நெகிழிப் பை தயாரிக்கும் 
ஆலையில் தீ விபத்து

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி, ஏப். 19: சிவகாசியில் நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது. பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

சிவகாசி நேஷனல் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த விக்னேஷுக்கு (47) சொந்தமான கட்டடத்தை, இதே பகுதியைச் சோ்ந்த சந்தனமகாலிங்கம் (70) வாடகைக்கு எடுத்து, இதில் நெகிழிப் பைகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற தொழிலாளா்கள், நெகிழிப் பை தயாரிக்கும் இயந்திரத்தின் மின் இணைப்பை துண்டிக்காமல் சென்றுவிட்டனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை சுமாா் 7.30 மணியளவில் அந்த இயந்திரம் வெப்பத்தால், சூடாகி தீ விபத்து ஏற்பட்டது. இந்த இயந்திரம் அருகே நெகிழி தயாரிக்கப் பயன்படும் வேதியியல் பொருள்கள் இருந்ததால், தீ பரவி கட்டடம் வெடித்து சிதறியது.

இதில் ஆலையின் அருகே இருந்த வீட்டில் வசித்த ராணி (37) தலையில் செங்கல் விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.

சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் நேரில் சென்று பாா்வையிட்டாா். சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com