28 ஆண்டுகளாக மகிழ்ச்சியான வாழ்க்கை - ஒரு காதலின் கதை

பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து 28 ஆண்டுகளாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்கின்றனர் காதல் திருமணம் செய்து கொண்ட ஈரோடு தம்பதியர்.
துளசிதாஸ்-சித்ரா
துளசிதாஸ்-சித்ரா

பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து 28 ஆண்டுகளாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்கின்றனர் காதல் திருமணம் செய்துகொண்ட ஈரோடு தம்பதியர்.

'மௌனராகம் படத்தில் வரும் நிலாவே வா, பாடலை கேட்பதற்காகவே இவர்களின் வீட்டுக்குப் போவேன். அந்தக் காலத்தில் அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்தப் பாடலை நான் கேட்டு கேட்டு ஒலி நாடா தேய்ந்து போயிருக்கும். பாடலைக் கேட்பதற்காக மட்டுமல்ல, அப்படியே என் காதலை இவரிடம் சொல்லி விடலாம் என்றுதான்....' என 30 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கி நம்மிடம் பகிர்ந்து கொண்டவர் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி பிரிவு பகுதியைச் சேர்ந்த எல்.துளசிதாஸ். எஸ்.கே.எம். நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப பணியாளராக இருக்கும் துளசிதாஸ் 28 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர். 

கண்டவுடன் காதல் என்றில்லாமல் பல ஆண்டுகள் ஒன்றாகப் பழகிய பெண் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டவர். இவருடைய காதல் மனைவி ஜெ.சித்ரா, பி.எஸ்.சி., பி.எட், எல்.எல்.பி. படித்து இருக்கிறார்.
திருமணத்தின்போது நான் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன். இவர் எங்கள் பெற்றோரின் நண்பரின் மகன். நான் பள்ளியில் படிக்கும்போதே எங்கள் வீட்டுக்கு வருவார். சாதாரணமாகத்தான் பழகினோம், கல்லூரி முதல் ஆண்டு செல்லும்போது ஒருநாள் என்னிடம் காதலை சொன்னார். எனக்கு அந்த நிமிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பம் மட்டுமே இருந்தது. ஆனால் உள் மனதுக்கு அவரை மிகவும் பிடித்து இருந்தது என்கிறார் சித்ரா.

காதல் அனுபவங்கள் குறித்து இருவரும் பகிர்ந்துகொண்டது:

துளசிதாஸ்: எந்த நிமிடத்தில் எனக்கு சித்ரா மீது காதல் வந்தது என்று தெரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் வந்த நிமிடம் முதல் 6 மாதங்கள் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. காதலை அவரிடம் சொல்ல வேண்டும். ஆனால் எப்படி? ஏதோ ஒரு தடை,  சில நேரம் அச்சம், 6 மாதம் கடந்த பின்னர் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் வைத்து காதலை சொல்லிவிட்டேன் பதில் என்ன வரும்? என்று ஒரு மாதம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

சித்ரா: எனக்கு அவரைப் பிடிக்கும். என்னை விட மூத்தவர், அப்போதே வேலையில் இருந்தார். அதைவிட என் மீது அன்பு இருந்தது. எந்த நிலையிலும் என் மீது ஏதேனும் குற்றத்தை யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். கடைசியில் ஒரு மாதம் கழித்து நானும் காதலை ஏற்றுக் கொண்டேன். அது ஒரு அழகிய கனாக்காலம்தான். காதல் எங்களை சிறகடித்து பறக்க வைத்தது. நான் மகளிர் கல்லூரியில் படித்தேன். அப்போது கல்லூரி பேருந்தில்தான் மாணவிகள் எல்லாம் செல்வோம். எங்கள் பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனங்களும், மிதிவண்டிகளும் பின் தொடரும்.  இவரும் ஒரு மிதிவண்டியில்தான் வருவார். அவர் என்னை பார்க்க வருகிறார். என்னிடம் பேசுகிறார் என்பது அருகில் நிற்பவர்களுக்கு கூட தெரியாது. அந்த அளவுக்கு கௌரவமாக நடந்து கொள்வார்.

துளசிதாஸ்: பேருந்து புறப்படும் முன்பு நான் வரவேண்டும் என்று காலையிலேயே மிதிவண்டியில் பரபரப்பாக புறப்பட்டு விடுவேன். எங்கள் 2 பேர் வீட்டுக்கும் எங்கள் காதல் தெரியாது. நாங்கள் தனிமையில் சந்தித்து பேசுவது பெரிய சிரமமான காரியம். எனவே ஒரு சிறு துண்டுசீட்டில் எங்கே சந்திப்பது என்பதை எழுதி, யாருக்கும் தெரியாமல் சுருட்டி சித்ராவின் பைக்குள் போடுவேன்.

சித்ரா: அப்போது இவர் போடும் அந்த சிறு துண்டுச்சீட்டுதான் எங்களுக்கான காதல் கடிதம். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியக்கூடாது என்பதால் பெரும்பாலும் வெளியூர்களிலேயே சந்திப்போம். அப்படி எங்கள் காதல் சந்திப்பு சிவன்மலைதான்.

துளசிதாஸ்: சித்ராவின் தோழிகளுக்கு என்னைத் தெரியும். எனவே அவர்களாகவே திட்டமிட்டு என்னையும் அவர்களோடு சேர்த்துக்கொள்வார்கள். அப்படித்தான் எங்கள் காதல் அரங்கேறியது. எனது நண்பர்களிடம் எனது காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தேன். ஆனால், அவர்களுக்கு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது தளபதி திரைப்படம் வெளியான நேரம். திரையரங்கில் படம் பார்த்து விட்டு 2 பேரும் வெளியே வந்தபோது நண்பர்களிடம் சிக்கிக் கொண்டேன்.
 
சித்ரா: இவர் தீவிர ரஜினி ரசிகர். எப்போதும் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என்று பாடிக்கொண்டே இருப்பார். எனவேதான் தளபதி படம் பார்க்கப்போய் மாட்டிக்கொண்டோம். இருந்தாலும் நண்பர்கள் எங்களுக்கு உதவியாகத்தான் இருந்தனர். செம்பருத்தி திரைப்படம் வெளிவந்தபோது, ஏதோ தைரியத்தில் தியேட்டருக்குச் சென்று விட்டோம். அங்கே எனது அம்மாவுக்கு தெரிந்தவர்கள் எங்களைப் பார்த்து பற்றவைத்து விட்டார்கள். வீட்டுக்கு வந்ததும் பிரச்னை தொடங்கியது. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால், எங்கள் காதலுக்கு எதிரியாக இருந்தது பொருளாதாரம்தான். வசதியைக் காரணம் காட்டி என்னை மனமாற்றம் செய்ய முயன்றனர்.
 
துளசிதாஸ்: எனக்கும் இந்த காலக்கட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. சித்ரா கல்லூரிக்குச் செல்லும்போது வரும்போது கூடவே யாராவது வந்தார்கள். சந்திக்கும் வாய்ப்பு இல்லை. வாழ்க்கையே இருண்டதுபோல இருந்தது. அப்போது எனக்கு ஆறுதலாக இருந்தது சித்ராவின் பெரியப்பாதான்.
பெரியப்பாதான் அம்மாவை மனமாற்றம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசினார். ஆனால் அப்பாவும், அம்மாவும் அதற்கு தயாராக இல்லை. எனவே, பாதுகாப்புக்காக பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். மூன்று மாத இந்த போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. அம்மாவும், அப்பாவும் திருமணத்துக்கு ஒப்புதல் தந்தனர்.  28-6-1992 அன்று திருமணம் நடந்தது. அப்போது சித்ரா பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தார். நான் அதிகமாக படிக்கவில்லை. 10ஆவது படித்துவிட்டு வேலைக்குச் சென்று விட்டேன். ஆனால், எனது படிப்பைப்பற்றி பார்க்காமல் பட்டதாரியான சித்ரா திருமணம் செய்து கொண்டார். இப்போது பி.எட் முடித்து பி.எல்.படித்து விட்டார். எங்களிடம் காதல் எப்போதும் போலவே இருக்கிறது என்றார்.

எங்களுக்கு இரண்டு மகன்கள், எங்கள் மகன்களின் காதலுக்கும் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம். ஆனால், அவர்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து சுயமாக சம்பாதித்த பின்னரே காதலைப்பற்றி நினைக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறோம்.

எங்களை எங்கள் பெற்றோரும், உறவினர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பல ஆண்டுகள் இந்த சமூகம், ஜாதி, மதத்தை காரணம் காட்டி நெருக்கடி கொடுத்தது. அவர்களின் பேச்சுக்களால் மனம் உடையும் நிலை ஏற்பட்ட போது எங்கள் காதல் மட்டுமே துணையாக இருந்தது. மற்றவர்களின் கேலி பேச்சுகளை புறம்தள்ளி எங்களைப்பற்றி மட்டுமே சிந்தித்தோம். மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறோம் என்றனர் துளசிதாஸ் - சித்ரா காதல் இணையர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com