கபில் தேவ் முதல் ரோஹித் சர்மா வரை: கிரிக்கெட் வீரர்களின் காதல் கதைகள்!

வீரர்களின் கிரிக்கெட் ஆட்டங்கள் போல அவர்களுடைய காதல் கதைகளும் சுவாரசியமானவை.
கபில் தேவ் முதல் ரோஹித் சர்மா வரை: கிரிக்கெட் வீரர்களின் காதல் கதைகள்!

கிரிக்கெட் வீரர்களையும் காதலையும் பிரிக்கவே முடியாது. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் காதலித்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள். சிலர் நடிகைகளை, சிலர் ரசிகர்களை, சிலர் தோழிகளை...

மைதானங்களில் பார்வையாளர் பகுதியில் இருந்துகொண்டு கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளும் காதலிகளும் தங்களுடைய கணவர் அல்லது காதலர் நன்கு விளையாடுவதைக் கைத்தட்டி ரசிக்கும் காட்சிகள், கிரிக்கெட் ஆட்டங்களுக்கு இணையாகக் கூடுதல் சுவாரசியம் தரக்கூடியவை.

வீரர்களின் கிரிக்கெட் ஆட்டங்கள் போல அவர்களுடைய காதல் கதைகளும் சுவாரசியமானவை. காதலிலும் சிக்ஸர்கள் அடித்த சில வீரர்களின் காதல் வெற்றிக் கதைகள்:  

80 கிலோ தாஜ்மஹாலைக் காதலித்த கபில் தேவ்

18 வயதில் கபில் தேவை சிசிஐ கிளப்பில் சந்தித்துள்ளார் ரோமி. அப்போது இந்தியாவுக்காக கபில் விளையாட ஆரம்பிக்கவில்லை. நண்பர் அறிமுகம் செய்துவைத்தார். முதல் தேர்வில் காதல் உணர்வு ஏற்படவில்லை என்கிறார் ரோமி. முதலில் இருவருக்கும் இடையே நட்பு உருவாகியுள்ளது. நான் அப்போது குண்டாக இருந்தேன். 80 கிலோ. என்னிடம் காதல் சொல்ல கபில் தேவுக்கு மட்டுமே தைரியம் இருந்துள்ளது என சிமி கெரவால் பேட்டியில் கூறியுள்ளார் ரோமி.

இருவரும் நண்பர்களாக இருந்தபோது ரோமியுடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார் கபில் தேவ். அப்போது சாலையோரத்தில் அமுல் விளம்பரத்தைக் காண நேர்ந்தது. couple of these என்பதற்குப் பதிலாக Kapil of these make all the difference என்கிற அழகான வாசகங்களுடன் விளம்பரத்தில் கபில் தேவின் படம் இருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த கபில், இதைப் படம் எடுத்துக்கொள் என்று ரோமியிடம் கூறியிருக்கிறார். ஏன்  என அவர் கேட்க, இதை நம் குழந்தைகளிடம் காண்பிப்பதற்காக என்றிருக்கிறார். உடனே ரோமி கேட்டிருக்கிறார், என்ன காதலைச் சொல்கிறீர்களா?

வேறு எப்படி இருக்கிறதாம் எனச் சிரித்தபடி கபில் தேவ் கேட்க, அங்கே அழகான காதல் ஒன்று உருவானது. 

கபில் - ரோமி காதலுக்கு ரோமியின் தந்தை சம்மதம் அளித்தாலும் ரோமியின் தாத்தா சம்மதிக்கவில்லை. ஒருவரால் கிரிக்கெட் விளையாடி அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒருவழியாக அவரையும் சம்மதிக்க வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.  

1981-ல் 22 வயதில் ரோமியைத் திருமணம் செய்தார் கபில் தேவ். தங்கைக்கு முன்பு நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என அவர் பிடிவாதமாக இருந்ததால் தங்கைக்கு 5-ம் தேதி திருமணம் வைத்து விட்டு, அடுத்த நாள் ரோமியைத் திருமணம் செய்திருக்கிறார் கபில் தேவ்!

இருவருக்கும் 1996-ல் அமியா தேவ் என்கிற மகள் பிறந்தாள். 

சச்சினின் அழகான காதல்! 

தன்னுடைய காதல் கதையை, சுயசரிதை நூலில் விரிவாகக் கூறியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

ஒரு ரசிகையாக சச்சினின் அழகில் மயங்கி, பிறகு அவரைக் காதல் திருமணம் செய்துள்ளார் அஞ்சலி.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து அப்போதுதான் மும்பைக்குத் திரும்பியிருக்கிறார் சச்சின். விமான நிலையத்தில் தனது பைகளை எடுக்கும்போது, பார்வையாளர் பகுதியிலிருந்து ஓர் இளம் பெண் தன்னை உற்றுப் பார்ப்பதை கண்டார். அஞ்சலி தனது தோழியுடன் நின்றுகொண்டு சச்சினை வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார். சில நொடிகள் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். 

விமான நிலையத்திலிருந்து சச்சின் வெளியேறியபோது அஞ்சலியும் அவருடைய தோழியும் பின்னாலேயே தொடர்ந்து வந்துள்ளார்கள். சச்சின் அவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஹீ ஈஸ் சோ கியூட் என்று சச்சினைப் பற்றி தன் தோழியிடம் புகழ்ந்துள்ளார் அஞ்சலி. இதைக் கேட்ட சச்சினுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. சச்சினுடன் வந்த அவருடைய நண்பர், ஓர் அழகான பெண் உன்னிடம் பேச விரும்புகிறாள் என்று  கூறியிருக்கிறார். சச்சினும் அஞ்சலியின் அழகைக் கண்டு வியந்தாலும் வெளியே தனக்காக தன்னுடைய சகோதரர் காத்திருப்பதால், அஞ்சலியைச் சந்திக்க முடியாது என்று நண்பரிடம் கூறிவிட்டார். அந்தச் சமயத்தில், அஞ்சலியை இன்னொரு ரசிகை என்றுதான் சச்சின் நினைத்திருப்பார். 

கிளப் கிரிக்கெட்டில் விளையாடி வந்த நண்பரிடம் சச்சின் வீட்டுத் தரைவழித் தொலைப்பேசி எண்ணை வாங்கியிருக்கிறார் அஞ்சலி. தைரியமாக போனும் செய்துள்ளார். அவர் அதிர்ஷ்டம், அன்றைக்கு சச்சின் போனை எடுத்திருக்கிறார்.

நான் தான் அஞ்சலி. உங்களை விமான நிலையத்தில் பார்த்தேன். உங்களைச் சந்திக்க முடியுமா? - அஞ்சலி குரலில் பதற்றம். 

உங்களை ஞாபகம் இருக்கிறது. நான் விளையாடும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் வேண்டுமானால் சந்திக்கலாம் என சாதாரணமாகப் பதில் கூறியிருக்கிறார் சச்சின். 

என்னைத் தெரியுமா உங்களுக்கு? விமான நிலையத்துக்கு நான் என்ன உடையில் வந்தேன் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம் எனத் தைரியமாகக் கேள்வி கேட்டிருக்கிறார் அஞ்சலி. 

ஆரஞ்சு டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ். 

சச்சின் சரியான பதிலைச் சொல்லி அஞ்சலியை வியப்பூட்டினார். 

அடுத்த நாள், சச்சின் சொன்ன இடத்துக்கு அஞ்சலி வந்திருக்கிறார். ஆனால் அங்கே பலர் இருந்ததால் இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் (வீட்டுத்) தொலைபேசி எண்களைப் பறிமாறிக் கொண்டார்கள். பிறகு அடிக்கடி போனில் பேசிக்கொண்டு தங்கள் நட்பையும் காதலையும் வளர்த்திருக்கிறார்கள். 

அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்து, ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார் சச்சின். பத்திரிகையாளர் என்கிற அடையாளத்துடன் அஞ்சலியை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். நிருபர் போல வீட்டுக்கு வந்த அஞ்சலிக்கு இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த சாக்லேட்களைத் தர முயன்றார் சச்சின். ஆனால் இரண்டு சாக்லெட்கள் தவிர மத்ததெல்லாம் காலி. இந்த இரண்டையும் துண்டாக்கி, ஒரு தட்டில் வைத்து அஞ்சலிக்கு வழங்கியிருக்கிறார் சச்சின். அந்த அழகான தருணத்தைத் தன் நூலில் பகிர்ந்துள்ளார். 

அஞ்சலி அருகில் இருக்கும்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்துள்ளார் சச்சின். இதனால் அவருடைய மனம் அஞ்சலியை ஏற்றுக்கொண்டது. இருவர் சந்திப்பிலும் அஞ்சலியே அதிகமாகப் பேசியிருக்கிறார். அப்போது சச்சினுக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது. இதனால் அவர் குறைவாகவே பேசியிருக்கிறார். சிலசமயம் அஞ்சலியைச் சந்திக்க 40 நிமிடங்கள் கார் ஓட்டி, அவர் வீட்டுக்குப் பக்கம் செல்வார் சச்சின். ஆனால் வீட்டில் அனைவரும் இருப்பதால் அஞ்சலியால் வெளியே வர முடியாது. சச்சினால் அஞ்சலி வீட்டுக்கும் செல்ல முடியாது, ரசிகர்களின் தொல்லைக்குப் பயந்து காரை விட்டு வெளியேயும் வர முடியாது. பொதுத் தொலைப்பேசியிலிருந்து அஞ்சலி வீட்டுக்கு போன் செய்யவும் முடியாது. இதனால் வேறுவழியின்றி மீண்டும் காரில் வீட்டுக்குத் திரும்பி விடுவார். பிறகு, வீட்டிலிருந்து அஞ்சலிக்கு போன் செய்வார். இப்போது வெளியே வர முயற்சி செய் எனக் கூறி மீண்டும் 40 நிமிடம் காரை ஓட்டிச் சென்று அஞ்சலிக்கு வீட்டுக்குச் செல்வார் சச்சின். செல்போன் இல்லாத காலத்தில் காதலிப்பது தான் எவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது!

1993-ல் அஞ்சலி, அவருடைய தந்தை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மணி ரத்னம் இயக்கிய ரோஜா படம் பார்க்கச் சென்றிருக்கிறார் சச்சின். விக், ஒட்டு மீசையுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அடையாளத்தை மறைத்தபடி திரையரங்குக்குச் சென்றார். இடைவேளையின்போது சச்சினின் கண்ணாடி கீழே விழுந்தது. பிறகு ஒட்டு மீசையும் கழன்றுவிட, உடனே சச்சினை அடையாளம் கண்டு ரசிகர்கள் சூழ்ந்துள்ளார்கள். வேறுவழியின்றி பாதிப் படத்தில் திரையரங்கிலிருந்து சச்சினும் அஞ்சலியும் வெளியேறியிருக்கிறார்கள். 

அப்போது மொபைல் போன் இல்லாததால் கடிதப் போக்குவரத்து அதிகமாக இருந்திருக்கிறது. சச்சின் எப்போதும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதற்கேற்றபடி இந்தத் தேதியில் சச்சின் எங்கு இருப்பார் என்று திட்டமிட்டு, அங்குக் கடிதத்தை அனுப்புவார் அஞ்சலி. அக்கடிதங்களை இன்னமும் பாதுகாப்பதாகக் கூறுகிறார் சச்சின். 

1992 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு அஞ்சலி வீட்டுக்குச் சென்றார் சச்சின். இதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். சச்சினின் சகோதரர் அஜித்தைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அஞ்சலி. அந்த சந்திப்பின் முடிவில், இவர்தான் சச்சினுக்குச் சரியான ஜோடி என அஜித்தும் முடிவெடுக்க, திருமணம் ஏற்பாடானது. 

1994 ஏப்ரலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரு வருடம் கழித்து 1995, மே 25 அன்று இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அஞ்சலி மேத்தா, அஞ்சலி டெண்டுல்கர் ஆனார். 

எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு, அடுத்ததாக எம்.டி. படிக்க முடிவெடுத்தார் அஞ்சலி. ஆனால் சச்சினுக்குத் துணையாக இருப்பதற்காக மருத்துவம் பார்ப்பதை, மேல்படிப்பில் ஈடுபடுவதைக் கைவிட்டார். 

இது மிகப்பெரிய தியாகம். இதனால் தான் என்னால் கிரிக்கெட்டில் நிம்மதியாக ஈடுபட முடிந்தது எனத் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார் சச்சின். இருவருக்கும் சாரா, அர்ஜுன் என இரு குழந்தைகள் உள்ளார்கள். 

தோனியை வீழ்த்திய ரசிகை!

சாக்‌ஷியைத் தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. பல கிரிக்கெட் ஆட்டங்களில் இவரைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். அதுவும் தோனி விளையாடுகிற ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் சாக்‌ஷி, ஸிவாவை மைதானத்தில் காண முடியும்.

தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பார்த்தவர்களுக்கு அவருடைய காதல் கதை தெரியும். ஆனால் அதில் சில கற்பனைகளைக் கலந்திருந்தார்கள். நடந்தது இதுதான். 

கொல்கத்தாவில் தாஜ் பெங்கால் நட்சத்திர விடுதியில் அப்போது பயிற்சி ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாக்‌ஷி. தோனியின் மேலாளர் யுதாஜித் தத்தாவை சாக்‌ஷி நன்கு அறிவார். 

2007-ல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது இந்திய அணி. அப்போது தாஜ் பெங்கால் விடுதியில் தான் தங்கினார் தோனி. சாக்‌ஷிக்கு அன்றுடன் பயிற்சியை முடிக்க வேண்டும். கடைசி நாள் பணி. அன்று, சாக்‌ஷியை தோனிக்கு அறிமுகம் செய்து வைத்தார் தத்தா. சாக்‌ஷிக்கு கிரிக்கெட்டில் அந்தளவுக்கு ஆர்வம் கிடையாது. சச்சின், கங்குலி, டிராவிட் தெரியும். தோனியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். சாக்‌ஷியின் தாய், தோனிக்கு ரசிகராக இருந்தார். 

பார்த்தவுடன் சாக்‌ஷியின் அழகில் மயங்கிய தோனி உடனே தத்தாவிடமிருந்து சாக்‌ஷியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்பினார். முதலில் யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்த சாக்‌ஷி பிறகுதான் தோனி என அறிந்து அவரிடம் பேச ஆரம்பித்தார். 2008 முதல் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அந்த வருடம் மும்பையில் நடைபெற்ற தோனி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்‌ஷி கலந்துகொண்டார். 

2010-ல் திடீரென தோனியின் திருமணம் குறித்த செய்தி வெளியானது. சத்தமில்லாமல் திருமணம் செய்துகொண்டார் தோனி. 2015-ல் ஸிவா பிறந்தார். 

விராட் கோலி - அனுஷ்கா: விளம்பரக் காதல்! 

2013-ல் ஷாம்பு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்க வந்தபோது முதல்முதலாகச் சந்தித்துக்கொண்டார்கள் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும். முதல் சந்திப்பிலேயே காதல் மலரவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் கோலி கூறியதாவது:

முதல்முறை அனுஷ்காவைப் பார்த்தபோது பதற்றத்துடன் இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக அவரிடம் ஜோக் அடித்தேன். அனுஷ்கா உயரமாக இருந்தார். ஹீல்ஸ் அணிந்திருந்தார். இன்னும் உயரமான ஹீல்ஸ் கிடைக்கவில்லையா என்றேன். என்ன என்று அவர் கேட்டார். இல்லை, சும்மா ஜோக் அடித்தேன் என்றேன். அப்படிப் பேசி, முட்டாள் போல நடந்துகொண்டேன். அவர் தன்னம்பிக்கையுடன் இருந்தார். படப்பிடிப்புத் தளத்துக்குச் சரியான நேரத்தில் வந்தார். இருவரும் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்துள்ளோம். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கடுமையாக உழைத்து ஒரு நிலைக்கு வந்துள்ளோம். நான் 2008-ல் இந்திய அணியில் அறிமுகமானேன். அவருடைய முதல் படத்தின் படப்பிடிப்பும் அதே வருடத்தில் தொடங்கியது. 2013-ல் இருவரும் சந்தித்தோம். வெவ்வேறு உலகங்களில் இருவரும் ஒரே மாதிரி பயணம் செய்துள்ளோம். எனவே இருவரும் இணைவது உடனடியாக நடந்தது. எங்கள் உறவில் எல்லாமே இயல்பாக நடந்தது. இருவரும் ஒன்றாக இருக்கும்போது எங்களிடம் மகிழ்ச்சி தென்பட்டது. இருவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என எண்ணினோம். என்றார். 

விளம்பரப் படப்பிடிப்பு முடிந்த பிறகும் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டு நட்பை வளர்த்திருக்கிறார்கள். இதன்பிறகு வெளியே அடிக்கடி இருவரும் தென்பட ஆரம்பித்தார்கள். 2014-ல் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது மும்பைக்கு வந்த கோலி, விமான நிலையத்திலிருந்து நேராக அனுஷ்கா சர்மாவின் வீட்டுக்குச் சென்றார். அதே வருடம் நவம்பர் மாதம், புணேவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் போட்டிக்கு இருவரும் ஒன்றாக வந்தார்கள். ஆமாம், நாங்கள் காதலிக்கிறோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார் கோலி. 

திருமணத்துக்கு முன்பு இருவரும் ஒன்றாக இணைந்து பல இடங்களுக்குச் சென்றுள்ளார்கள். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை எங்கிருந்தாலும் ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இருவரில் ஒருவர் எந்த வெளிநாட்டில் இருந்தாலும் மற்றவர் அங்குச் சென்று விடுவார். கோலியின் பல வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் அனுஷ்காவையும் காண முடிந்தது. கோலியும் அனுஷ்காவின் படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இந்திய அணி தோல்வியடையும்போது அனுஷ்கா சர்மாவின் ராசி பற்றி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள். இதனால் கோபமடைந்த கோலி, அனுஷ்கா தன்னை எப்போதும் ஊக்கப்படுத்துவதாகவும் நேர்மறை எண்ணங்களைத் தருவதாகவும் கூறினார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா சர்மாவைக் கேலி செய்துவருகிறார்கள். எல்லா எதிர்மறையான விஷயங்களையும் அவருடன் தொடர்புபடுத்துகிறார்கள். வெட்கக்கேடு! தங்களைப் படித்தவர்களாகக் குறிப்பிடும் அவர்கள் எல்லாம் வெட்கப்படவேண்டும். என்னுடைய விளையாட்டில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனில் அவரை ஏன் கேலி செய்யவேண்டும்?  அவர் என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். நேர்மறையான விஷயங்களைத் தந்துள்ளார். மறைந்துகொண்டு அவரைக் குறை சொல்பவர்கள் வெட்கப்படவேண்டும். அவர் மீது கொஞ்சம் மரியாதை செலுத்துங்கள். உங்கள் சகோதரியோ, காதலியோ, மனைவியோ பொதுவில் அசிங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள் என்றார். 

2016-ல் இருவரும் பிரிந்ததாகத் தகவல் வெளியானது. இதயம் உடைந்துவிட்டது என இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி பிறகு அதை நீக்கினார் கோலி. அனுஷ்காவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில் பின்தொடர்வதை நிறுத்தினார். ஆனால் சின்னச் சின்ன ஊடல்கள், இருவருடைய காதலை மேலும் தீவிரப்படுத்தியது. கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வந்த அனுஷ்காவுக்கு மெல்போர்னில் சதமடித்தபோது, மைதானத்திலிருந்து பறக்கும் முத்தம் தந்து அசத்தினார் கோலி. 

2017-ல் இத்தாலியில் அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்துகொண்டார் கோலி. மும்பையிலும் தில்லியிலும் திருமண வரவேற்பு நடைபெற்றன. திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் அனுஷ்கா தான் கவனித்துக் கொண்டார். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 42 பேர் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். தேனிலவுக்காக பின்லாந்து சென்றார்கள். சமீபத்தில் அனுஷ்காவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. 

ரோஹித் சர்மா காதல்!

கிரிக்கெட் வீரர்களின் விளம்பரங்கள் தொடர்பான பணிகளை ரித்திகா கவனித்துக் கொண்டிருந்தார். அதுபோல ரோஹித் சர்மாவுக்கும் விளம்பர மேலாளராகப் பணியாற்றினார். முதலில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். பிறகு காதலர்கள் ஆனார்கள். . 

2008 முதல் ரித்திகாவைத் தெரியும். என் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். முதலில் நண்பராக இருந்தார், அடுத்து கேர்ள்பிரெண்ட், பின்னர் மனைவி, இப்போது தாய். என்னை எப்போதும் நல்லவிதமாகப் பார்த்துக்கொள்வார். அவர் அருகில் இருந்தால் என்னால் இயல்பாக கிரிக்கெட்டில் ஈடுபட முடியும் என்று ஒரு பேட்டியில் மனைவியைப் புகழ்ந்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆறு வருடங்கள் காதலித்த பிறகு, தான் முதலில் 11 வயதில் விளையாட ஆரம்பித்த போரிவாலி ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு அழைத்துச் சென்று தன் காதலை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. 2015-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதே வருடம், மும்பை தாஜ் லாண்ட்ஸ் ஹோட்டலில் பிரபலங்களுக்கு மத்தியில் திருமணம் நடைபெற்றது. 2018-ல் மகள் பிறந்தாள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com