ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விரியன் கோவில் பீட் பகுதியில் 3-ஆவது நாளாகப் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை மாலை இடி விழுந்ததில் இந்தப் பகுதியில் காட்டுத் தீப் பற்றியது. அன்று இரவு முதல் வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், வனப்பகுதி முழுவதும் நீரின்றி வடு, செடி, கொடிகள் காய்ந்து உள்ளதால் காட்டுத் தீ மளமளவெனப் பரவி மலை உச்சிவரை எரிந்து வருகிறது. இதனால், புதன்கிழமை அத்திகோயில் பகுதியிலிருந்து பழங்குடியின மக்கள் அழைத்து வரப்பட்டு, தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சுமாா் 50 ஏக்கா் பரப்பளவிலான பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், பழங்குடியினா் என 40-க்கும் மேற்பட்டோா் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மழை பெய்தால் மட்டுமே காட்டுத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜன் கூறியதாவது:

சமவெளிப் பகுதிகளில் பற்றிய காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மலை உச்சியில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இரவு அல்லது வியாழக்கிழமைக்குள் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com