போராட்டக் களத்திலும் தொடரும் காதல்!

பெரும்பாலானவர்களின் காதல் வாழ்க்கை போராட்டத்தில் தொடங்கி சுமூகமாக முடிந்துவிடும். காலப்போக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்பவர்களும் ஏராளம்.
என்.வி. கண்ணன் - எஸ். தமிழ்ச்செல்வி
என்.வி. கண்ணன் - எஸ். தமிழ்ச்செல்வி

பெரும்பாலானவர்களின் காதல் வாழ்க்கை போராட்டத்தில் தொடங்கி சுமூகமாக முடிந்துவிடும். காலப்போக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்பவர்களும் ஏராளம்.

ஆனால், காதல் பருவத்திலிருந்து சமூக மாற்றத்துக்காகப் போராடத் தொடங்கிய இருவர் திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், போராட்டத்தையும் கைவிடாமல், தொடர்ந்து முழுவீச்சில் முன்னெடுத்துச் செல்கின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த இந்த தம்பதி.

இவர்களில் என்.வி. கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலராக உள்ளார். இவரது மனைவி எஸ். தமிழ்ச்செல்வி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலராக இருந்து வருகிறார். இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

காதல் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வரும் இவர்களுக்கு இரு மகன்கள். இவர்களில் மூத்த மகன் அஜய் (21), இளைய மகன் அபய் (20) இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

தங்களது போராட்ட வாழ்க்கையுடன் இணைந்த காதலை பற்றி தமிழ்ச்செல்வி விவரிக்கிறார்...

நான் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 1989 - 91 ஆம் ஆண்டுகளில் பி.எஸ்ஸி. கணிதவியல் படித்தேன். அப்போது, இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.) கல்லூரி செயலராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பின்னர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன். அதன் மூலம் அறிவொளி இயக்கத்தில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

நான் மாணவர் சங்கத்தில் இருந்தபோது, அவரும் (கண்ணன்) அதே சங்கத்தில் இருந்தார். அப்போது, அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இணைந்து இயக்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 1995 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்புறம் 1999 - இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலர் என். சங்கரய்யா தலைமையில் திருமணம் செய்து கொண்டோம். நாங்களும் முற்போக்கு சிந்தனையாளர்கள். இருவரது குடும்பமும் முற்போக்கான குடும்பம். எனது பெற்றோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், அவரது பெற்றோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்ததால், இத்திருமணத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். இருவரும் ஒரே செயல்பாட்டில் இருந்ததும் இதற்குக் காரணம்.

வெற்றிக்குக் காரணம்

பெண்களை தலைமை ஏற்கச் செய்வதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அதற்கு அனுப்புவதும் கிடையாது. ஆனால், எங்கள் இருவருக்குள் அந்த பேதம் கிடையாது. ஆண் - பெண் சமம் என்ற கருத்து இருவருக்கும் அடிப்படையாகக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் இருவரும் ஒரே சிந்தனையில் இருக்கிறோம்.

சாதாரண மக்கள், ஏழை, எளிய மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் சமூகத்தில் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது நோக்கம். மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில், அதை இருவரும் புரிந்து கொண்டு அதற்கான தீர்வை நோக்கிச் செல்வதால், எங்களுக்குள் எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல், எங்களது வாழ்க்கை செல்கிறது.

நான் மகளிர் அமைப்பில் பணியாற்றுகிறேன். அவர் விவசாய சங்கத்தில் உள்ளார். இருவரும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் கூட, வாழ்க்கையில் மட்டுமல்லாமல் போராட்டக் களத்திலும் இணைந்தே செயல்படுகிறோம். விவசாயிகள் போராட்டத்தில் நானும், மாதர் சங்கப் போராட்டத்தில் அவரும் கலந்து கொள்வோம்.

இருவரது நோக்கமும் ஒன்றுதான் என்பதால், இரண்டிலும் அடிப்படையாக என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை இருவரும் இணைந்தே சிந்திப்போம். அதற்கு என்ன தீர்வு காண்பது என்பதிலும் இருவரும் இணைந்தே முடிவு எடுப்போம். இதுதொடர்பாக மற்ற தோழர்களுடனும் கலந்தாலோசனை செய்து கொள்வதால், வெற்றிகரமாக அமைகிறது.

அதனால், எங்களது போராட்டங்கள் வெற்றியாகத்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு போராட்டத்தையும் நடத்தும்போது மிகுந்த கடினமாகவே இருக்கும். நடத்தி முடித்த பிறகு இருவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். டெல்டா விவசாயிகளுடைய போராட்டத்தில் எங்களது இருவரது பங்களிப்பும் உண்டு.

அச்சமில்லாமல் போராட்டம்

இதேபோல, பெண்கள் மீதான வன்முறைகள் நிகழும்போது இருவரும் இணைந்து நிற்போம். சாலியமங்கலத்தில் நிகழ்ந்த பாலியல் கொலை, தஞ்சாவூரில் வட மாநில பெண் மீதான பாலியல் கொடுமை, வங்கி ஊழியர் மீதான பாலியல் வல்லுறவு, சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல் உள்பட பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கொண்டு நீதி கோரி போராடியுள்ளோம். அதற்காக ஏராளமான பிரச்னைகளையும் எதிர்கொண்டுள்ளோம். எனக்கு மிரட்டல்களும் வரும். வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும்கூட, அவரும் என்னுடனே இருப்பதால், போராட்டத்தை முழு வீரியத்துடன் செய்வதற்கான துணிச்சல் கிடைக்கும். அவர் கூடவே பயணிப்பதால், அச்சுறுத்தல்களைக் கண்டு அச்சப்பட்டதில்லை. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்கிற துணிச்சல்தான் இருக்கும். அவர் கூடவே இருப்பதால், எதற்கும் பணிந்து போனது கிடையாது.

சரியான லட்சியம்

நான் பூதலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, அதற்கு துணையாக அவரும் கடினமாக உழைத்தார். இதேபோல, அவர் ராயமுண்டான்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றபோது, அவருக்காகப் பணியாற்றினேன். இதுபோல, மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் இருவருமே ஆலோசனை செய்து கொள்வோம். எந்த பிரச்னையை எடுத்துச் செய்வது, எது செய்து கொடுப்பது போன்றவை தொடர்பாகவும் கலந்தாலோசனை செய்வோம். சரியான நோக்கத்துடனும், சரியான லட்சியத்துடன் செல்வதால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதில்லை.

பொருளாதாரப் பிரச்னையே இல்லை!

இருவரும் கட்சியில் முழுநேர ஊழியர்களாக இருப்பதால், அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்துகிறோம். பொருளாதார ரீதியாக சிரமம்தான் என்றாலும், அது பெரிதாகத் தெரியாது. எங்களைப் போன்று, மகன்களும் இருக்கின்றனர்.

இருப்பினும், வெளியிலிருந்து சிலர் ஏன் வேலைக்குச் செல்லவில்லை எனக் கேட்பர். இருவரும் இப்படி இயங்குவதால், குடும்பத்தை எப்படி நடத்துவீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்புவர். இருந்தாலும், கட்சிப் பணியைத்தான் முழுநேரமாகக் கொண்டு செயல்படுகிறோம். நெருக்கடியான நேரத்தில் மற்றவர்களும் உதவி செய்வதால், பொருளாதாரச் சிரமம் இருந்ததில்லை.

நாங்கள் மட்டுமல்லாமல், எங்களது மகன்களும் எளிமையான வாழ்க்கை வாழ்வதால், பொருளாதாரப் பிரச்னை பெரிதாக ஏற்பட்டதில்லை. எங்களது வாழ்க்கையை எளிதாக அமைத்துக் கொண்டோம். செலவுகளைக் குறைத்துக் கொள்வதால், பொருளாதாரப் பிரச்னையை சமாளித்துவிடுவோம்.

காதலிக்கும்போதே இருவரும் கட்சிப் பணியை முழுநேரமாக எடுத்துச் செய்வது என்றும், அதிலிருந்து என்ன ஊதியம் கிடைக்கிறதோ, அதை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்திக் கொள்வது என்கிற உறுதியான முடிவை எடுத்தோம். எனவே, மக்கள் பிரதிநிதியாக இருந்தபோதும், தவறான வழியில் சம்பாதிக்கவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவே இருந்தோம். அதனால்தான் இன்னமும் எங்களை ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியக் குழு உறுப்பினராகவும் மக்கள் நினைக்கின்றனர். எனவே, அப்பகுதியில் எந்த பிரச்னை என்றாலும், தீர்வு காண்பதற்கு இப்போதும் எங்களைத்தான் அணுகுகின்றனர்.

கருத்து ஒற்றுமை முக்கியம்

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், கருத்து ஒற்றுமை, நீயா - நானா என்ற போட்டி இல்லாமை போன்றவை இருந்தால், அந்த வாழ்க்கை நிச்சயமாக வெற்றிகரமாக அமையும். எல்லோரும் பொருளாதாரத்தைப் பெரிதாக எதிர்பார்க்கின்றனர். நாங்கள் பெரிதாக நினைப்பதில்லை. எனவே, எது இருக்கிறதோ, அதை வைத்து வாழ்வதால் எங்களுக்குள் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. இருவரது வாழ்க்கையிலும் இருவருமே தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். சமூக மாற்றத்துக்கான பணியில் மட்டுமே குறிக்கோளாகச் செயல்படுகிறோம். இந்தப் போராட்டம் இறுதி வரை தொடரும் என்றார் தமிழ்ச்செல்வி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com