உயிர்களின் தோற்றம் எவ்வாறு இயல்பானதோ அதேபோல அவ்வுயிர்களுக்கு இடையே நிகழக்கூடிய வாழ்வு அன்பின் வழியது. ‘அன்பே சிவம்’, ‘அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு’, ‘அன்பும் அறனும் உடைத்தாயும்’, ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ இச்செய்யுள் அடிகள் எல்லாம் அன்பின் வலிமையை அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சங்க இலக்கியம் உலக இலக்கியங்களுள் ஒப்பற்றது. காரணம் தமிழன் வகுத்த இலக்கிய முறைமை உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை என்றே கூறலாம். தமிழ் இலக்கியத்தை அகம், புறம் என இருவகையாகப் பிரித்தனர் நம் புலவர்கள். புற வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளான போர் வெற்றி போன்ற பணிகளை புற இலக்கியமாகவும் அகம் சார்ந்து அதாவது உள்ளம் சார்ந்து இயங்கிய வாழ்வியல் முறையை அன்பு வாழ்வியலை காதல் வாழ்வியலை மிகவும் அழகாக கடவுளின் மீது 'காதலாகிக் கசிந்துருகி' என்றும் 'காதல் இல்லையேல் சாதல்' என்று மனிதரிடையே உண்டான காதல் வாழ்வினையும் மனிதன் பிற உயிரினங்கள் மீது கொண்ட காதலை மயிலுக்கு பேகன் போர்வை அளித்தது. முல்லைக்குப் பாரி தேர் ஈந்தது போன்ற செயல்கள் எல்லாம் உள்ளத்து உணர்ச்சிகளையும் உள்ளத்தே எழுந்த கிளர்ச்சிகளையும் அழகு தமிழ்ச் சொற்களால் பாங்குறப் பாடப்பட்டவையே சங்க இலக்கியச் செய்யுள்களாக இன்று நமக்குக் கிடைக்கின்றன.
அக இலக்கியத்தில் காணப்படும் காதல் காட்சிகளை வகைப்படுத்த வார்த்தைகளே இல்லை எனலாம். சங்க கால வாழ்வு முறை திருமண முறை காதல் சார்ந்ததே ஆகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்கள் அகம் பற்றியே பேசுகிறது. பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகநூலாகும், நெடுநல்வாடை அகமா புறமா என்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. அகம் என்பது உள்ளத்திலே நிகழும் வெளியில் புலப்படுத்த முடியாத உண்மை இன்பத்தைக் குறிப்பதாகும்.
தலைவன் தலைவியரின் காதல் வாழ்வையும் மணவாழ்வையும் அவர்களிடையே ஏற்படக்கூடிய உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சங்க இலக்கியக் காட்சிகள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.
“இம்மை மாறி மறுமையாகினும்
நீயாகி யளம் கணவனை
யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே”
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
காதல் வாழ்வில் அவனில் அவளும் அவளுள் அவனும் கலந்து கரைந்ததை இப்பாடல் வரிகள் எடுத்து இயம்புகின்றன. மலை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்து இருக்கிறாளாம். ஞரேல் என அந்த மழை பொழியுங்கால் நிலத்தோடு எவ்வாறு கலந்து கரைந்து போகிறதோ அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாததுபோல அன்புடை நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவாம். இவ்வறை அழகிய காதல் உணர்வினை தமிழ்ச் சொற்களால் கட்டமைத்த கவிஞனின் பெயர் இன்னதென்று அறிய முடியாததால் அவன் பாடிய கவிதைப் பெயராலேயே ‘செம்புலப்பெயல் நீரார்’ என்று அழைக்கப்படுகின்றார்.
இவர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல. கம்பன் கம்ப ராமாயணத்தில் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்ந்ததை “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்ற வரிகள் மூலம் கன்னி மாடத்தில் நின்ற சீதையும் அவ்வழியே சென்ற இராமனும் காதலில் வீழ்ந்ததைச் சுட்டுகிறார்.
காதல் பற்றிக் கூறும் திருக்குறள் வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று மகாகவி வள்ளுவனையும் குறளையும் உயர்த்திப் பிடித்துப் பாடினான். ஆம் அன்புடைக் காமம் சமுதாயத்திற்குத் தேவை என்கிறார் வள்ளுவன்.
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல். அதாவது களித்தல் என்பது போதை தரக்கூடிய கள்ளிற்குக்கூட இல்லையாம் காமத்திற்கு உண்டாம். என்ன அற்புதமான குறள். நெஞ்சில் காதலனைக் குடி வைத்திருக்கும் காதலி சூடாக எதனையும் சாப்பிடுவதில்லையாம். ஏனென்றால் உண்ணக்கூடிய உணவின் சூடு நெஞ்சிற்குள் இருக்கும் அவனைச் சுட்டுவிடுமாம். இதனை,
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து”
என்கிறது குறள்.
ஆசைக் காதலைக் கைக்கொட்டி வாழ்த்துவோம் என்கிறார் பாரதியார். காதல் என்ற வார்த்தை காமம் சம்பந்தப்பட்டது என்று உலகம் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் காதல் என்னும் உணர்வு பரம திருப்தியானது, சாதிக்கத் தூண்டுவது என்கிறார் பாரதி. “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” எனப் பாவேந்தர் பாரதிதாசனும் காதல்படுத்தும் பாட்டை எப்படிச் சொன்னால் தகுமோ அப்படிச் சொல்லிச் சென்றுள்ளாள்.
“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”
கவியரசு கண்ணதாசன் பாடல்களில் வெளிப்பட்ட காதல் உணர்வுகளைச் சொல்லவும் வேண்டுமோ. தமிழ் இலக்கியம் காட்டும் அன்பின் வாழ்க்கையை காதல் வாழ்க்கையை தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அனைவருக்கும் பொருந்திப் போவதை நாம் காணலாம். அந்த வகையில் தமிழோடு இணைந்த தமிழ் கலை, பண்பாடு, நாகரிகத்தோடு ஒத்துப் போகக்கூடிய கீழ்த்திசை நாடுகள் ஆனாலும் சரி இன்றைய ஜப்பானிய தேசம் ஆனாலும் சரி, காதல் வாழ்வில் ஆண்டாண்டு காலமாக வரும் தொடர்பின் வெளிப்பாடாக இந்த நூற்றாண்டில் வெளிப்பட்ட ஓர் உயர்ந்த உன்னதக் காதல் உண்மை நிகழ்வைப் பார்க்கலாம்.
ஜப்பானிய வரலாற்றில் நடைபெறுவது குடியாட்சியே எனினும் மரபு சார்ந்து நீடித்து வரும் வரலாறு என்பதை நாம் அறிந்ததே. அதேபோல் இங்கிலாந்து தேசத்திலும் மரபு சார்ந்த முடியாட்சி தொடர்ந்து வருகிறது. அந்த மன்னர் மரபு குடும்பத்தில்கூட டயானாவின் காதல் பரபரப்பாகப் பேசப்பட்ட காலமும் ஒன்று உண்டு. அதேபோன்று 2012இல் ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் உமிகிடோவின் மகளும் அந்த நாட்டின் இளவரசியுமான 29 வயது நிரம்பிய மகோ என்பவர் 2012 ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்றபோது தன்னுடன் படித்த தன் வயதினை ஒத்த மிகவும் சாதாரண குடும்பத்தைச் சார்ந்த கெய் கொமுரோ என்கிற இளைஞனோடு நட்பு அடிப்படையில் பழக ஆரம்பித்தார். அந்த நட்பே நாளடைவில் ஆழமான உறுதியான காதலாக மலர்ந்து நின்றது.
2017 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வரும் அரச குடும்பத்து மரபுப்படி அக்குடும்பத்தில் உள்ள இளவரசனோ இளவரசியோ காதல் திருமணம் செய்து கொண்டால் இளவரசுப் பட்டத்தைத் துறக்க வேண்டும். கொஞ்சம் நினைத்துப் பார்த்தோமானால் இன்று பதவி, பணம் போன்ற சுகத்தை அடைவதற்காக எத்தனை வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் நிறைந்த இவ்வுலகத்தில் தன்னுடைய காதலனை இளவரசி மகோ கெய் கொமுரோ கரம் பிடிக்க இளவரசிப் பட்டத்தைத் துச்சமெனக் கருதி தூக்கி எறிந்தார். அது மட்டுமா? அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்கிற நியதிப்படி இந்திய மதிப்பில் சற்றொப்ப 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மன்னர் குடும்பம் அறிவித்தது. அந்தத் தொகையையும் துச்சமென மதித்து வாங்க மறுத்துவிட்டார் மகோ.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கள் திருமணம் நடைபெறும் என அறிவித்தனர் இந்தக் காதல் ஜோடிகள். ஆனால், சூழ்நிலை கெய் கொமுரோ குடும்பத்தில் ஏற்பட்ட கடன் சுமையால் திருமணம் தள்ளிப்போனது. அந்தச் சூழ்நிலையிலும் தன் குடும்பம் அளித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்தது அப்பெண்ணின் மனோ வலிமையைப் பறைசாற்றுகிறது. மிகப்பெரும் மாளிகையில் வாழ்ந்த அவள் தன் காதலுக்காக, காதல் கணவனோடு அமெரிக்கா சென்று சாதாரண வாழ்வை வாழ்ந்து வருவது இந்த நூற்றாண்டில் நம் நெஞ்சை நெகிழ வைக்கக்கூடிய காதலாகும்.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் காதலர் தினத்தில் இக்காதலர்களின் வாழ்வு சிறக்க அவர்களை வாழ்த்துவோம் நாம்.
[கட்டுரையாளர் - பட்டதாரி ஆசிரியர், தஞ்சாவூர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.