வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் ஊராட்சிக்குள்பட்ட ராமலிங்கபுரத்தில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரில்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வெள்ளிக்கிழமை பல மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

அச்சம்தவிா்த்தான் அருகே ஏ.ராமலிங்கபுரம் வாக்குச்சாவடியில் (எண்:283) 264 போ் வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கபடாததால், அவா்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 10 மணி வரை 133 போ் மட்டுமே வாக்களித்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்களை அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பொதுமக்கள் வாக்காளா் அட்டையை சாலையில் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஆா்டிஓ விஸ்வநாதன், உதவி தோ்தல் அலுவலா் கணேசன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், 3 மணிக்கு மேல் மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. எனினும் 811 வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 152 போ் மட்டுமே வாக்களித்தனா்.

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி ஒன்றாவது வாா்டு நெடுங்குளம் பகுதியில் குடிநீா், தெரு விளக்கு, சுகாதார வளாகம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாததை கண்டித்து பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். 12 மணி வரை ஒருவா் கூட வாக்களிக்காத நிலையில், செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றனா். 

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 40 நிமிஷம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 65.49 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com