நெடுங்கல் என்ற குத்துக்கல் வகையினம்
பெருங் கற்படைச் சின்னங்களுள் எண்ணிக்கை குறைவாகக் கிடைத்துள்ள அரிதான சிறிய வகையாக உள்ளது என்றால், அது நெடுங்கல் என்ற குத்துக்கல் வகையாகும். இவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கக் காரணம், இவை ‘பெருங் கற்படைப் பண்பாட்டி’ன் இறுதிக்காலச் சின்னத்தின் வடிவமாக இருக்கலாம் என்ற கருத்துதான். மேலும், இவ்வடிவத்தில் இருந்துதான் ‘நடுகல் பண்பாடு’ தொடங்குகிறது என்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்குள், தனி குத்துக்கல் சின்னங்களை மட்டும் காணமுடிகிறது. அண்டை மாநிலங்களான இன்றைய ஆந்திரம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் குத்துக்கல் வரிசை மற்றும் குத்துக்கல் இணை வரிசை வகையினச் சின்னங்களைக் காணமுடிகிறது.
தற்பொழுதுவரை அறியப்பட்டவற்றில் இருந்து, குத்துக்கல் இரண்டு வகையாகப் பயன்பாட்டில் இருப்பதை அறியமுடிகிறது. முதல் வகையில், குத்துக்கல் கூட்டுவடிவ ஈமச்சின்னத்தில் அலங்கார உறுப்பாக இருப்பது. இரண்டாவது வகையில், குத்துக்கல் அரண் உறுப்பாகச் செயல்படுவது. அதாவது, இரண்டாவது வகையில் குத்துக்கற்கள் ஒரு கல்வட்டம் அமைக்கப்படுவதன் நோக்கத்திலும் பயன்பாட்டிலும் இருப்பது.
குத்துக்கல் என்ற நெடுங்கல் ஈமச்சின்னங்கள், ஒரு கூட்டு வடிவ ஈமச்சின்னங்களாக இருப்பவை என்பது முந்தைய அத்தியாயங்களில் விளக்கப்பெற்றன. பார்வைக்குப் புலப்படும் குத்துக்கல், குழி, பேழை, தாழி, பதுக்கையின் மீது அமைக்கப்படும் ஒரு அலங்கார வடிவமே என்பதும் அங்கு விளக்கப்பெற்றது.
முதல்வகையில், தனி குத்துக்கல் சின்னங்கள் உருளைக்கல் வட்டம் அல்லது பலகைக்கல் வட்டத்துடன் இணைந்த வடிவில் உள்ளவை இந்நாள் வரை அறியப்பட்டுள்ளன. உம்: திருமல்வாடி (தருமபுரி மாவட்டம்), கொடுமணல் (ஈரோடு மாவட்டம்) தேவனூர் (திருக்கோவிலூர் வட்டம்) ஆகிய இடங்களில் அமைந்தவை.
(திருமல்வாடி குத்துக்கல் – தோற்றம் 1)
(திருமல்வாடி குத்துக்கல் – தோற்றம் 2)
அதே சமயத்தில், முக்குடிவேலன்பாளையம் (ஈரோடு மாவட்டம்) என்ற இடத்தில் காணப்படும் இரண்டு குத்துக்கற்கள், பதுக்கை வகை ஈமச்சின்னத்தின் அரணுறுப்பாக உள்ள கல் வட்டத்துக்கு விளிம்பில் அமைப்பட்டுள்ளன. (K. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, pp. 64-65 & Plate: 4b). மற்றொரு வகையில், பதுக்கையின் அரணுறுப்பாக உள்ள கல்வட்டத்தின் அங்கமாகக் குத்துக்கற்கள் நடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
(கொடுமணல் குத்துக்கல்)
கொடுமணல், தேவனூர் ஆகிய இடங்களில் காணப்படும் குத்துக்கற்கள், அகலமாகவும், நீண்டும் காணப்படுகின்றன. ஆனால், திருமல்வாடி குத்துக்கல் இவற்றின் வடிவிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகிறது. இதன் அடிப்பகுதி உருண்டு பருத்தும், மேலே செல்லச்செல்ல சிறுத்தும் கூர்மையாகவும் உள்ளது.
மேற்கண்ட அமைப்புகளில் இருந்து ஈமச் சின்னத்தின் முதன்மை அலாகாகிய குழி, தாழி, பேழை, கல்பதுக்கையின் மேல் ஓர் ஒழுங்கற்ற உயரமான கல்லை நட்டுவைத்த அமைப்பானது குத்துக்கல் என்று அழைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
இயற்கையான கற்களுடன், சில இடங்களில் தலைப்பகுதியில் அரைவட்ட வடிவடிவில் அழகாக நன்கு செதுக்கப்பட்ட தலைப்பகுதி கொண்ட ஒரு பலகைக்கல்லையும் குத்துக்கல்லாகப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. இவ்வகைக்குச் சான்றாக, தேவனூர் குத்துக்கல்லைக் குறிப்பிடலாம்.
இவ்வகைப் பலகைக்கல் அமைப்பில் நடப்பட்ட குத்துக்கல்லே நடுகல் பண்பாடாக உருவெடுத்தது என்ற கருத்தும் உண்டு. இதன் தொடர்ச்சியாக, உருவ அமைப்பில் காணப்படும் குத்துக்கல் வகை குறிப்பிடத்தக்கது. மனித வடிவக்கல் (Anthromorpuic Menhir) என்று அழைக்கப்படும் குத்துக்கல் இந்த வகையைத் சார்ந்தது.
இதன் தோற்றம் கொண்டு, இவ்வகைச் சின்னங்கள் விசிறிப்பாறை என்றும் அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற குத்துக்கற்கள், தமிழகத்தில் உதயநத்தம் (விழுப்புரம் மாவட்டம்) மற்றும் மோட்டூர் (வேலூர் மாவட்டம்) ஆகிய இரண்டு இடங்களில் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டத்திலும் இத்தகைய ஈமச்சின்னங்கள் காணக் கிடைக்கின்றன.
இவ்வகைச் சின்னத்தை தாய் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புபடுத்திய ஆய்வுகள், உலகின் பல பகுதிகளில் இருந்து வெளிவந்துள்ளன. இன்றைய துருக்கி நாட்டில், பண்டைய நாகரிகங்கள் சிறந்து விளங்கிய மெசபடோமியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வடிவக் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும், இக்கற்கள் தாய் தெய்வத்துடன் தொடர்புபடுத்தப்படுவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
தாய் தெய்வத்துடன் தொடர்புபடுத்தப்படும் இவ்வகை ஈமச்சின்னங்கள், பண்பாட்டு ரீதியான பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்நாள் வரை ஆய்வாளர்கள் யாவரும் இக்கேள்விகளை எழுப்பி பதில் கண்டதாக அறியமுடியவில்லை. எந்த ஆய்வும் இந்தத் திசையில் விரியவும் இல்லை.
தாய் தெய்வ வழிபாடு, ஆதிவேட்டைச் சமூகத்தில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தொடர்ச்சியாகப் பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் வழக்கில் இருந்து வருகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மறுப்பதற்கில்லை. இப்பின்னணியில், நமக்குக் கிடைத்துவரும் தொல்பொருட்களில், தாய் தெய்வங்களுடன் தொடர்புடையவை யாவும் வழிபாட்டுக்குரிய சித்தரிப்பு அல்லது காட்சிப்படுத்தும் உருவங்களேயன்றி வேறில்லை.
பெருங் கற்படைச் சின்னங்களைப் பொருத்த அளவில், அவை இறந்த எல்லோருக்கும் எடுக்கப்பட்டவைதானா அல்லது வீரத்தை வித்தி மாய்ந்தவர்களுக்கு மட்டும் எழுப்பப்பட்டவையா என்பதில் ஒருமித்த கருத்துக்கோ, ஆய்வு முடிவுக்கோ வரமுடியாது உள்ளது. அதுபோலவே, ஈமச்சினங்களில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள், எந்தப் பாலினத்தைச் சார்ந்தவை என்பதிலும் நமது ஆய்வுகள் முதிர்ச்சி அடையவில்லை.
இந்நிலையில், இன்றளவில் நாட்டுப்புற வழக்கில் உள்ள மரபுகளைக் அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இறந்தவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகை ஈமச்சின்னமானது எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம். அச்சின்னங்கள் வீட்டுத் தெய்வங்களாக வணங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு எழுப்பப்பெற்ற சின்னங்கள் யாவும், வீரம் வித்தி மாய்ந்தவர்களின் சின்னங்களே என்று மயக்கம் தரும் முடிவுக்கு வர வேண்டும் அல்லது வர வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், வீரம் வித்தி மாய்ந்தவர்களுக்கு, ஊர் கூடி குலதெய்வமாகவோ அல்லது ஊர்த்தெய்வமாக ஏதோ ஒருவகை ஈமச்சின்னமானது எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இன்றைய நிலையில், எச்சின்னம் வீட்டுச் சின்னம்? எச்சின்னம் குலதெய்வம்? எச்சின்னம் ஊர்த்தெய்வம்? என்று அடையாளம் காணமுடியாது உள்ளது என்பது உண்மை நிலையே. மேலும், வீட்டுச் சின்ன நிலையில் இருந்து குல / ஊர்ச்சின்னங்களாகப் பரிமாணம் அடைந்தன என்பதும் ஒரு புரியாத நிலையே. போலவே பாலினமும் அறியமுடியாத ஒன்றாகவே உள்ளது.
இப்பின்புலத்துடன், ஆந்த்ரோபார்மிக் வடிவம் என்றும் விசிறிப்பாறை என்றும், இன்னும் ஸ்ரீவச்சம் என்றும் குறிப்பிடப்படும் தாய் தெய்வக் கற்கள், பெண் பாலினம் சார்ந்து அடையாளம் காணப்பட்ட முதற் பெருங் கற்படை ஈமச்சின்னமாகிறது. இச்சின்னம் எழுப்பப்பட்டதன் நோக்கம் பற்றி அறியமுடியாது உள்ளது. எனினும், இதன் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டு, இது தலைமைப்பண்பு கொண்ட பெண்ணுக்கு எழுப்பப்பட்ட ஈமச்சின்னம் என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம்.
இக்கருத்தை ஆமோதிக்கும்போது, பெருங் கற்படைப் பண்பாட்டுக் காலத்தில், பெண் தலைமை கொண்டிருந்த சமூகம் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், மோட்டூர், உதயநந்தம் விசிறிப்பாறை கற்கள் ஈமச்சின்னங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், தாய்வழிச் சமூகத்தை ஆளும் குடிக்கு உள்ளும் அடையாளப்படுத்துகிறது என்பது உண்மையே. இருந்தும், தாய் தலைமையில் குடியோ, குலமோ, நாடோ ஆட்சி செய்யப்பட்டதற்கான சான்று இல்லை.
சங்க இலக்கியத்தில், பதுக்கையும் நெடுநிலைக்கல்லும்தாம் பெருங் கற்படைச் சின்ன வகையினங்களில் அதிகமாகக் குறிப்பிடப்படும் சின்னங்கள் ஆகும். பரல் உயர் பதுக்கையும் சில பாடல்களில் இடம் பெறுகின்றன.
அகம் 109-ம் பாடலைப் பாடிய கடுந்தொடை காவினார், பதுக்கையுடன் கூடிய கல்வட்டத்தை –
“அம்பின் விசை இட
வீழ்ந்தோர் எண்ணூ வரம்பு
அறியா உவல் இடு
பதுக்கை”
என்று குறிப்பிடுகிறார்.
புறம் 3-ம் பாடலில், இரும்பிடர்த்தலையார் -
“அம்புவிட வீழ்ந்தோர்
வம்பப் பதுக்கை”
என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு, பதுக்கையைச் சுட்டும் சங்கப் பாடல்கள் 14-க்கும் மேற்பட்டவை தொகுக்கப்பட்டுள்ளன.
நெடுங்கல் என்ற குத்துக்கல்லைக் குறிப்பிடும் சங்கப் பாடல்களாக,
“நட்ட போலும் நடாஅ
நெடுங்கள்”
என்று குறிப்பிடும் மருதன் இளநாகனாரின் அகம் 53-ம் பாடலும்,
“உயர் பதுக்கு இவர்ந்த
ததர் கொடி அதிரல்
நெடுநிலைக் கல்”
என்று குறிப்பிடும் இளங்கீரனார் பாடிய அகம் 35-ம் பாடலும் தொகுக்கப்பட்டுள்ளன.
இது, பதுக்கை, குத்துக்கல் சின்னங்களுக்கும் வீரப்பண்புக்கும் இடையிலான தொடர்பை ஒருவாறு உறுதிப்படுத்துகிறது. எனில், மோட்டூர், உதயநத்தம் தாய் தெய்வக் கற்கள், பெருங் கற்படைச் சின்னங்களில் ஒரு புதிராக மாறுகின்றன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.