தலைப்பகுதியில் அரைவட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வகையான சித்தரிப்பை மல்லச்சந்திரம் கல்திட்டை ஓவியங்களிலும் காணப்படுவது குறித்து முன்னர் விளக்கப்பட்டுள்ளது. (காண்க, அத்தியாயம் 34).

ஒரமணகுண்டா - கல்திட்டை ஓவியம் 9/1

இக்கல்திட்டை, தெற்குப் பக்கக் கற்பலகையின் வெளிப்புறம், விலங்கு மீது அமர்ந்த நிலையில் ஏழு மனித வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை இரண்டு வரிசையில் உள்ளன. முதல் மேல் வரிசையில் உள்ள இரண்டு வடிவங்களும், ஒரு திசையை நோக்கியவாறு வரிசைக்கிரமமாக உள்ளன. கீழ் இரண்டாம் வரிசையில் இடம்பெற்றுள்ள இரண்டு வடிவங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி எதிர் எதிர் திசையில் வரையப்பட்டுள்ளன. இவை படை அணிவகுப்பையும், அதனை மேற்பார்வை இடுவதையும் குறிப்பிடுகிறதா அல்லது வேறு ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறதா என்பதை அறியமுடியவில்லை.

ஒரமணகுண்டா - கல்திட்டை ஓவியம் 9/2

*

குருவிநாயனப்பள்ளி

குருவிநாயனப்பள்ளி என்ற கிராமம், கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 17 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குருவிநாயனப்பள்ளின் மலைப்பகுதி “மேலகோட்டை” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் உள்ள இடம் “பண்டவர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில், 50-க்கும் மேற்பட்ட கல்திட்டை வகை ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இதில் 20 கல்திட்டைகள் பெரிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பெரிய கல்திட்டைகள் இருவகைக் கல்வட்டங்களைக் கொண்டு பெரிய கல்வட்டக்கல்-கல்திட்டை வகை கூட்டுவடிவ ஈமச்சின்னங்களாக அமைந்துள்ளன. முதல் வட்டமாக அமைந்த வெளிவட்டக் கல்வட்டமானது, இயற்கையாகக் கிடைக்கும் பெரிய கரடுமுரடான உருளைக்கற்கள் கொண்டு அமைந்துள்ளது.

இரண்டாவது உள்வட்டம், செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட கற்பலகை வட்டமாக அமைந்துள்ளது. இக்கல்பதுக்கையின் கிழக்குப்புற கற்பலகையில், வட்ட வடிவில் இடுதுளையும் அமைந்துள்ளது. இந்த இடுதுளைக்கு நேர்க்கோட்டில் அமையும் கற்பலகை வட்டத்தின் கற்பலகை மட்டும் மேல்பகுதியில் அரைவட்ட வடிவம் பெற்றதாக உள்ளது. பிற கற்பலகை வட்டத்தின் கற்பலகைகள் அனைத்தும் நான்கு முனைகள் கொண்ட செவ்வக வடிவக் கற்பலகைகளே.

இங்குள்ள ஒரு கல்திட்டையின் கல்லறையின் மேற்குப்புற கற்பலகையில் இடுதுளை அமைப்புக்கு நேர் அமையும் மேற்குப்புற பலகைக்கல்லில் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட ஓவியம் உள்ளது.

குருவிநாயனப்பள்ளி - கல்திட்டை ஓவியம்

இந்தக் கல்திட்டை ஓவியத்தொகுப்பில், நான்கு மனித வடிவங்களும் ஒரு விலங்கு வடிவமும் அம்புக்குறி கட்டம் அமைப்பினை உடைய குறியீடு மற்றும் இருபக்கப் புள்ளிகள் கொண்ட கட்டங்கள் கொண்ட மற்றொரு குறியீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் நேர்க்கோட்டில் தீட்டப்பெற்றுள்ளன.

மனித வடிவங்கள் நான்கும், இரண்டிரண்டாக வடக்கிலும் தெற்கிலும் வரையப்பட்டுள்ளன. விலங்கு வடிவம் வடக்குப்புற மனித வடிவத்துக்கு அடுத்ததாக வரையப்பட்டுள்ளது. இரண்டிரண்டாக உள்ள மனித வடிவங்களுக்கு இடையில் வரிசைக்கு நான்காக மூன்று வரிசையில் அமைந்த 12 கட்டங்கள் கொண்ட ஒரு குறியீடு இடம்பெற்றுள்ளது. இக்கட்டங்கள் ஐந்து குத்துக்கோடுகளாலும் நான்கு கிடைக்கோடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளன. ஐந்து குத்துக்கோடுகளில் உட்புறமாக அமையும் மூன்று குத்துக்கோடுகள், கட்டத்துக்கு மேலாக நீண்டு உச்சியில் அம்புமுனை பெற்றுள்ளன. இதற்கு அருகில் பக்கத்துக்கு ஒன்றாக வட்டப்புள்ளிகள் கொண்ட இரு முழுமையான கட்டங்களும் அதன் குத்துக்கோடுகள் நீட்டப்பட்டதால் தோன்றும் ஒரு முழுமையற்ற கட்ட வடிவத்தில் மற்றொரு குறியீடும் இடம்பெற்றுள்ளன.

இக்குறியீடுகள் இரண்டையும் கட்டட வடிவங்கள் என்ற கருத்து உண்டு. இந்த ஓவியம் குறித்து கா. இராஜன் அவர்கள் இவ்வோவியத்தில் காணப்படுவது போன்ற அம்புமுனை கொண்ட கட்டங்கள், வரலாற்றுக் காலத்தின் வளமைச்சடங்கில் இடம்பெறும் சன்னியாசிக் கற்களில் காணப்படும் கட்டங்கள்போல் உள்ளன என்றும், ஓவியத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள சிறு விலங்கு உருவத்தை கால்நடை ஒன்றைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் என்றும் குறிப்பிடுகிறார். (K. Rajan, Rock Art in Tamil Nadu: A Status Report, Essay, in Man In India, No. 91, pp. 355-356). இதன்மூலம் வளமைச் சடங்குடன் தொடர்புடையதாக இக்கல்திட்டையைக் காணலாம்.

*

தேகபள்ளி

பெருங் கற்படைச் சின்னங்களில் ஓவியம் காணப்படும் மற்றொரு இடம் தேகபள்ளி ஆகும். தேகபள்ளி கிராமம், கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில் வரட்டனபள்ளியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, தனியார் நிலத்தில் கல்திட்டைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று “U” வடிவ இடுதுளையுடன் காணப்படுகின்றன. இக்கல்திட்டையில் ஓவியத்தொகுப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேகபள்ளி - கல்திட்டை ஓவியம்

இந்த ஓவியத்தில், மொத்தம் மூன்று தனிமனித வடிவங்களும், விலங்கு மீது அமர்ந்த நான்கு மனித வடிவங்களும், ஒரு தனிவிலங்கு வடிவமும் இடம்பெற்றுள்ளன. இவை மூன்று வரிசையில் தீட்டப்பட்டவையாக இருந்தாலும், இவற்றை இரண்டு தொகுப்பாகவே கருதமுடிகிறது. முதல் வரிசையில் நடுவில் விலங்கின் மீது அமர்ந்த மனிதனும், இவனுக்கு இருபுறம் இரு தனிமனிதர்களும் இடம்பெற்றுள்ளனர். கீழாக இரண்டாவது வரிசையில் தனிமனிதன் ஒருவனின் உருவம் மேல்வரிசையில் அமையும் விலங்கு மீது அமர்ந்துள்ள மனிதனுக்குக் கீழாகத் தீட்டப்பட்டுள்ளது. இரண்டாவது உள்ள தொகுப்பில், விலங்கின் மீது அமர்ந்த மூன்று மனிதர்களும் ஒரு தனி விலங்கும் இடம்பெற்றுள்ளன. இவை ஒரு நேர்க்கோட்டு வரிசையில் அமையவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

இவ்வோவியத் தொகுப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டால், இரண்டாம் தொகுப்பில் உள்ள விலங்கு மீது அமர்ந்துள்ள முதல் மனிதனைத் மற்ற எல்லா உருவங்களும் தாக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். விலங்கு மீது அமர்ந்துள்ள முதல் மனித உருவத்தைப் பார்த்தபடி பிற உருவங்கள் தீட்டப்பட்டுள்ளது இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது. இரண்டாம் வரிசை தனிமனிதன், மூன்றாம் வரிசையில் உள்ள தனிவிலங்கு உருவத்தில் இருந்து வீழ்ந்தவனாகவோ அல்லது கீழிறங்கி போர் புரிபவனாகவோ இருக்கலாம். மூன்றாம் வரிசை, விலங்கு மீது அமர்ந்த முதல் மனிதனுக்கு நான்காவதாக அமைந்த விலங்கு மீது அமர்ந்த மனிதனிடமிருந்து ஒரு கோடு அல்லது கோடு போன்ற தோற்றம் அளிக்கும் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இதன் பொருளை விளக்கிக்கொள்ள முடியவில்லை. இந்த ஓவியத்தில் உள்ள மனிதர்கள் ஆயுதங்கள் ஏதும் கொண்டிருப்பதாகக் காட்டப்படவில்லை என்றாலும், இதனை போர்க்காட்சி ஒன்றாகவே கொள்ளமுடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி - ராயகோட்டை சாலையில், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள மூங்கில்புத்தூர் கிராமத்தில் உள்ள கல்திட்டைகளுள் ஒன்றிலும் ஓவியங்கள் இருப்பது, அதில் வேல், வில் மற்றும் விலங்கு வடிவங்கள் காணப்படுவது குறித்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் முழு விவரம் அறியமுடியவில்லை.

இங்கு விளக்கப்பட்ட ஓவியங்களில், “விலங்கு மீது அமர்ந்த மனித வடிவம்” என்று பொதுப்படையாகவே குறிக்கப்பட்டு வந்துள்ளது. ஏனெனில், இவ்வோவியங்களில் இன்ன விலங்கு என்று குறிப்பிட்டு அறியும் சான்றுகள் அறிதாகவே உள்ளன. வாழிட ஓவியங்களில் உள்ள தெளிவு, கல்திட்டை ஓவியங்களில் இல்லை. மல்லசந்திரம் புலிவீரன், ஓவியம் இதற்கு விதிவிலக்கு. இவை வீரம் மற்றும் போர்க்காட்சிகளோடு தொடர்புடையவை என்பதால், இங்கு விலங்கு என்று குறிக்கப்படுவது குதிரை என்று எடுத்துக்கொள்ளலாம்.

கோட்டுருவத்தில் ஆன இவ்வோவியங்களில், அடர்வண்ணம் முறை இல்லாததால், விலங்கு உருவங்களின் நுட்பமான வேறுபட்டை அறிமுடியாது உள்ளது. மேலும், புலி மற்றும் குதிரை விலங்குகள் மீது அமர்ந்திருக்கும் சித்தரிப்பிலும் வேறுபாடு அற்ற நிலை உள்ளது. புலியை வீழ்த்தி வெற்றிகொள்ளதும்கூட, குதிரையைச் செலுத்துவது போன்று அல்லது பயணிப்பது போன்று இழுப்புக் கயிரு அல்லது இழுப்பு வாருடன் காட்டுப்பட்டுள்ளது.

புலி போன்ற விலங்கை வீட்டு விலங்கைப்போல இழுப்புக் கயிருடன் காட்சிப்படுத்தியிருப்பது மிகை சித்தரிப்பே என்றாலும், அங்கு வீரனின் வீரம் முதன்மையான குறியீடாக்கப்பட்டு சித்தரிப்பாகிறது என்று கருதமுடிகிறது. கல்திட்டை ஓவியங்களில் இடம்பெறுபவை போர் நிகழ்வுடன் தொடர்புடையவை என்றாலும், பல காட்சிகளில் வீரர்கள் ஆயுதங்கள் இன்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

தொகுப்புகளாகவே உள்ள இக்கல்திட்டை ஓவியங்களில் இருந்து, எந்த வீரனுக்கு அல்லது வீரர்களுக்கு இக்கல்திட்டைகள் எழுப்பப்பட்டன என்பதும் அறியமுடிவதில்லை. ஏனெனில், உருவங்கள் ஒருமித்த பண்புகளுடனே படைக்கப்பட்டுள்ளன. எதிரி அல்லது வேற்று ஆள் யார் என்பதை உணர்த்தும் வேறுபாடுகளையும் இவ்வோவியங்கள் கொண்டிருக்கவில்லை. சில ஓவியங்களில், சிறப்புப் பண்பாகக் காட்டப்பட்டுள்ள தலைப்பகுதியில் அரை வட்டம், கீற்றுகள் கொண்ட வட்டம் போன்ற குறிப்புகள் எல்லா ஓவியங்களிலும் இடம்பெறுவதில்லை. இவ்வகையான ஒருமித்த குணங்கள், இவ்வோவியங்கள் மீதான புரிதலுக்குக் குறைவான வாய்ப்புகளையே வழங்குகின்றன.

சிந்துவெளி எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மற்றும் கீறல் குறியீடுகள் இடம்பெறும் கல்திட்டைகள் பெருங் கற்படைக் காலம் என்ற இரும்புக் காலத்தின் நெடிய காலப்பரப்பில் வரலாற்று உதய காலகட்டத்தையும், வரலாற்றுக் காலத்தையும் சான்றாக்குகின்றன எனலாம். எனில், இவற்றின் காலத்தை சங்க காலத்துக்குச் சற்றுமுன்னர் கணிக்கலாம். அதாவது, மு.பொ.ஆ. 400 முதல் மு.பொ.ஆ. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கமுடிகிறது. கொடுமணல் மற்றும் அழகன்குளம் அகழாய்வுகளில் கிடைத்த மட்பாண்ட கீறல் குறியீடுகளின் காலம் மு.பொ.ஆ. 500 முதல் மு.பொ.ஆ. 700 வரை கணிக்கப்பட்டிருப்பதால், கீறல் குறியீடுகள் இடம்பெற்ற கல்திட்டைகளின் காலத்தையும் இதனை ஒத்ததாகக்  கொள்ளமுடியும்.

இக்கல்திட்டைகள் வீரப்பண்பை வெளிப்படுத்தும் முகமானவை என்பதில் மறுப்பில்லை. அதேசமயத்தில், இவை வரலாற்றுக் கால சன்னியாசிக்கல் வழிபாடு போன்ற கால்நடை வளமைச் சடங்குச் சின்னங்களாகவும் விளங்கியிருக்கின்றன என்று அனுமானிக்க முடிகிறது. மூத்தோர் வழிபாடே வளமையை நோக்கமாகக் கொண்டதுதான் எனினும், செல்வமாகக் கருதப்படும் கால்நடைகளின் வளமைக்கும் அது சார்ந்த தொடர்புடையதாகவும் எழுப்பப்பட்டுள்ளது. இப்பண்பும், நடுகற்கள் பண்பாட்டில் வீரம் -  வளமை இரண்டும் இணைந்து வெளிப்பட்டுள்ளமைக்கு ஒத்ததாக உள்ளது. இது, பெருங் கற்படைப் பண்பாட்டின் நீட்சியே நடுகல் பண்பாடு என்பதை தெளிவிக்கின்றன.

வீரம், இப்பண்பாட்டின் தவிர்க்கமுடியாத அங்கம் என்றால், இம்மரபின் துவக்கத்தை சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்து காண முடிகிறது. சிந்துவெளிப் பண்பாட்டின் இறுதியும் தென்னிந்திய பெருங் கற்படைப் பண்பாட்டின் துவக்கமும் மு.பொ.ஆ. 1500 என்று கணிக்கப்பட்டிருப்பதும் இம்மரப்பின் தொடர்ச்சிக்கான ஒரு இணைப்புள்ளியாக இருக்கிறது எனலாம். பெருங் கற்படைச் சின்னங்களும், முதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு எழுப்பட்டு பின்னர் எல்லா மூத்தோர்களுக்கும் உரிமையானதாக ஆகியிருக்க வேண்டும் என ஊகிக்க இடமுள்ளது.

ஈனச்சின்னங்களின் வளர்ச்சி, எளிய ஈமக்குழி நிலையில் இருந்து படிப்படியாக மூலப்பொருட்களின் அளிப்பு, அவ்வக்காலத் தொழில்நுட்பம், பொருளாதார நிலை ஆகியவை கொண்டு வளர்ந்துள்ளன / வெளிப்பட்டுள்ளன. கடந்த 26 அத்தியாயங்களின் பயணம் இதனை வெளிப்படுத்தவே நிகழ்ந்தது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com