வீட்டிலிருந்து வேலை! பென்சில் பேக்கிங் மோசடி நடப்பது எப்படி?

வீட்டிலிருந்து வேலை என்ற பெயரில், பென்சில் பேக்கிங் மோசடி நடப்பது பற்றி..
பென்சில் மேக்கிங் மோசடி
பென்சில் மேக்கிங் மோசடி
Published on
Updated on
2 min read

பெரும்பாலும் சைபர் மோசடிகளில் ஆண்களே அதிகம் ஏமாறுவார்கள் என்றாலும், இதுபோன்ற வீட்டிலிருந்து வேலை என்ற மோசடியில் ஏமாறுவது பெண்களாகவே இருக்கும்.

காரணம், வீட்டில் இருக்கும் பெண்கள், தகவல் தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டதே, யாரைக் கேட்டாலும் வீட்டிலிருந்து வேலை என்று சொல்கிறார்களே, பலரும் வீட்டிலிருந்து சம்பாதிக்கும்போது, நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற மனநிலையோடு இருக்கும்போது, அவர்களது வலைத்தளப் பக்கங்களில் வந்து சேருகிறது இந்த வீட்டிலிருந்தே வேலை என்ற விளம்பரம். இது நிச்சயம் விளம்பரம் அல்ல. மோசடியாளர்கள் போடும் தூண்டில் என்பதை கவனிக்க.

சைபர் மோசடியாளர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை, உதாரணமாக பென்சில் பேக்கிங் போன்றவற்றை விளம்பரப்படுத்துகின்றனர்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து, வீட்டிலிருந்தே பென்சில் பேக்கிங் செய்யும் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, விளம்பரத்தில் இருக்கும் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசும்போது, இந்த வேலை வாய்ப்பு குறித்து மோசடி கும்பல் விளக்கம் அளிக்கிறது.

தேன் ஒழுகும்படி, அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, பல லட்சக்கணக்கானவர்கள் இதில் இணைந்து சம்பாதிப்பதாகவும், இதில் பல்வேறு நிலைகளில் வேலைகள் வழங்கப்படும் என்றும் விளக்குவார்கள்.

இணைய மோசடியை விளக்கும் கதை
இணைய மோசடியை விளக்கும் கதை

அவர்கள் சொல்வது எல்லாம் உண்மையில் ஒரு தொழில்முறைப் பேச்சாளர் போலவே இருக்கும். இதனை கேட்பவர் பாமர மக்களாக இருந்தால் நிச்சயம் ஏமாறத்தான் வேண்டும்.

அனைத்து விதிமுறைகளும் விளக்கப்பட்டு, இந்த வேலை உங்களுக்கு வேண்டும் என்றால் என்று கூறி கடைசியாக ஒரு டுவிஸ்ட் வைப்பார்கள். அதுதான் முன்பணம். வேலை கேட்டு அழைத்தவர்கள், தாங்கள் இந்த பென்சில்களை அனுப்புவதால் பாதுகாப்புக்காக முன்பணம் மற்றும் பதிவுக் கட்டணம் அனுப்ப வேண்டும் என்று சொல்வார்கள். அதாவது, வேலைக்கு விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை சரிபார்த்து, அவருக்கு வேலை அளிப்பதற்கான செயல்முறைகளை செய்வதற்கான கட்டணம் என தனியாகவும் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணங்கள் சில நூறுகள் முதல் சில ஆயிரங்கள் வரை இருக்கும். பலரும் இதனை நம்பி, அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புகிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்யப் போகிறோம், மாதம் சில ஆயிரங்கள் வரை சம்பாதிக்கப் போகிறோம் என்ற நம்பி, பலரும் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிக் கூட இந்தப் பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.

ஆனால், பணம் வந்த பிறகு, ஒரு சில மோசடி கும்பல்கள், அஅந்த எண்ணை அணைத்துவைத்து விடுகிறார்கள். சில மோசடி கும்பலோ ஒருபடி மேலே சென்று, அவர்கள் விண்ணப்பித்த வேலைக்கான ஆள்கள் நிரம்பிவிட்டதாகவும், அடுத்து இதுபோன்ற மற்றொரு வேலை இருப்பதாகவும் அந்த வேலைக்கு அதிக சம்பளம் என்றும், ஆனால், அதற்கான கட்டணம் இதை விட அதிகம் என்று சொல்லி மேலும் பணம் பெற முயற்சிப்பார்கள்.

இப்போதும் அதே நிலைதான், சந்தேகம் கொண்டவர்கள், வேலையே வேண்டாம் என்று முடித்துக் கொள்வார்கள். சிலரோ, இதுவும் உண்மை என்று நம்பி அவர்கள் கூடுதலாகக் கேட்ட தொகையை அனுப்பி ஏமாந்த தொகைக்கு வட்டியும் கட்டுவது போல மீண்டும் ஏமாறுவார்கள்.

அவர்கள் சொன்னபடி, எந்த பொருளும் வீட்டுக்கு வராது, அவ்வளவுதான், இவர்களது அழைப்பு அதன்பிறகு இணைக்கப்படாது. ஏமாந்தது ஏமாந்ததுதான்.

இவர்கள் வேலையும் கிடைக்காமல், கொடுத்தப் பணத்தையும் இழந்திருப்பார்கள்.

கவனிக்க வேண்டியவை!

1. விளம்பரத்தைப் பார்த்ததும், அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மையை ஆராயவும்.

2. அந்த நிறுவனத்தின் பெயரில் வந்திருக்கும் கருத்துகள் மற்றும் குறைகளைப் படித்துப் பாருங்கள்.

3. இவ்வாறு எந்தவொரு வீட்டிலிருந்தே வேலை தரும் நிறுவனமும், விண்ணப்பித்தவர்களிடம் பணம் கேட்கக் கூடாது.

4. அவ்வாறு பயிற்சிக் கட்டணம், பொருளை அனுப்ப முன்பணம் எனக் கேட்டால், அந்த நிறுவனம் போலியானது.

5. முன்பின் யோசிக்காமல், இதுபோன்ற நிறுவனங்களுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்.

6. அவர்கள் சொல்லும் பணி வாய்ப்பு, செயலாக்கம், சம்பளம் என்ற எதையும் அப்படியே நம்ப வேண்டாம்.

7. வேலை வாய்ப்புகளை வழங்கும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டும் வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும்.

8. ஒரு நிறுவனப் பெயரில் வரும் விளம்பரத்தைப் பார்த்து, அங்கு விண்ணப்பிக்கக் கூடாது. நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று அங்குதான் விண்ணப்பிக்க வேண்டும்.

9. சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பவே வேண்டாம்.

10. எந்த வேலையாக இருந்தாலும் நிச்சயம் வேலை தரும் நிறுவனம் பணம் கேட்காது. அனுப்ப வேண்டாம். ஏமாற வேண்டாம்.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம்.

பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.

Summary

Avoid upfront payments for job applications of materials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com