
ஒரு செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ் மூலம் பல லட்சத்தை மோசடி செய்ய முடியுமா என்று பலரும் நினைக்கலாம். முடியும் என்கிறது சைபர் குற்றப் பின்னணி தரவுகள்.
மோசடிகள் பலவிதம். அதில் ஒன்றுதான், அப்பாவி மக்களுக்கு செல்போனில் வங்கியிலிருந்து அனுப்புவது போன்று காணப்படும் போலி எஸ்எம்எஸ். மோசடியாளர்கள், இதுபோன்ற எஸ்எம்எஸ்களை அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அந்த எஸ்எம்எஸில், தங்களின் வங்கிக் கணக்கில் ஒரு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கும்.
உண்மையில், அப்படி ஒரு தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை யாராவது சோதிக்க வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, அந்த செல்போனை ஹேக் செய்து பணம் திருடும் கும்பலும் வந்துவிட்டது. ஆனால், அந்த அளவுக்கு வளராத மோசடி கும்பல்கள், முதலில் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு பிறகு அந்த எண்ணைத் தொடர்புகொண்டு, தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி, அந்த பணத்தை திரும்ப அனுப்பச் சொல்லுவார்கள்.
வங்கிக் கணக்கை சரிபார்க்காமல், சிலர் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி பணத்தை திருப்பி அனுப்புவார்கள். அதன்பிறகுதான், உண்மையாகவே, அப்படி ஒரு பணம் வங்கிக்கு வந்திருக்காது என்று தெரியும்.
இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
வங்கிக் கணக்குகளை அதிகாரப்பூர்வ வங்கி இணையதளம் அல்லது செயலிகள் மூலம் மட்டும் சரிபார்க்கவும்.
எஸ்எம்எஸ் மூலம் வரும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டாம்.
பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தாலும், உடனடியாக வந்திருக்கிறதா என்பதை வேறு வழிகளில் உறுதி செய்யுங்கள்.
எக்காரணம் கொண்டும், வங்கியிலிருந்து அல்லது தெரியாத நபர்கள் சொல்கிறார்கள் என்று பணத்தை திரும்ப அனுப்ப வேண்டாம். உண்மையில் பணம் வந்திருந்தாலும் கூட திரும்ப அனுப்புவதற்கு செல்போன் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம்
நேராக வங்கிக் கிளைக்குச் சென்று, தகவல்களை உறுதி செய்துகொண்டு, வங்கி மூலம் பணத்தை திரும்ப செலுத்துவது நல்லது.
எஸ்எம்எஸ் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அதிலிருக்கும் எண்ணை தொடர்புகொள்ளவும் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.