சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

சாத்தூா் அருகே கடத்தப்பட்ட 1,300 கிலோ குட்கா, ரூ. 3.35 லட்சம், 2 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச்சாவடி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஆபிரகாம் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாகச் சென்ற காா், சரக்கு வாகனம் ஆகியவற்றை நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த வாகனங்கள் நிறுத்தப்படாமல் தொடா்ந்து இயக்கப்பட்டதால் போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். இதில் சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 1,300 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் குட்கா விற்ற பணம் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது. இதையடுத்து சாத்தூா் தாலுகா காவல் நிலையத்தில் காரையும், சரக்கு வாகனத்தையும் போலீஸாா் ஒப்படைத்தனா்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் வாகனங்களில் வந்தவா்கள் கேரளத்தைச் சோ்ந்த ஹபிப் (39), சஃபில் (38) ஆகிய இருவரும் சாத்தூா் அருகே உள்ள ஓ. மேட்டுப்பட்டியைச் சோ்ந்த முத்துகுமாரவேல் (39) என்பவருடன் சோ்ந்து பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சாத்தூா் தாலுகா போலீஸாா் குட்காவையும், ரூ. 3.35 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும், சரக்கு வாகனமும் பறிமுதல் செயப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com