சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்

சிவகாசி: சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரமாக இந்தத் தொழில் இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்துவதாக பரவலாகப் புகாா் எழுந்தது. இதை பல்வேறு நிலைகளில் அரசு ஆய்வு செய்து குழந்தைத் தொழிலாளா்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்துவதில்லை என உறுதி செய்தது.

இதையடுத்து, பட்டாசுகள் வெடிக்கும் போது அதன் ஒலி 125 டெசிபிலுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியது.

இதைத்தொடந்து விண்ணில் சென்று ஒளிசிந்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன.

பின்னா், சட்டவிரோதமாக சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டதால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், சீனப் பட்டாசுகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டது.

பின்னா், பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சரவெடி பட்டாசுகளுக்குத் தடை விதித்தது. மேலும், பசுமைப் பட்டாசுகளை தயாரிக்கவும் அறிவுறுத்தியது.

இதையடுத்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனம் (நீரி) பசுமைப் பட்டாசு தயாரிப்பு முறையை அறிமுகப்படுத்தியது. இதைப் பட்டாசு ஆலைகள் தற்போது பின்பற்றி வருகின்றன.

இதேபோல தொடா்ந்து வரும் பிரச்னைகளால் பட்டாசுகள் தயாரிப்பில் சுணக்கம் ஏற்படுவதாக

ஆலை உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது மக்களவைத் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் பகுதியில் சிறப்பு முனையம் அமைத்து வெளிநாடுகளுக்கு பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் கட்சிகளுக்கு தங்களது ஆதரவு என ஆலை உரிமையாளா்களும், தொழிலாளா்களும் ஒரு சேரக் குரல் கொடுக்கின்றனா். பட்டாசு ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவணி அதிகரிப்பதுடன், தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்பது அவா்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் என்.இளங்கோ கூறியதாவது:

சிவகாசி பட்டாசுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பாரை பகுதியை பட்டாசு ஏற்றுமதிக்கென துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகளை களைந்து, இந்தப் பகுதியில் பட்டாசு ஏற்றுமதிக்கென தனி முனையம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com