
ஆன்லைன் பணமோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அதற்கு எதிர்மறையான தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனிதனுக்கு பயன்படுகிறதோ அதைவிட அதிகமாகவே மக்களுக்கு கடும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
அந்தவகையில் சைபர் தாக்குதல்கள் தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரூ. 22,845 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 206% அதிகம். 2023ல் மோசடி ரூ. 7,465 என்ற அளவில் இருந்துள்ளது. 2024-யைவிட 2025ல் மோசடிகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சைபர் தாக்குதல்கள் மூலமாக பணத்தை இழப்பது பல வழிகளில் நடக்கிறது. பயன்படுத்தும் கணினியில் உள்ள தரவுகள், மொபைல் போன் தரவுகள், வங்கி பணபரிமாற்றங்கள் என ஒவ்வொருவரின் தரவுகளும் ஏதாவது ஒரு வழியில் ஹேக் செய்யப்படுகின்றன.
இப்போதெல்லாம் மொபைல் எண்ணுக்கே அழைப்பு மேற்கொண்டு ஏதாவது ஒருவகையில் உங்களை கட்டுப்படுத்தி பின்னர் மிரட்டி பணப்பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறியே பல மோசடிகள் நடக்கின்றன.
இதில் இருந்து தப்பித்துக்கொள்ள வழிமுறைகள் என்ன? எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கணினி / மொபைல் போன் பாதுகாப்பு வழிமுறைகள்
கணினி அல்லது மொபைல் போனைத் திறப்பதற்கு கண்டிப்பாக பாஸ்வேர்டு இருக்க வேண்டும்.
பயன்படுத்தாத நேரங்களில் கண்டிப்பாக லாக் செய்து வைக்க வேண்டும்.
ஏதாவது ஆவணங்களை அல்லது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய நம்பகமான தளங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
லைசன்ஸ் பெறப்பட்ட செயலிகளை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
வைரஸ் எதிர்ப்பு(ஆன்டி - வைரஸ்) மென்பொருளை அவ்வப்போது புதுப்பிக்கவும். இது சைபர் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்க உதவும்.
முக்கியமான தரவுகள் / கோப்புகள்/ஆவணங்களை அவ்வப்போது வேறு ஒரு சாதனத்தில் பிரதி(copy) எடுத்துக்கொள்ளவும்.
கணினிகளில் வரையறுக்கப்பட்ட சலுகைகளுடன் கணக்கை(user) பயன்படுத்தவும்.
தேவையில்லாத மென்பொருள் செயலிகளை அவ்வப்போது நீக்கிவிடவும். 'task manager' மூலமாக கணினியின் பின்புலத்தில் ஏதேனும் செயலிகள் பயன்பாட்டில் உள்ளதா என அவ்வப்போது கண்காணிக்கவும்.
பல அடுக்கு சரிபார்ப்பு(Multi factor authentication) முறையை உபயோகப்படுத்தவும். உதாரணமாக இ -மெயில் திறக்க வேண்டும் என்றால் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு 'பாஸ் -கோடு' வருமாறு பார்த்துக்கொள்ளவும்.
கணினியை/ போனை அவ்வப்போது அப்டேட் செய்யவும்.
முக்கியமான பாஸ்வேர்டுகளை கணினியில்/ போனில் சேமித்து வைக்க வேண்டாம்.
செய்யக்கூடாதவை
லைசன்ஸ் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதோ கணினி /மொபைலில் இன்ஸ்டால் செய்வதோ வேண்டாம்.
password@123 போன்ற எளிமையாகக் கண்டுபிடிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை உருவாக்க வேண்டாம். Abcdef@!17 போன்ற வலுமிக்க பாஸ்வேர்டுகளை உருவாக்குங்கள். அதை அவ்வப்போது மாற்றுவதும் அவசியம்.
தேவையில்லாத பாப்-அப் செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம்.
பாதுகாப்பில்லாத லிங்குகள் வரும்பட்சத்தில் அதனை திறக்க வேண்டாம். உங்கள் கணினி/போனில் எச்சரிக்கை செய்தி வந்தாலும் அதனை திறக்கத் தேவையில்லை. ஏனெனில் அதை கிளிக் செய்யும்போது உங்கள் தரவுகள் ஹேக் செய்யப்படலாம்.
கணினி/போன் வேண்டாம் என்று ஒதுக்கும்போது அதில் உள்ள ஆவணங்களை முற்றிலும் நீக்கிய பிறகு அப்புறப்படுத்தலாம்.
பாஸ்வேர்டு பாதுகாப்பு முக்கியம்
பல ஆன்லைன் பண மோசடிகளுக்கு பாஸ்வேர்டும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் அதுதொடர்பான செயலிகள் மற்றும் நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகள் வெவ்வேறாக இருக்க வேண்டும்.
எளிமையாகக் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வேர்டுகள் இல்லாமல் கடினமாக பாஸ்வேர்டுகளை உருவாக்குங்கள்.
ஒருவேளை பாஸ்வேர்டை தவறுதலாக யாருக்கேனும் சொல்லிவிட்டால் உடனடியாக மாற்றிவிடுங்கள். இ-மெயில், வாட்ஸ்ஆப், குறுந்செய்திகளில் பாஸ்வேர்டை பகிர வேண்டாம். எதிலும் சேமித்து வைக்கவும் வேண்டாம். நியாபகம் வைத்துக்கொள்ள உங்கள் டைரியில் எழுதி வைத்துகொள்ளுங்கள்.
உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், அடையாள அட்டைகளில் உள்ள தகவல்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்களைக் கொண்டு ஒருபோதும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டாம்.
பாஸ்வேர்டு மீட்பு(password recovery questions) கேள்விகளுக்கு யூகிக்கக்கூடிய பதில் இருக்க வேண்டாம். தனித்துவமானதாக இருக்க வேண்டும். உதாரணமாக உங்களுக்கு பிடித்த உணவு 'பிரியாணி' என்ற பதிலைத் தராதீர்கள். கடினமான கேள்விகளையும் பதிலையும் தேர்வு செய்யுங்கள்.
மிக முக்கியமாக, பாஸ்வேர்டு 8 எழுத்துகளையாவது கொண்டிருக்க வேண்டும். அதில் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் கலந்திருப்பது அவசியம்.
வெளி இடங்களில் உள்ள கணினிகளில், வேறு ஒருவரின் மொபைல் போனிலோ வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டாம்.
வங்கிகள் என்று கூறிக் கொண்டு உங்களை போனில் தொடர்புகொண்டு யாரேனும் பாஸ்வேர்டு, ஏடிஎம் பின் நம்பர் கேட்டால் கண்டிப்பாக சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
வங்கிக் கணக்கு தொடர்பான பாஸ்வேர்டுகளை கணினிகளில் மொபைல் போன்களில் சேமிக்க வேண்டாம் என்பதுடன் 'Remember my password' ,. 'save my password' என்பதையும் கொடுக்க வேண்டாம். கணினிகளில் 'sticky notes', 'note pad' ஆகியவற்றிலும் சேமிக்க வேண்டாம். ஒருமுறை பணப்பரிமாற்றம் செய்தபிறகு கண்டிப்பாக கணினி history -யை நீக்கிவிட வேண்டும்.
உங்களுடைய கைரேகையை வெளி இடங்களில் தேவையின்றி பயன்படுத்த வேண்டாம்.
அதேபோல பொது இடங்களில் உள்ள வை-ஃபை அல்லது வேறு யாருடைய இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்டில் வங்கி பணப்பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம்.
கணினி மற்றும் போனில் தேவையில்லாத லிங்க்குகள், விளம்பரங்களை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்கள் தகவல்களை ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம். 'scam' என்று வரும் போன் அழைப்புகளையும் எடுக்க வேண்டாம். ஆஃபர், பரிசு, லோன் என்று வரும் போன் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் கண்டுகொள்ளாதீர்கள்.
யுபிஐ பணப்பரிமாற்றம்
யுபிஐ பின் நம்பரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். யாரிடமும் பகிர வேண்டாம். யுபிஐ செயலிகளை பாஸ்வேர்டு போட்டு லாக் செய்து வைத்திருக்க வேண்டும்.
யுபிஐ பணப்பரிமாற்றம் செய்வதற்கு எதிர் தரப்பினரின் மொபைல் எண், பெயரை ஒருமுறை உறுதி செய்துகொள்ளவும்.
பொது இடங்களில் மற்றவர் பார்க்கும்படி பணப்பரிமாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்.
பணபரிமாற்றங்களுக்கு தற்போது நிறைய செயலிகள் இருக்கின்றன. வங்கியின் அதிகாரபூர்வ செயலியை பயன்படுத்தலாம். அதைத் தவிர்த்து உரிமம் பெற்ற பாதுகாப்பான யுபிஐ செயலிகளை மட்டும் பயன்படுத்தலாம்.
லோன், கிரெடிட் தொகை ஆஃபர் பல செயலிகளில் ஆஃபர் வருவதை நம்ப வேண்டாம். உங்களுடைய தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது.
டெபிட், கிரெடிட் கார்டு
கார்டு நம்பர், காலாவதியாகும் தேதி, சிவிவி எண்ணை யாருடனும் பகிர வேண்டாம். பாதுகாப்பில்லாத இடங்களில் ஏடிஎம்-யை பயன்படுத்த வேண்டாம்.
நெட் பேங்கிங் ஐடி, பாஸ்வேர்டு போன்ற தனிப்பட்ட விவரங்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
மொபைல் பேங்கிங் செயலிகளில் கார்டுகளை இணைத்திருங்கள்.
வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் மட்டும் பணப்பரிவர்த்தனை செய்யுங்கள்.
கார்டுகளையும் யாரிடமும் கொடுக்க வேண்டாம். முக்கியமாக பின் நம்பரை யாரிடமும் பகிர வேண்டாம். அவ்வப்போது மாற்றுவது நல்லது.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களைத் திறக்கும் போதும் பல அடுக்கு சரிபார்ப்பு முறையை பின்பற்றவும். பொது இடங்களில் உள்ள கணினிகளில் சமூக ஊடக கணக்குகளை திறக்க வேண்டாம்.
சமூக ஊடகங்களில் வரும் அறிவிக்கைகள்(notifications) கவனத்துடன் கையாள வேண்டாம். பாதுகாப்பில்லாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்களுடைய இருப்பிடங்களை அப்டேட் செய்வதைத் தவிர்க்கலாம்.
இ- மெயில்
விளம்பரங்கள், சலுகைகள் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் இணைப்புகளை (ஹைப்பர்லிங்க்குகள்/யுஆர்எல்) திறக்கவோ அதற்கு பதிலளிக்கவோ வேண்டாம்.
இது உங்கள் தனிப்பட்ட விவரங்களை ஹேக் செய்ய எளிதாக்கும்.
ஸ்பேம்(spam)-ல் உள்ள இ-மெயில்களை அனுப்பியது யார் என்று உறுதி செய்த பிறகு தேர்ந்தவர்கள் என்றல் மட்டும் திறக்கலாம்.
வரும் காலங்களில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும்.
இவற்றில் ஏதேனும் மோசடி நடைபெற்றது தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளவும்.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.