பாடும் காதல் குயில்கள்...

காதல் ரசம் சொட்டச் சொட்ட பாடல் பாடும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் 4 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள். 
மகன், மகளுடன் ராஜலெட்சுமி- செந்தில்கணேஷ்.
மகன், மகளுடன் ராஜலெட்சுமி- செந்தில்கணேஷ்.

''யேய் யேய் சின்ன மச்சான்...''

செந்தில் கணேஷும் ராஜலெட்சுமியும் மேடையில் அப்படியொரு நெருக்கம் நிரம்பி வழியப் பாடும் பாடலைப் பலரும் பார்த்துருக்க- கேட்டிருக்கக் கூடும். (சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் பிரபுதேவாவும், நிக்கி கல்ராணியும் அந்தப் பாடலுக்கு ஆடியிருப்பார்கள்!)

காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்தப் பாடலைப் பாடிய இருவரும், 4 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். 'அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...' என்று சொல்லத்தக்க, காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

எப்போதுமே கிராமங்களின் திருவிழாக்கள், வீட்டு விசேஷங்களில் இன்னமும்கூட களைகட்டும் நாட்டுப்புறப் பாடல்கள், மக்களிசைப் பாடல்கள், பெரும்பாலும் காதல் பாடல்களாகவே இருக்கின்றன.

செந்தில்கணேஷ் (37)- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் களபம் கிராமத்தைச் சேர்ந்தவர்.  ராஜலெட்சுமி (32)- திண்டுக்கல் நகரிலுள்ள நாகல் நகரைச் சேர்ந்தவர்.

திருமணக் கோலத்தில் ராஜலெட்சுமி- செந்தில்கணேஷ்
திருமணக் கோலத்தில் ராஜலெட்சுமி- செந்தில்கணேஷ்

செந்தில் கணேஷ், திருச்சியிலுள்ள கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பிஎப்ஏ, எம்எப்ஏ (குரலிசையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம்) முடித்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் ஆசிரியப் பயிற்சியும் முடித்தவர்.

ராஜலெட்சுமி திண்டுக்கல் எம்விஎம் கல்லூரியில் பிஏ, எம்ஏ தமிழ் படித்து, திருமணத்துக்குப் பிறகு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) முடித்தவர். 

செந்தில்கணேஷுக்கு அவரது மச்சான் செல்லத்தங்கையாவும், ராஜலெட்சுமிக்கு அப்பணம்பட்டி நடராஜனும் கலை வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்பாடு செய்துத் தரும் கச்சேரிகள்தான் இருவரின் குரலை மேடைபோட்டு உயர்த்திக் காட்டின.

நாட்டுப்புறப் பாடகர்களான இவர்கள் 2007-இல் களபம் கிராமத்தில் நடைபெற்ற கச்சேரியில்தான் முதன்முதலில் சந்தித்திருக்கிறார்கள்.

எப்போதுமே பாடல் பாடும்போது தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தலையை ஆட்டி ஆட்டி, கையை உயர்த்தி உயர்த்தி- சொடுக்கிச் சொடுக்கி, செந்தில் கணேஷ் செய்யும் மேடை வித்தைகள் ராஜலெட்சுமியையும் கவனிக்கச் செய்திருக்கிறது.

மேடையையே உற்சாகமாக வைத்திருக்கும் அந்தக் கலையை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நினைத்து, அவருடனே கலந்துவிட்டேன் என்கிறார் ராஜலெட்சுமி.

தொடக்கத்தில் செந்திலின் தங்கை தேன்மொழிதான் ராஜலெட்சுமியிடம் தூது வந்தவர். அதெல்லாம் 'செட்டாகாது' எனச் சொல்லி மறுத்திருக்கிறார் ராஜலெட்சுமி. அதன்பிறகு ராஜலெட்சுமியை மெல்ல மெல்லக் கரைத்திருக்கிறார் செந்தில் கணேஷ்.

ஊர் ஊராகச் சென்று ஜோடியாகப் பாடியிருக்கிறார்கள். கச்சேரி உறுதியாவதற்கு முன்பு யாரேனும் ஒருவர் முன்பே வேறொரு கச்சேரிக்கு பேசி முடித்து வர முடியாமல் போனால், இருவருக்குள்ளும் கடும் ஊடல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக சண்டை உச்சகட்டம் அடையும்போது ராஜலெட்சுமி சிரித்துவிடுவாராம். (என்னவொரு ராஜதந்திரம்). ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மிக முக்கியம் .

இப்படியாக 4 ஆண்டுகள் காதலித்த பிறகு, 2012 மே 23 ஆம் தேதி புதுக்கோட்டை பெருங்களூர் மங்களாம்பிகை கோவிலில் திருமணம். ராஜலெட்சுமியின் சகோதரர்கள், சித்தி- சித்தப்பா, தங்கையின் கணவர் உள்ளிட்டோரும் வந்திருக்கிறார்கள். அம்மா- அப்பா வரவில்லை. அதன்பிறகு 15 நாட்கள் கழித்து வரவேற்பு. அம்மா வந்திருக்கிறார், அப்பா வரவில்லை.

நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக 174 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது வரலாற்றுப் பதிவு. அந்தப் போராட்டத்தில் ஒரு நாள் ராஜலெட்சுமியும், செந்தில்கணேஷும் பங்கேற்றார்கள். அப்போது ராஜலெட்சுமி நிறை மாத கர்ப்பிணி. இவர்கள் இருவரையும் பார்த்த மக்கள் ஒரு பாட்டு பாடுங்களேன் எனக் கேட்க, அந்த இடத்திலேயே மக்கள் போராட்டத்தை முன்வைத்து ஒரு பாட்டை எழுதி, கும்மி மெட்டில் பாடினர். அந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பதிவானது. இதுதான் இவர்கள் இருவரின் முதல் ஊடக வெளிச்சம்.

அதன்பிறகு, 2017-18 இல் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பாட்டு பாடி உலகம் முழுவதும் இவர்களின் புகழ் பரவியது.

எதிர்காலத் தலைமுறைக்கு காதல் பற்றியும் திருமணம் பற்றியும் அவர்கள் கூறுவது, 

'காதலிப்பது தவறில்லை. அது எப்போது எப்படி யாருக்கும் வரும் எனத் தெரியாது. கடைசிவரை இணைந்து வாழும் லட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் அதுதான் முக்கியம். பலரும், எங்கள் துறையிலே கூட, காதலித்து திருமணம் செய்து கொண்ட சில மாதங்களில் பிரிந்து விடுகிறார்கள். 

ஆர்வக்கோளாறில் கண்மூடித்தனமாக அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாக யோசித்து, தொடர்ந்து இணைபிரியாமல் வாழ்ந்து கஷ்ட நஷ்டங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும்.

எங்கள் இருவரையும் இருவர் வீ்ட்டிலும் நன்கு அறிவார்கள். தொடக்கத்தில் ராஜலட்சுமி வீட்டில் கோபத்தில் இருந்தாலும் எங்களின் வாழ்க்கையைப் பார்த்து பிறகு அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்து கொள்வோருக்கு பொறுப்பு அதிகம். அந்தப் பொறுப்பை உணர்ந்து காதலிக்க வேண்டும், திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்கின்றனர் ஒத்த குரலில்.

எதிர்காலத் திட்டம் என்று ஏதாவது உள்ளதா? என்ற கேள்விக்கு, ராஜலெட்சுமிதான் விறுவிறுப்பாகப் பதிலளித்தார்.

'ஏற்கெனவே, புதுக்கோட்டை விளிம்பு நிலை மக்களின் கலைகளைப் பற்றித்தான் என்னுடைய 'எம்பில்' ஆய்வு முடித்து பட்டம் பெற்றேன். அதே கருத்தில் இன்னும் கூடுதல் சிரத்தை எடுத்து முனைவர் பட்டம் பெறுவதும், அடுத்த கட்டமாக கலைக்கான பள்ளியைத் தொடங்குவதும் எதிர்காலத் திட்டம். அதுவரை, அந்தக் கலையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதுதான் கலைக்கு செய்யும் மிக முக்கியமான பணி என்கிறார் ராஜலெட்சுமி.

வழக்கம்போல, காதலைத் தொடக்கத்தில் ராஜலெட்சுமியின் வீட்டில் மறுத்திருந்தாலும், அதன்பிறகு மெல்ல மெல்லக் குடும்பத்துடன் உறவு மீண்டும் உண்டாகி, இப்போது இவர்களின் இரு குழந்தைகளும் அம்மாச்சி வீட்டில்தான் வளர்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com