
பலரும் அக்கம் பக்கத்தினருடன் பேசுவதில்லை, ஆனால், சமூக ஊடகங்களில் எப்போதும் லைவ்வாக இருந்து, தங்களது அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் நாள் முழுக்க பதிவிடுவார்கள்.
அவ்வாறு, சமூக வலைத்தளங்களில் 24 மணி நேரமும் வாழ்பவர்களுக்கான எச்சரிக்கையை காவல்துறை வெளியிட்டு வந்தாலும் யாரும் மாறுவதில்லை. உலகில் என்ன நடக்கிறது என்று தங்களுக்கு ஒரு துயரம் நடக்கும்வரை அறிவதேயில்லை.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்ஆப், ஸ்னாப்சாட், டின்டர், ஹைக், வீசாட், டம்ளர் என ஏராளமான சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டன. அவரவர் தேவைக்கு ஏற்ப இதில் ஒன்றை அல்லது பலவற்றை பயன்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டும் அதேவேளையில், சைபர் குற்றவாளிகளுக்கும் இவை வசதியாக இருக்கின்றன. இவற்றில் பல வகையான மோசடிகளைக் கண்டுபிடித்து நாள்தோறும் அரங்கேற்றி வருகிறார்கள். இதனை மக்கள் அறிந்திருந்தாலும், நமக்கு அவ்வாறு நடக்காது என்ற நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள்.
மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாததாகிப்போன சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் எங்கே செவிசாய்க்கிறார்கள்?
சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது பற்றி காவல்துறை வெளியிடும் எச்சரிக்கைகளில் குறிப்பிட்டத்தக்கவை..
உங்களுக்கு முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் தோழமை கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்.
ஆன்லைன் மூலம் அறிமுகமான யாரையும் நம்ப வேண்டாம்.
சமூக வலைத்தளத்தில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.
முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டாம். இந்த விவரங்களை வைத்தே மோசடி செய்ய முடியும்.
தனிப்பட்ட நபர்கள் குடும்ப புகைப்படங்கள், விடியோக்களை பகிர வேண்டாம்.
அவ்வாறு புகைப்படம் விடியோக்களை பகிர்வதாக இருந்தால் உரிய தனிநபர் பாதுகாப்பு செட்டிங்குகளை பயன்படுத்துங்கள். வெளிநபர்கள் பார்க்காத வகையில் மாற்றுங்கள்.
உங்கள் பெயரில் வேறு போலியான பக்கங்கள் தொடங்கப்பட்டால் அது குறித்து சமூக வலைத்தள சேவை நிறுவனத்துக்கும், உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்களது சுற்றுலா மற்றும் பயண திட்டங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம். சிலர் பாய் பாய் என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்காமல், வீட்டிலிருந்து கிளம்பவே மாட்டார்கள்.
ரயிலில் புறப்படுகிறேன், விமானத்தில் இங்கிருந்து இங்கே பயணிக்கிறேன் என்பதற்கான கூகுள் மேப்களோடு தகவல்களை பதிவிட்டுவிட்டு கிளம்புவது, பை பை சென்னை என பதிவிடுவது போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
அவ்வாறு நீங்கள் சமூக வலைத்தளம் மூலம் வெளியூர் செல்வதை பதிவிட்டுச் சென்றால், அதனைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், உங்கள் மின்னஞ்சல் மூலமாக, அல்லது வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்து, அதிலிருக்கும் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கு அல்லது வாட்ஸ்ஆப்பில் இருக்கும் உங்கள் நண்பர்களின் எண்ணுக்கு, நீங்கள் வெளியூரில் ஏதேனும் விபத்தில் அல்லது அபாயத்தில் சிக்கியிருப்பதாக நீங்கள் சொல்வதைப் போலக் கூறி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடலாம். எனவே, அதற்கான வாய்ப்பை உண்டாக்காதீர்கள்.
உங்கள் செல்போனில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும் சேவைகளை எப்போதும் அணைத்து வைத்திருங்கள்.
உறுதி செய்யப்படாத எந்த செயலியையும் செல்போனில் பதிவேற்றம் செய்யாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை உறுதி செய்யாமல், வேறு யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.