
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தன்னுடைய 13 வயது மகள், ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
தெருக்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களைவிடவும், இளைய தலைமுறையினருக்கு எதிராக சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் எச்சரித்திருக்கிறார் நடிகர் அக்ஷய் குமார்.
இதன் மூலம், ஆன்லைன் மூலம் பிள்ளைகளுக்கு வரும் எதிர்மறைத் தாக்குதல்களை எதிர்கொள்ள பெற்றோர் செய்ய வேண்டிய தகவல்கள் குறித்து விழிப்புணர்வு பெறவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர காவல்துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அக்ஷய் குமார் தன்னுடைய மகள் சந்தித்த தர்மசங்கடமான நிலைமையை விளக்கிப் பேசியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஆன்லைன் கேம் ஒன்றை அவர் விளையாடிக்கொண்டிருந்தார். அதில் முன்பின் அறிமுகமாகாத வெளிநபர்களும் பங்கேற்பர். அதில் ஒருவர் என் மகளுடன் நட்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் தோழமையுடன் தகவல்களை அனுப்பியிருக்கிறார்.
அந்த நபர், முதலில், நன்றி, நன்றாக விளையாடினீர்கள், அருமை என்பது போன்று மிகவும் 'நல்ல மனிதர்' எனக் காட்டிக் கொள்ளும் விதத்தில் தகவல்களை அனுப்பியிருக்கிறார். சில நாள்களுக்குப் பிறகு, அவர், நீங்கள் ஆணா, பெண்ணா? என்று கேட்டுள்ளார். அதற்கு என் மகள் பெண் என பதிலளித்திருக்கிறார். அதன்பிறகு, அந்த நபரின் பேச்சு மொழியே மாறியிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த நபர், என் மகளிடம் அந்தரங்க புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறார்.
உடனே, என் மகள் அந்த ஆன்லைன் கேமிலிருந்து வெளியேறிவிட்டார், எனது மனைவியிடம் தகவலை தெரிவித்திருக்கிறார். தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து உடனடியாக பெற்றோரிடம் சொல்வதற்கு நல்லவேளை அவர் தயங்கவில்லை என்று அக்ஷய் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அக்ஷய் பகிர்ந்திருக்கும் இந்த தகவல், பெற்றோர்களுக்கும் இளம் சிறார்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. என்ன நடந்தாலும், பெற்றோரிடம் முதலில் சொல்லிவிட வேண்டும் என்று பிள்ளைகளுக்கும், தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதனை முதலில் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும், அவர்கள் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை பெற்றோர்களும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
முதலில் செய்ய வேண்டியது!
பெற்றோர் சைபர் குற்றங்கள் குறித்து அறிந்துவைத்துக் கொள்வதோடு, பிள்ளைகளுக்கும் அது பற்றி அறிவுறுத்த வேண்டும்.
பிள்ளைகள் ஆன்லைன் விளையாட்டின்போது என்ன நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.
பெற்றோர் செய்ய வேண்டியது
பிள்ளைகளின் கையில் செல்ஃபோனும் இருந்து, அதில் இணைய வசதியும் இருந்தால், நிச்சயம் பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
முன்பின் தெரியாத நபர்களுடன் பிள்ளைகள் பேசக் கூடாது என்பதை அறிவுறுத்தலாம்.
கல்வி தவிர்த்து விளையாட்டு போன்ற தளங்களில் பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் போலியான தகவல்களை கொடுக்கும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இணையம் மூலம் அறிமுகமாகும் நபர்களை நண்பர்கள் வட்டத்துக்குள் சேர்க்க வேண்டாம்.
அவர்கள் அழைப்பின் பேரில் நேரில் சந்திக்கச் செல்லக் கூடாது என்பதையும் அறிவுறுத்த வேண்டும்.
பதிவிறக்கங்களில் கவனம்
செல்போன் அல்லது கணினியில் எதையும் பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்,
செல்போன் மற்றும் கணினிகளில் இருக்கும் கேமராக்களை கவனமாகக் கையாள சொல்லிக் கொடுக்கலாம்.
ஆன்லைனில் எத்தனை வசதிகள் இருக்கிறதோ, அத்தனை அபாயங்களும் நிறைந்திருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துச் சொல்லி என்ன நடந்தாலும் பெற்றோருக்குத் தெரிவிக்கும்படி அறிவுறுத்துவதும், அவர்களது நம்பிக்கையைப் பெறுவதும்தான் முக்கியமானதாகிறது.
பாஸ்வேர்ட் பகிர்தல் வேண்டாம்
நண்பர்கள்தானே என்று கூறி, தங்களுடைய சமுக வலைத்தளப் பக்கங்களின் பாஸ்வேர்டுகளை பகிர்ந்துகொள்ளும் நடைமுறை இந்த கால சிறார்களிடம் இருக்கிறது. இது மிகவும் தவறான செயல் என்பதை புரிய வைக்க வேண்டும்.
முன்பின் தெரியாதவர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் அறிமுகமான நண்பர்கள் யாருக்கும் தங்களுடைய புகைப்படங்கள், விடியோக்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக் கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
இதையும் படிக்க... ஸ்பைவேர்! பெயருக்கேற்ப கணினிகளை உளவுபார்க்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.