காதலியிடம் காதலை வெளிப்படுத்த திரைப்படம் எடுத்த ஹாலிவுட் இயக்குநர்!

காதலிப்பவராக இருந்தால் கண்டிப்பாக இவரைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இயக்குநர் லின்க் லேட்டர்
இயக்குநர் லின்க் லேட்டர்
Published on
Updated on
6 min read

‘ஒரு ஊரில் ஒரு ராஜா’ எனத் துவங்கும் கதைகளைவிட ‘மச்சா இன்னக்கி ஒரு பொண்ண பாத்தேன்டா…’ எனத் துவங்கும் கதைகள் மிகச் சுவாரசியமானவை. அந்த ஒரு ஊர் ராஜாக்களைவிட அதிக பாடங்களைக் கற்றுத்தருவதும் இந்தக் கதைகள்தான். ஒன்று, இதுபோன்ற கதை(களை) சொல்லும் பாக்கியம் பெற்றவனாக இருக்க வேண்டும், அல்லது இந்தக் கதைகளைக் காதுகொடுத்து கேட்கும் இடத்திலாவது ஒருமுறை இருந்திட வேண்டும். இல்லையென்றால் வாழ்வின் முக்கிய பாடங்களை இழந்துவிடுவீர்கள்! 

(பின் குறிப்பு: இங்கு ஒரு ஆணின் காதல் பார்வை மட்டுமே கிடைக்கலாம். ஏனெனில் ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் புரியும் என்பதால், இன்றுவரை அந்த வித்தையை எந்த ஆணும் கற்றுத்தேர்ந்ததாகத் தெரியவில்லை என்பதால் உங்கள் அனுமதியுடன் தொடர்கிறேன்…)

‘லவ்வு கிவ்வு பண்ணி உருப்படாம போயிராதடா’ என யாராவது கண்டிப்பாக உங்களிடம் சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில், சரியாகக் காதலித்தவர்கள் யாரும் அப்படி ‘உருப்படாமல்’ போனதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒரு பெண்ணை நேசிக்கின்றவன் காதலில் தோல்வியடைந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் நல்ல நிலையில் அவளின் நினைவுகளுடன் கொஞ்சம் நிம்மதியுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த அரைகுறை வயதுக்கோளாறுகள்தான் ‘லவ் பண்ணா ஸ்டேட்டஸ் போடுணும், பிரேக் அப் பண்ணா சரக்கு போடணும்’ என்ற சினிமா ஃபார்முலாவிற்குள் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். சிலர் வன்முறையைக் கையிலெடுக்கும் சைக்கோக்களாகவும் மாறுகிறார்கள். 

காதலால் ஒருவன் வீரனாவதும் வீணாப்போவதும், அவன் சரியானக் காதலியைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல் சரியாக காதலிக்கக் கற்றுக்கொள்வதிலும்தான் உள்ளது. 

அப்படி சரியாகக் காதலித்தால், காதலில் வெற்றி கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும், காதலால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதில் சிறு சந்தேகம் உண்டு எனச் சொல்ல முடியாது. இந்த வரி புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள், காதலும் அப்படித்தான். 

அப்படி சரியாகக் காதலிக்கத் தெரிந்த ஒரு திரைப்பட இயக்குநரின் கதையைத்தான் இங்கு சுருக்கமாக பார்க்கப்போகிறோம். தன் காதலை அந்தப் பெண்ணிடம் சொல்வதற்காகவென்றே அவர் எடுத்த திரைப்படத்தையும், அந்த திரைப்படத்திற்குப் பின்னர் அவர்கள் காதல் கதை என்ன ஆனது என்பதைப் பற்றியும்தான் இந்தச் சிறு கட்டுரையின் மீதப் பயணம். 

முதலில் அந்தப் படத்தின் கதையைப் பார்க்கலாம்...

ஒரு அமெரிக்க இளைஞன், துருதுரு மற்றும் தொனத்தொன என்ற அடைமொழிகளை ஒருசேரக் கொண்ட துடிப்பான ஒருவன், ரயில் பயணத்தின்போது ஒரு அழகிய பிரெஞ்சு பெண்ணைப் பார்க்கிறான். கண்டவுடன் காதல் வந்துவிடாது என்பது அவனுக்கும் தெரியும், ஆனால் அந்த இயல்பான எதிர்பாலின ஈர்ப்பு எல்லா பெண்களிடமும் வந்துவிடாதுதானே! அந்தப் பெண்ணை ஓரப் பார்வைகளால் சீண்டியது போதாமல், அவளிடம் லேசாகப் பேச்சும் கொடுக்கிறான். அந்தப் பெண்ணுக்கும் அவனது பேச்சும், தோற்றமும் லேசாகப் பிடிக்கிறது. அவளுக்கும் அதே எதிர்பாலின ஈர்ப்பே முதலில் தட்டுப்படுகிறது. இருவரும் அவ்வப்போது ஒருசில பார்வைகளையும், சிறுகுறு புன்னகைகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவன் இறங்க வேண்டிய இடம் வந்துவிடுகிறது. ஆனால் அவனுக்கு இறங்க மனமேயில்லை. அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நேரம் போதாதது அவனை வாட்டுகிறது. ரயில் அங்கு நிற்கும் சில நிமிடத்திற்குள் தைரியத்தை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் படபடவெனப் பேசத் துவங்குகிறான். 

படத்தின் ரயில் காட்சி
படத்தின் ரயில் காட்சி

"ஹாய், உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கும் உங்கள சுத்தமா தெரியாதுதான். ஆனா தெரிஞ்சுக்கனும்னு தோணுது” என்கிறான். 

அவள் குழப்பமான வகையில் சிரிக்கிறாள். அவன் மேலும் பேசுகிறான். 

"நா இந்த ஊரு கிடையாது. நாளைக்கு காலைல எனக்கு இங்க ஃபிலைட் இருக்கு. அதனால நைட்டு ஃபுல்லா இந்த எடத்த சுத்திப்பாத்துட்டு கிளம்பளாம்னு இருக்கேன். நீங்களும் வந்தீங்கன்னா ஒன்னா சுத்திப்பாக்கலாம். நெறையா பேசலாம். ரூம்கூட எதுவும் புக் பண்ணல, எல்லாம் விலை ஜாஸ்தியா இருக்கு. ஊருதான் சுத்தி ஆகணும். நீங்க மனசு வச்சா ஒருத்தர் ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். காலைல முதல் ரயில்ல நீங்க கிளம்பிருங்க. நானே ஏத்திவிடுறேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சா போன் நம்பர் மாத்திக்கலாம். இல்லன்னா என்கிட்ட இருந்து தப்பிச்சுருங்க!” என நம்ம ஊரு வாரணம் ஆயிரம் பிட்டுகளை அடுக்குகிறான். 

ரயில் நகர சில நொடிகளே இருக்கும் நிலையில், அவனது அவசரத்தைப் புரிந்து சீக்கிரம் பதில் சொல்ல வேண்டும் என்பதால் அவளும் பதட்டமாகிறாள். யோசிக்கும் அவளை என்னென்னமோ பேசி ரயிலிலிருந்து இறங்க வைக்கிறான், ஜெஸ்ஸி. அதுதான் அவனது பெயர். யாரென்று தெரியாத (அழகான) ஒருவனின் பேச்சைக் கேட்டு இறங்கிவிட்டோமே என பயம் கலந்த ஆர்வத்துடன் நகர ஆரம்பித்த ரயிலைப் பார்க்கிறாள் செலின். அதுதான் அவளது பெயர். இருவரும் வியன்னாவில் ஒரு முழு இரவையும் பேசிப் பேசிக் கழிப்பதுதான் ஒரு முழு நீளப்படம்.

பிஃபோர் சன்ரைஸ் திரைப்பட போஸ்டர்
பிஃபோர் சன்ரைஸ் திரைப்பட போஸ்டர்Credits: X

வெறும் காதல் பேச்சுகள் மட்டுமில்லாமல் இருவரின் அரசியல் நிலைப்பாடுகள், தத்துவங்கள், இலக்கியங்கள், கவிதைகள், பொருள்முதல்வாத உலகின் அவலநிலை என அவர்களது உரையாடல்கள் அர்த்தம் மிகுந்ததாக மாறுகின்றன.

அந்த இரவு முடிவதற்குள் இருவரும் காதலில் விழுகின்றனர். முதல் பார்வையில் வந்தது காதல் இல்லை என்பதிலும், இப்போது வந்திருப்பதும் முழு காதல் இல்லை என்பதிலும் இருவரும் தெளிவாக இருக்கின்றனர். அந்த அழகான ஊருக்குள், நடையாய் நடந்து, பேசி, பழகி, பலமுறை காதலில் விழுந்து, முத்தமிட்டு முழு இரவையும் கழிக்கிறார்கள்.

சொன்னபடி மறுநாள் காலை அவளை ரயிலில் ஏற்றிவிடும் நேரம் வந்துவிட்டது. அங்கு இருவருக்கும் ஒரு வேண்டாத யோசனை! 'இது காதல்தானா?’ என்றொரு கேள்வி! இருவரும் ஒரு முடிவு எடுக்கிறார்கள். செல்போன் நம்பர்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்! இந்த உணர்வு நீடித்தால், அடுத்த ஆண்டு இதே நாளில் இதே இடத்தில் சந்திக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். இருவரும் பிரிந்து செல்வதோடு முடிகிறது 1995ல் வெளியான ‘Before Sunrise’ எனும் அந்தத் திரைப்படம்!

காட்சிகளில் காதலை தத்ரூபமாகக் காண்பித்து, இளம் பார்வையாளர்களுக்கும் வெட்கம் வரவைத்த இயக்குநர் ரிச்சர்டு லிங்க்லேட்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், விமர்சகர்கள் மத்தியிலும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. படம் மெதுவாக உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பெண்ணைச் சந்தித்த ரிச்சர்டு, அந்தப் பெண்ணின் ஊரில் ஒரு சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்து அவளின் வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார். 

உண்மையில் நடந்தது என்னவென்றால், சிறிய மாற்றங்கள் மட்டுமே. ரிச்சர்டு படத்தில் வந்ததுபோலவே ஏமி லெஹ்ராப்ட் எனும் பெண்ணை சந்திக்கிறார். ஒரு முழு இரவை இருவரும் ஒன்றாகப் பேசிப் பேசியே கழிக்கிறார்கள், காதலில் விழுகிறார்கள். அடுத்தநாள் காலை இருவரும் செல்போன் நம்பர்களை மாற்றிக்கொள்கிறார்கள். முதலில் நன்றாக சென்றுகொண்டிருந்த உரையாடல்கள் மெதுவாகக் குறைந்துவிடுகிறது. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இருவருக்கும் இந்த லாங் டிஸ்டன்ஸ் ஒத்துவரவில்லை போல. கரைந்துபோன உரையாடல்கள் ஒரு கட்டத்தில் மொத்தமாக மறைந்துவிடுகின்றன. ரிச்சர்டும் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்யத் தயங்கி அப்படியே விட்டுவிடுகிறார். ஆனால் அந்த ஒரு இரவில் அவருக்கு ஏற்பட்ட உணர்வை, இருவரும் பகிர்ந்துகொண்ட அந்தக் குறுகிய கால உறவை அவர் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களின் சந்திப்பை மையமாக வைத்து, சில மாற்றங்களைப் புகுத்தி இந்தப் படத்தை எடுக்கிறார். தனது பார்வையில் அவள் எப்படி தெரிகிறாள் என்பதைச் சொல்ல முயல்கிறார். இன்னும் அவள்மீதான அந்த உணர்விலிருந்து அவர் மீளவில்லை என்பதை அந்தப் படத்தில் எளிதாகக் காணமுடியும்படியே அதை அவர் உருவாக்கியிருப்பார். 

பிஃபோர் சன்ரைஸ் படத்தின் ஒரு காட்சி
பிஃபோர் சன்ரைஸ் படத்தின் ஒரு காட்சிCredits: X

ஆனால் அவர் காத்திருந்த எந்த சிறப்புக் காட்சிகளுக்கும் அந்தப் பெண் வரவேயில்லை. அவர் காத்துக்கொண்டே இருந்தார். ஒரு செய்தித்தாள் நேர்காணலில் இந்தத் திரைப்படம் உண்மைச் சம்பவம்தான் என்பதையும், அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்தும்கூட அவர் பேசுகிறார். ஆனாலும் அந்தப் பெண்ணிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. காலத்தோடு சேர்ந்து அவரது நம்பிக்கையும் அவரைவிட்டு நகர்ந்துவிட்டது. அவள் கடைசிவரை வரவேயில்லை. யாருக்காக இப்படி ஒரு படத்தை ரசித்து ரசித்து எடுத்தாரோ அவள் இந்தப் படத்தைப் பார்த்தாளா என்றுகூடத் தெரியவில்லை. ஒருவேளை பார்த்தும் தன்னைப் பிடிக்காததால்தான் அவரைத் தொடர்புகொள்ளவில்லையோ? பல குழப்பம் அவரது தலையில். தனது காதலோடு சேர்த்து அந்தப் படமும் தோல்வியைத் தழுவியதாகவே அவர் முடிவு செய்தார்.

காலம் நகர்ந்தது…

9 ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஏதோ ஒரு இரவில் சந்தித்த ஒரு பெண், இன்னுமா அவரது மண்டையில் உட்கார்ந்து நினைவில் நச்சரிக்கப்போகிறாள்? ரிச்சர்டு ஆமாம் எனத் தலையை ஆட்டுவார். இன்னும் அந்தப் பெண்ணின் நினைவுகளில் இருந்து அவர் மீளவில்லை. 9 வருடங்கள் கழித்து Before Sunrise திரைப்படத்தின் இரண்டாம் பாகக் கதையோடு வந்தார் ரிச்சர்டு. அந்தப் பெண்தான் வரவேயில்லையே? இதற்குமேல் படமாக எடுக்க என்ன இருக்கிறது? என எல்லோரும் நினைத்தபோது, ஒருவேளை அவள் வந்திருந்தால் தன் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு இந்த படத்தை எடுக்கிறார். 

அந்த இரண்டாம் பாகம் எப்படி நகரும் என்றால்…

Before Sunset திரைப்படத்தின் ஒரு காட்சி
Before Sunset திரைப்படத்தின் ஒரு காட்சிCredits: X

அந்த அமெரிக்க இளைஞன் அடுத்த ஆண்டு அதே ரயில் நிலையத்திற்கு வருகிறான், ஆனால் அந்தப் பெண் வரவில்லை. அவளை மீண்டும் சந்தித்தாக வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் அந்த ஒரு இரவை மையமாக வைத்து அவன் ஒரு நாவல் எழுதுகிறான். அது ஒரு வெற்றிப் புத்தகம் ஆகிறது. புகழ்பெற்ற நாவல் ஆசிரியராக மாறி, அவளது ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது புத்தகம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்கிறான். அப்படி சந்திக்கும் இருவரும் அந்த ஒரு நாளில் மீண்டும் ஒன்றாக நடந்து திரிந்து, என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதுதான் 2004-ல் வெளியான இந்த Before Sunset திரைப்படம். 

அவளை மீண்டும் சந்தித்திருந்தால்... என்ற கற்பனையில் எழுதப்பட்ட இந்தக் கதை படமாகி மேலும் பல உள்ளங்களைக் கவர்ந்தது. சொல்லப்போனால் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் மிகவும் நல்ல பெயரையும் புகழையும் பெற்றது.

இந்த உண்மைக் கதை தெரிந்த பலர், இயக்குநர் விரும்பிய பெண்ணுடன் மனதுக்குள் எப்படி வாழ்கிறார் என்பதைக் காணவே இந்தப் படத்தைப் பார்க்க வந்தனர். எந்தவித பரபரப்பும், திருப்பங்களும், சண்டைக்காட்சிகளும் எதுவும் இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் 1.45 மணிநேரம் பேசிக்கொண்டே இருக்கும் படத்தை எப்படி மக்கள் பார்ப்பார்கள் எனப் பலர் நினைக்கும்போது இந்தக் காதல்கதை உலகளாவிய வெற்றியைப் பதிவு செய்தது. 

ஆனால் இந்த வெற்றியைப் பற்றி அதிகம் கவலைப்படாத ரிச்சர்டு, இப்போதும் அவளுக்காகக் காத்திருந்தார். இப்போதாவது தன்னை சந்திக்க அவள் வரமாட்டாளா என நினைத்தார். போகும் இடங்களில் எல்லாம் அவளை எதிர்பாராத விதமாக சந்தித்திட மாட்டோமா என எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் அவள் இந்த முறையும் வரவேயில்லை. ரிச்சர்டுக்கு வருத்தம் இல்லாமல் இருந்திருக்காது.

காலம் ஓடியது...

6 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் 2010-ல் அவர் எதிர்பார்த்தபடியே எதிர்பாராதவிதமாக அவளது நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில்,

"..... உங்களின் சந்திப்பு குறித்தும், அந்த இரவைக் குறித்தும் அவள் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறாள்.... அவள் 1994ல் ஒரு சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டாள்…”

என்ற செய்தியைச் சொல்லிமுடிக்கிறது அந்தக் கடிதம். முதல் படம் வெளியாவதற்கு ஓராண்டிற்கு முன் அவள் இறந்திருக்கிறாள். ரிச்சர்டு என்ன ஆகியிருப்பார் என்பதை நம்மால் கற்பனை மட்டும்தான் செய்ய முடியும். சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியிருப்பார். தான் தாங்கும் உணர்வுக்கு சக உரிமையாளரான அவள் இறந்த செய்தியும், இந்தப் படம் மூலமாகத் தான் சொல்ல நினைத்ததை அவளிடம் வெளிப்படுத்த முடியாத சோகமும் அவரை வாட்டியெடுத்திருக்கும். உலகிற்கே தெரியப்படுத்தப்பட்ட அவரின் காதல் அவளைமட்டும் எட்டவில்லை.

இரண்டாம் பாகம் வெளியாகி அதே 9 வருடம் கழித்து...

மூன்றாம் பாகத்துடன் வந்தார் ரிச்சர்டு. Before Midnight. இந்தத் திரைப்படமும் இரண்டு கதாப்பாத்திரங்களும் பேசிக்கொண்டே ஊரைச் சுற்றுவது மட்டும்தான். இந்தமுறை இறந்துபோன அந்தப் பெண்ணுடன் அவருக்குத் திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்துவிட்டது. இரட்டைப் பெண் குழந்தைகள். சந்தோஷமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு நாளில் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள்தான் இந்தப் படம். இந்தமுறை பெனின்சுலா நகருக்குள் மீண்டும் நடையாய் நடந்து பேசிக்கொள்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது இந்த மூன்றாம் பாகம். 

இன்றுவரை ரிச்சர்டின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படங்களாக பார்க்கப்படுவது இந்த மூன்று படங்கள்தான். என்னதான் உருவாக்கத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், திரையின் மூலம் ஒரு உணர்வைக் கடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதற்கு முதலில் அந்த உணர்வை முழுவதுமாக புரிந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை ரிச்சர்டுக்கு அந்தப் பெண் கொடுத்துவிட்டுச் சென்றாள். ரிச்சர்டால் எளிதில் கடந்துவிட முடியாத ஒரு காதலை அவருக்கு காட்டிவிட்டுச் சென்றாள் ஏமி லெஹ்ராப்ட். அவள் கொடுத்த காதலால்தான் ரிச்சர்டு சிறந்த இயக்குநர்களில் ஒருவராகியிருக்கிறார். காதலில் அவர் வெற்றி பெறாவிட்டாலும், அவருக்குக் கிடைத்த காதலால் அவர் வெற்றி பெற்றார். 

Before Midnight திரைப்படத்தில் ஒரு காட்சி
Before Midnight திரைப்படத்தில் ஒரு காட்சிCredits: X

ஏமி இறந்த செய்தியைக் கேட்டு ரிச்சர்டு ஒயின்சாப்பில் குடியேறவில்லை. 'அஞ்சல' பாட்டைப் போட்டு ஊசி குத்திக்கொள்ளவில்லை. அவருடைய காதல் அப்படி வளர்ச்சி குன்றிய காதலும் இல்லை. அடுத்த படம் எடுப்பதற்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் அவர் எப்படி தன் உணர்வுகளோடு, வலிகளோடு நேரம் செலவிட்டு அவற்றை சரியான வழியில் செலுத்தியிருப்பார் என்பதை நாம் கவனித்தே ஆகவேண்டும். அந்த காலத்தில் அவர் சில படங்களை எடுத்திருந்தாலும் எதுவும் Before Trilogy அளவில் பேசப்படவில்லை.

காதலையும் தோல்வியையும் இழப்பையும் ஏற்றுக்கொள்ளுமளவில் அவருக்கு பக்குவம் இருந்தது. அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே யாரும் காதலிக்கத் தகுதி பெற்றவர்களாக இருக்க முடியும். ஆனால் தகுதி பெற்றால்தான் காதல் வரும் என்றில்லைதானே! எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கும் காதல் வரலாம், எப்போது வேண்டுமானாலும் ‘அந்தப் பெண்’ உங்களை வந்தடையலாம், அதனால் முடிந்தவரை சீக்கிரம் அந்தப் பக்குவத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை ஏற்கனவே அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீர்கள் என்றால், காதலைச் சொல்வதற்குள் அந்தப் பக்குவத்தைப் பெறப் பாருங்கள். 

ஒருவேளை காதலில் தோல்வி அடைந்தாலும் (ஒரு பேச்சுக்கு…), எல்லாம் முடிந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளலாம். ரிச்சர்டைப் போல் அமைதியாக உங்கள் உணர்வுகள் நேரம் செலவழிக்கலாம். கண்டிப்பாக உங்களுக்குள் தோன்றிய காதல், ஒரு பெண்ணை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் மட்டுமே வந்திடாது. அது உங்களுக்குள் எதையாவது விட்டுச்சென்றிருக்கும், கற்றுக்கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் 'சட்டுப்புட்டு' என பக்குவத்தை வளர்த்து, காதலைச் சொல்லி நீங்களும் நடையாய் நடந்து கதை கதையாய் பேசத் தயாராகுங்கள்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com