
கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில் வாழ்ந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பீமவ்வா தொட்டபலப்பா ஷில்லேக்யதாரா (96) நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஒட்டு மொத்த நாட்டு மக்களும் தங்களது மாநிலக் கலைஞர்கள் பத்ம விருதுகளை வாங்குவதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த போது, கலைப் பிரிவில், கர்நாடகத்தைச் சேர்ந்த பீமவ்வா பெயர் அறிவிக்கப்பட்டபோது பலரது கண்களும் சற்று விரிந்து சுருங்கியது.
காரணம், 96 வயதில் தள்ளாடியபடி நடக்கக் கூட இயலாமல் வந்த அந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்தான்.
காலில் சாதாரண செருப்புடன், அச்சமும் கூச்சமும் கலந்த உணர்வுடன் அவைக்கு அழைத்து வரப்பட்ட பீமவ்வா, பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு, குடியரசுத் தலைவர் நின்றிருந்த மேடை நோக்கி நடந்தார். ஆனால், அவர் நடக்க முடியாமல் தள்ளாடுவதைப் பார்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நெறிமுறைகளை எல்லாம் மீறி, பீமவ்வா நடந்து வருவதற்குள், அவர் இருக்கும் இடத்துக்கே ஓடோடி வந்தார். குடியரசுத் தலைவரின் கைகளைப் பற்றிய பீமவ்வா மரியாதை செலுத்த, அவருக்கு திரௌபதி முர்முவும் வணக்கம் தெரிவித்துக்கொண்டார். பத்ம ஸ்ரீ விருதுக்கான சான்றிதழையும், விருதினையும் தோல்பாவைகளை கதைக்கேற்ப அசைத்து மக்களை மகிழ்வித்து, அவர்களுக்குப் பல கதைகளைச் சொல்லிவந்த அந்தக் கைகளில் வழங்கினார் முர்மு.
இதுநாள்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு கலைக்கு உயிர் கொடுத்து வந்த கலைஞரின் கைகளில் சேர்ந்தது அந்த பத்ம ஸ்ரீ விருது. அந்த வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பலரது கவனத்தையும் ஈர்த்தார் பீமவ்வா.
கொப்பல் நகரின் மொரனலா கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 70 ஆண்டுகளாக தோல்பாவைக் கூத்து மூலம் பல இதிகாசக் கதைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மிகப் பழமையான கலைக்கு இன்னமும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்.
தோலால் ஆள பாவைகளை ஒளியின் பின்னணியில் அசைத்தபடி, புராண, இதிகாசக் கதைகளைச் சொல்லி மக்களிடம் பல்வேறு கதைகளைக் கொண்டு சேர்த்து வருகிறார் பீமவ்வா.
பல நூற்றாண்டுகளாக தோல்பாவைக் கூத்துக் கலையைப் பரப்பி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இதுபோன்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட பலரும் வேறு தொழில்களைப் பார்த்துக்கொண்டு போனாலும், தனது குடும்பத் தொழிலை, கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியக் கலையை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்து வரும் இவரது பணியை அங்கீகரித்து ஜனவரி 26ஆம் தேதி கலைப் பிரிவில் பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையினருக்கும் இந்தக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார்.
இவர் உள்ளூரில் மட்டுமல்லாமல்,வெளிநாடுகளுக்கும் சென்று தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி, இதுபோன்ற ஒரு கலை இருந்தது என்று சொல்வதற்கு மாறாக, இதுதான் அந்தக் கலை என்று எதிர்காலத் தலைமுறைக்கும் சொல்லும் வகையில் தொடர்ந்து உயிரூட்டி வருவதற்கான அங்கீகாரமாகவே இந்த விருது பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.