Enable Javscript for better performance
Did you Know... History of kannadhasan- Dinamani

சுடச்சுட

  

  மரணித்தும், மக்கள் மனங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளாக கண்ணதாசன்..!

  By ஆர். வெங்கடேசன்  |   Published on : 17th October 2019 08:17 PM  |   அ+அ அ-   |    |  

  kannathasan

   

  வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள், மரணித்த பிறகும் மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக என்றென்றும் நிலைபெற்றுவிடுகிறார்கள், அவர்களில், தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னத கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். காலத்தால் அழியாத காவியங்களாக தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட அந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் இன்று.. அந்த தன்னிகரில்லா கவிஞனை தமிழர்கள் நினையாத நாள் என்று? கண்ணதாசன் என்ற தமிழ் காவியத்தை அவரது நினைவுநாளில் புரட்டிப்பார்க்கிற ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பாக எனக்கு தெரிந்ததை உங்களுக்காக..

  முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல்மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர்.

  தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக்கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப்போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் முரண்பாடுகளைக் கண்டு வளர்ந்தது. தமிழ் வழங்கும் இடங்களில் எல்லாம் அவரைச் சிறப்பாகத் திகழவைத்தவை அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களே.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியின் சிறுகூடல்பட்டி கிராமத்தில் பெற்றோர் சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி ஆச்சிக்கு 1927, ஜூன் 24-ல் பிறந்த முத்தையா, பின்னாளில்  கண்ணதாசன் ஆனது சுவாரசியமான கதை. அதை அவரது 'வனவாசம்' நூலைப் படித்தால் உணரலாம். உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

  செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருந்து வருகிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். 

  புனைபெயர்

  காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி.

  கல்வி

  சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி, அமராவதி புதூர் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசித்ததின் பலனாக, பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. 15 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பிவந்தார். சந்திரசேகரன் என்று புனைபெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். 

  கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் 17 வயதில் அவரது முதல் கவிதையான ‘‘நிலவொளியிலே” வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 

  நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "பிழை திருத்துனர்" வேலை கேட்டார். நேர்முகத் தேர்வில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ‘‘கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில்தான்.   

  கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார்.  

  பின்னர், திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. 

  கவிதைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட கண்ணதாசன், திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டின் வெளிச்சமாக, சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிடைத்தது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
   
  பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய ‘கள்வனின் காதலி’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல்தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 

  கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, கதை, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர் என சகல துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்திவந்த கண்ணதாசனின் பாடலை தங்களது இசையில் அவருடைய பாடல் இடம்பெறுவதை பெருமையாகக் கருதினர் அக்கால இசையமைப்பாளர்கள்.  

  எழுதிய காலம்

  1944 - 1981

  முதல் குறுங்காவியம்

  மாங்கனி. இது, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் சிறையில் இருந்தபோது படைத்தது. (1952-53)

  மணவாழ்க்கை

  1950-ல் கண்ணதாசனின் மணவாழ்க்கை தொடங்கியது. கவிஞருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்).

  இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் உரிமையாளர்).

  மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். மேடைப் பேச்சாளரும்கூட). 

  மூன்று மனைவியர், 15 பிள்ளைகள் என வாழ்ந்த கபடமற்ற வள்ளல் கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவுமறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. தன் குணச்சித்திரத்தை இரண்டே வரிகளில் பாடலாக எழுதியுள்ளார்.

  கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்கள், துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். 

  'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணை இருப்பு' என்பதே அப்பாடல். இப்பாடல், அவரே பாடுவதுபோல ‘இரத்தத்திலகம்’ படத்தில் இடம் பெற்றுள்ளது.

  அரசியல்

  தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன், 1949-ல் திமுக தொடங்கி அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஆரம்பகாலத்து திமுக தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். அரசியலில் துரோகமும் சுயநலமும் கோலோச்சுவது கண்டு விரக்தியுற்றவர் 1960-61-ம் ஆண்டுகளில் திமுகவில் இருந்து விலகிச் சிறிது காலம் கழித்துக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் அரசியல் தனக்கு ஒத்துவராது என்று முற்றிலும் அரசியலில் இருந்து விலகினார்.

  ஆரம்ப காலத்தில் பகுத்தறிவு என்ற போர்வையில் நடந்த நாத்திக பிரசாரத்தில் மூழ்கிய கண்ணதாசன், அதிலுள்ள ஏமாற்றுவித்தையை உணர்ந்து ஆத்திகப் பாதைக்கு திரும்பினார்.  

  கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறுகாப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. தமிழில் புதிய மறுமலர்ச்சியை பாரதிக்குப் பிறகு ஏற்படுத்தியவர் கண்ணதாசனே.

  இவரது 'சேரமான் காதலி' என்ற புதினம் 1980-ல் சாஹித்ய அகாதெமி விருது பெற்றது. 'குழந்தைக்காக' என்ற திரைப்படத்திற்கு எழுதிய திரைவசனத்திற்காக (1961) இவருக்கு தேசிய விருது கிடைத்தது. திரைப்பாடல்களிலும் செந்தமிழ் துள்ளி விளையாடுவது கண்ணதாசனின் சிறப்பு. பண்டைய இலக்கியங்களில் அவருக்கு இருந்த தேர்ச்சி திரைப்பாடல்களில் வெளிப்பட்டது. சந்தமும், செந்தமிழும் எந்த சிரமும் இன்றி கைகோர்த்தன. கண்ணதாசனின் பாடல்களில். அவர் ஆசுகவியாகவே திகழ்ந்தார்.

  பத்திரிகை

  அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களுடன், பத்திரிகையாசிரியராகவும் கண்ணதாசன் விளங்கினார். அவர் நடத்திய சண்டமாருதம், திருமகள், முல்லை, திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் ஆகிய இதழ்கள் தமிழ் இதழ்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாக இன்றும் பேசப்படுகின்றன. குறிப்பாக தென்றலில் அவர் தீட்டிய கூர்மையான அரசியல் நையாண்டியுன கூடிய  உருவகக் கட்டுரைகள் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வையும் பரபரப்பையும் உருவாக்கின.

  அரசவைக் கவிஞர்

  தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக (ஆஸ்தான கவிஞர்) கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

  அதன்பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றிபெற்று, தமிழக முதல்வரானார். அவர் கண்ணதாசனை, 28.3.1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.

  அர்த்தமுள்ள இந்துமதம்

  அர்த்தமுள்ள இந்துமதம் (பத்து பாகங்கள்), வனவாசம், மாங்கனி, ஏசு காவியம் ஆகியவை கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நூல்களாகும். பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யலஹரிக்கும் (பொன்மழை) கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார்.

  சுயபிரகடனம்

  கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். ''நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்.

  தமிழகத்தில் நாத்திகவாதமும் பிரிவினைவாதமும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதே பிரசாரக் காலத்திலிருந்து விடுபட்டு, தேசியத்தையும் தெய்வீகத்தையும்  உயர்த்திப் பிடித்த குரல் கவிஞர் கண்ணதாசன். மக்களிடம் வெகுவாகப் புழங்கிய திரையிசைப் பாடல்களின் மூலம் தனது கருத்துகளை ஆர்ப்பாட்டமின்றி அறிவுறுத்திய தேசிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது.

  கண்ணதாசனின் நூல்கள்

  * பிரதானமானவை
  * இயேசு காவியம்
  * அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  * திரைப்படப் பாடல்கள்
  * மாங்கனி

  கவிதை நூல்கள்

  * கண்ணதாசன் கவிதைகள் (6 பாகங்கள்)
  * பாடிக்கொடுத்த மங்களங்கள்
  * கவிதாஞ்சலி
  * தாய்ப்பாவை
  * ஸ்ரீகிருஷ்ண கவசம்
  * அவளுக்கு ஒரு பாடல்
  * சுருதி சேராத ராகங்கள்
  * முற்றுப்பெறாத காவியங்கள்
  * பஜகோவிந்தம்
  * கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

  புதினங்கள்

  * அவள் ஒரு இந்துப் பெண்
  * சிவப்புக்கல் மூக்குத்தி
  * ரத்த புஷ்பங்கள்
  * சுவர்ணா சரஸ்வதி
  * நடந்த கதை
  * மிசா
  * சுருதி சேராத ராகங்கள்
  * முப்பது நாளும் பவுர்ணமி
  * அரங்கமும் அந்தரங்கமும்
  * ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  * தெய்வத் திருமணங்கள்
  * ஆயிரங்கால் மண்டபம்
  * காதல் கொண்ட தென்னாடு
  * அதைவிட ரகசியம்
  * ஒரு கவிஞனின் கதை
  * சிங்காரி பார்த்த சென்னை
  * வேலங்காட்டியூர் விழா
  * விளக்கு மட்டுமா சிவப்பு
  * வனவாசம்
  * அத்வைத ரகசியம்
  * பிருந்தாவனம்

  வாழ்க்கைச்சரிதம்

  * எனது வசந்த காலங்கள்
  * எனது சுயசரிதம்
  * வனவாசம்

  கட்டுரைகள்

  * கடைசிப்பக்கம்
  * போய் வருகிறேன்
  * அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  * நான் பார்த்த அரசியல்
  * எண்ணங்கள்
  * தாயகங்கள்
  * வாழ்க்கை என்னும் சோலையிலே
  * குடும்ப சுகம்
  * ஞானாம்பிகா
  * ராகமாலிகா
  * இலக்கியத்தில் காதல்
  * தோட்டத்து மலர்கள்
  * இலக்கிய யுத்தங்கள்
  * போய் வருகிறேன்

  நாடகங்கள்

  * அனார்கலி
  * சிவகங்கைச்சீமை
  * ராஜ தண்டனை

  கவிஞரின் பழமொழிகள்

  கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டுமானாலும் எழுதலாம், செய்யப்போவதில்லை என்று முடிவுகட்டிவிட்டால், எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் செல்லலாம்!

  முட்டையைக் கொடுத்துக் காசு வாங்கிறவன் வியாபாரி; காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி; எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.

  கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது. தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

  தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்!

  யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
  ஒருவேளை மாற நினைத்தால்
  ஒவ்வொரு மனிதர்களுக்கும்
  நீ மாறவேண்டி வரும்.

  அழும்போது தனிமையில் அழு; சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

  நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே..

  மழைகூட ஒருநாளில் தேனாகலாம்; மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்..

  ஆனாலும் அவையாவும் நீயாகுமா? அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா?

  உணர்ச்சிகளைச் சொல்லும்போது நேராகவும் கூராகவும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை.

  நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
  நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்.
  சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை.
  சொல்லாத சொல்லுக்கு விலைஏது மில்லை.

  என தத்துவத்தைத் திரைப்பாடல்களில் மனமுருகக் காட்டியவர் கண்ணதாசன்.

  "எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - என்
  இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா."

  நூற்றுக்கணக்கான பாத்திரங்களின் ஆயிரக்கணக்கான உணர்வுகளின் நுட்ப வேறுபாடுகளைக் கண்ணதாசன் சித்திரித்ததுபோல வேறொருவர் சித்திரித்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

  தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன். திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன்தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

  மக்கள் மனங்களிலும் உதடுகளிலும் அன்றும் இன்றும் என்றும் அசைப்போடும் பாடல்கள்

  "கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே.."என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய கவிஞர் அடுத்து...

  "போனால் போகட்டும் போடா .
  இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?"

  "வீ டுவரை உறவு
  வீதி வரை மனைவி
  காடு வரை பிள்ளை
  கடைசி வரை யாரோ ?"

  "மனிதன் மாறி விட்டான்
  மதத்தில் எறி விட்டான்.."

  "உன்னைச் சொல்லி குற்றமில்லை.."

  "கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
  அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்" 

  "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."

  "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..."

  "உள்ளம் என்பது ஆமை - அதில்
  உண்மை என்பது ஊமை"

  "பிறக்கும் போது அழுகின்றான்.
  சாகும் போது அழுகிறான்"

  "நிலவைப் பார்த்து வானம் சொன்னது
  என்னை தொடாதே"

  ‘கவலை இல்லாத மனிதன்’ படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறும் உண்டு.

  "நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு
  பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது.."

  என்று சொன்ன வரிகள் இன்றும் பலரின் உதடுகளில் உறவாடி வருகின்றன.

  மணிமண்டபம்

  தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  கவிஞரின் இரங்கல் கவிதை

  மறைந்த பிரதமர் நேரு மீது மிகுந்த பற்று வைத்திருந்த கண்ணதாசன். 1964-ல் நேரு மறைந்தபோது அவர் மீது கொண்டிருந்த பக்திக்கு சான்றாக 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா' என்று கண்ணதாசன் எழுதிய இரங்கல் கவிதை விளங்குகிறது.

  இதோ அந்தக் கவிதை..

  சீரிய நெற்றி எங்கே?
  சிவந்த நல் இதழ் எங்கே?
  கூரிய விழிகள் எங்கே?
  குவலயம் போனதெங்கே?
  நேரிய பார்வை எங்கே?
  நிமிர்ந்த நன் நடைதான் எங்கே
  நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பில் வீழ்ந்த திங்கே
  ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய்?
  எங்கள் ராஜா இல்லையே மார்பினில் சூட
  தாயே எனக்கொரு வரம் வேண்டும்
  தலை சாயும் மட்டும் நான் அழ வேண்டும்
  சாவே உனக்கொருநாள்
  சாவு வந்து சேராதோ
  சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணொயோ?
  தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?
  தெய்வமே உன்னையும் நாம் தேம்பி
  அழ வையோமோ

  கண்ணதாசனின் ஆசையும் மறைவும்

  கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்.

  மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர்போல, மறைந்த பட அதிபர் சின்ன அண்ணாமலைபோல மரணம் திடீர் என்று வர வேண்டும். என் கண்ணனிடம் எனது கடைசி ஆசையாக இதைத்தான் கேட்டு வருகிறேன்' என்று கூறிவந்த கவிஞர், வெள்ளித்திரையில் ஒரு முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர். உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24-ல் சிகாகோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்றைய நாளான அக்டோபர் 17 சனிக்கிழமை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்தார். 

  நம்மைவிட்டுப் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தும், கண்ணதாசன் இன்றும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘கவியரசு’ அவர்.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp